முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விராலிமலை தொகுதியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் விஜயபாஸ்கர், அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அந்தக் காலகட்டத்தில், அவரது சட்டபூர்வ வருமானத்தைவிட அதிகமாக ரூ.35.79 கோடி மதிப்பிலான சொத்துகளை சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை. அவரது சார்பில் வழக்குரைஞர்கள் மட்டும் நீதிமன்றத்தில் பதிலளித்தனர்.
வழக்கின் தற்போதைய நிலை மற்றும் மற்ற விவரங்களை பரிசீலித்த நீதிபதி வி. வெங்கடேச பெருமாள், விசாரணையை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.