5 மாத கர்ப்பிணி பெண் மர்ம மரணம்... போலீசார் விசாரணை!
Dinamaalai May 15, 2025 02:48 PM

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே 5 மாத கர்ப்பிணி பெண், மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள மஞ்சளை ஊராட்சிக்கு உட்பட்ட ஏர்கோல்பட்டியைச் சேர்ந்தவர் ஏழுமலை. கூலித்தொழிலாளியான இவரது மனைவி தனலட்சுமி (23). இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், தனலட்சுமி 5 மாத கர்ப்பமாக இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனலட்சுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தினர் அவரை மீட்டு பெரும்பாலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மேச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது தனலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இது குறித்து ஏரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், தனலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏழுமலையை 2வது திருமணம் செய்துக் கொண்டதும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார், தனலட்சுமியின் மரணத்தை மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 5 மாத கர்ப்பிணி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.