மே 4ல் 'அக்னி நட்சத்திரம்'... வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்?
Dinamaalai April 28, 2025 01:48 PM

மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில், அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் உக்கிரம் எப்படி இருக்குமோ? என்று பொதுமக்கள் தங்களது கவலையைத் தெரிவித்து வருகின்றனார். வரும் மே மாதம் 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்க உள்ள நிலையில், 25 நாட்களுக்கு நீடிக்கும். 

இந்நிலையில் இந்த வருடம் அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் உக்கிரம் எப்படி இருக்கும்? என்பது குறித்து வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் மே 4ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான 25 நாட்களுக்கு 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்திரி வெயில்' காலம் கணக்கிடப்பட்டு வருகிறது. 

பொதுவாக கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும். நடப்பாண்டில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில் மே 1ம் தேதியில் இருந்தே பல இடங்களில் வெயிலின் அளவு அதிகரிக்கத் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், 'லா-நினோ மற்றும் ஐ.ஓ.டி. என்று கூறப்படும் கடல் அமைப்புகள் சமநிலையில் இருப்பதால், கடல் சார்ந்த அலைவுகள் முற்றிலுமாக வலுவிழந்து, மழைக்கான சாதகமான சூழல் எதுவும் ஏற்படாத நிலை இருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் வெப்பம் சற்று உயர்ந்தே காணப்படும். இருப்பினும் வெப்ப அலை வீசும் அளவுக்கு இருக்காது என்பது ஆறுதல் வார்த்தையாக இருந்தாலும், வறண்ட காற்று மற்றும் அதிக ஈரப்பதத்தால் உணரும் வெப்பநிலையின் தாக்கம் இருக்கும்' என்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.