காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் ஒருபகுதியாக, பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தவும், அட்டாரி-வாகா எல்லை மூடவும் இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக கர்நாடக மந்திரிசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில், "பயங்கரவாத தாக்குதலை கண்டித்து மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசாங்கத்திற்கு எங்கள் ஆதரவை நாங்கள் வெளிப்படுத்தினோம். மத்திய அரசின் உளவுத்துறை தோல்வியடைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், தொடர்ந்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், "நாட்டின் ஒருமைப்பாடு மிகவும் முக்கியமானது என்பதால் நாங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்கிறோம் என்றும், சிலர் இந்த விவகாரத்தை அரசியலாக்க முயற்சிக்கின்றனர் என்றும், நாம் அனைவரும் அமைதியைப் பேண வேண்டுமெனவும் இதை யாரும் அரசியலாக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.