தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் காங்கேயர்டவுன்ஷிப் பகுதியில் வசித்து வருபவர் சம்பத். இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுடைய மகன் லோக கணேஷ் . இவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். தந்தை சம்பத் உயிரிழந்து விட்டதால் தாயார் தமிழரசி பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
லோக கணேசுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் என்பதால் தனது பாட்டி வீடான பூதலூர் அருகே உள்ள விண்ணமங்கலம் தெற்கு தெருவிற்கு தனது தாய் தமிழரசியுடன் சென்றிருந்தார். இவர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு குளிப்பதற்காக லோக கணேஷ் குளியலறைக்கு சென்று மின்விளக்கு சுவிட்சை போட்டார்.
அப்போது அவரை திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவன் லோக கணேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். பிறந்தநாளில் பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.