பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு, திமுக எம்பி திருச்சி சிவா கூறியதாவது:-
'காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளாக சென்றவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 17 பேர் காயம் காயம் அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள சூழலில், இன்றைக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமிஷ் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர், நிதி அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்றார்கள்' என்று தெரிவித்தார்.
அத்துடன், 'காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர் என்றும், பஹல்காம் தாக்குதல் குறித்து அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய கருத்துகளையும், கண்டனங்களையும் தெரிவித்ததாகவும், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்ததோடு, தனது மனவேதனையையும் தெரிவித்தார் என்று கூறினார்.
மேலும், நம் ஜனநாயக நாட்டில் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு இடம் கொடுக்கக்கூடாது எனவும், பொது மக்கள் கொலை செய்யப்படுகின்ற நிலை தொடரக்கூடாது எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது நம் கடமை எனவும், அந்த வகையில், இதுபோன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை வெறும் வார்த்தைகளால் கண்டிப்பதோடு நிறுத்திவிடாமல், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக மத்திய அரசு மேற்கொள்கின்ற எல்லா நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடும், தமிழ்நாடு மக்களும் துணை நிற்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.