வீடு புகுந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு... விசிக நிர்வாகி கைது!
Dinamaalai May 15, 2025 08:48 PM

சென்னையில் வீடு புகுந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் விசிக தொழிற்சங்க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ரமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 19 வயதுடைய ரமா சென்னையில் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு பட்டப் படிப்பு படித்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த போது, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சென்னை துறைமுகம் மற்றும் கப்பற்கூட தொழிலாளர் விடுதலை முன்னணி தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் நன்மாறன் (63) என்பவர் அங்கு சென்றுள்ளார்.

அவர் திடீரென ரமாவின் வீட்டுக்குள் நுழைந்து ரமாவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். நன்மாறனின் செயலால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி வெளியே ஓடியுள்ளார். 

இது குறித்து தனது பெற்றோரிடம் மாணவி அழுதபடி தெரிவித்த நிலையில், அவர்கள் இது தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து நன்மாறனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.