பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதரின் விவகாரம் மீண்டும் ஒருமுறை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமாவின் முதல் கணவர் குலாம் ஹைதர் வெளியிட்டுள்ள வீடியோவில், தன் மனைவி மற்றும் குழந்தைகளை பாகிஸ்தானுக்கு நாடு கடத்தக் கோரி வலியுறுத்தியுள்ளார். மேலும், சீமா கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுடனான அனைத்து தொடர்புகளிலும் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில், சீமா ஹைதர் மீண்டும் விவாதத்தின் மையமாகி உள்ளார். சீமாவின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் குலாம் ஹைதர் வலியுறுத்தினார்.
அதேவேளை, வழக்கறிஞர் ஏ.பி. சிங்கும் நாட்டின் எதிரியாக அறிவிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். “சீமா மற்றும் ஏ.பி. சிங் இருவரும் இந்திய தேசிய பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” எனக் கூறினார் குலாம். மேலும், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் பெரிய அளவில் சதித்திட்டங்கள் நிகழலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
குலாம் தனது குழந்தைகளை மீண்டும் பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். “சீமா இன்னும் என்னுடைய மனைவியே, நாங்கள் விவாகரத்து பெறவில்லை. இப்போது தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது. சட்டவிரோதமாக இந்தியாவில் வாழும் சீமாவும், அவளுடைய ஆதரவாளர்களும் தங்கள் செயல்களுக்கு தக்க தண்டனை பெற நேரிடும்,” என்று அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், சீமா ஹைதர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோக்களில், தன்னை இந்தியாவின் மருமகள் என விவரித்து, இந்தியாவில் தங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் மத்தியில் சீமா ஹைதரின் நிலை மற்றும் இந்திய அரசு எடுக்கும் முடிவுகள் குறித்து மிகுந்த ஆர்வம் நிலவுகிறது.