திமுக மூத்த தலைவரும், அமைச்சருமான துரைமுருகன் மீது, கடந்த 1996–2001 ஆண்டு நடைபெற்ற திமுக ஆட்சி காலத்தில், அவரது வருமானத்தை விட அதிகமாக சொத்துகள் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.
இந்த வழக்குத் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் பெயரும் இடப்பெற்றது. இந்த வழக்கு விசாரணை வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அதன் படி கடந்த 2007ம் ஆண்டு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை குற்றமின்றி விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து, 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. அதாவது, "வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவிதித்ததை ரத்து செய்து, அமைச்சர் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினருக்கு எதிரான குற்றசாட்டுகள் பதிவு செய்து சாட்சி விசாரணையை தொடங்கி வழக்கை ஆறு மாதங்களில் விசாரித்து முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.