மனிதன் எப்பவுமே தன்னோட திறமையை எண்ணிப் பார்ப்பதில்லை. அடுத்தவனுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கிறான். அதே போல செய்து கோட்டையை விடுகிறான். பல இன்னல்களுக்கு ஆளாகி கடைசியில் அடிபட்டு மிதிபட்டு அல்லல்பட்டு திருந்துகிறான்.
மனித இனம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிற விஷயம் இதுதான். அவன் பணம் சம்பாதிப்பதற்காக தன் ஆரோக்கியத்தை தியாகம் செய்கிறான். பின்னர் அவன் தனது ஆரோக்கியத்தை மீட்டெடுக்க பணத்தை தியாகம் செய்கிறான். பின்னர் அவன் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் கவலைப்படுவதால் அவன் நிகழ்காலத்தை அனுபவிக்கவில்லை. இதன் விளைவாக அவன் நிகழ்காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ வாழவில்லை. அவன் ஒருபோதும் இறக்கப் போவதில்லை என்பது போல் வாழ்கிறான். பின்னர் உண்மையில் வாழாமலேயே இறந்து விடுகிறான்.
இவ்ளோ பெரிய உலகத்துல வாழ வழி தெரியாமல் பணம் இருந்தும் நடைபிணமாக வாழ்வது ஏன்? மனிதன் என்பவன் ஒரு புரியாத புதிரா? உலக உயிரினங்களிலேயே அவன் தான் மகத்தானவன். மேன்மையானவன். ஆறறிவு படைத்த பெரிய அறிவுஜீவி என்றெல்லாம் சொல்கிறார்கள். சில நேரங்களில் சில விஷயங்களில் மிருகத்தை விட கேவலமான செயல்களில் ஈடுபட்டு விடுகிறான். கூட இருந்தே குழி பறிக்கிறான். முதுகில் குத்துகிறான். கள்ளம் கபடம் உள்ளுக்குள் வைத்து நாடகம் ஆடுகிறான்.
அப்படின்னா கடைசியில் நான் தான் பெரியவன் என்று மார்தட்டி ஆணவம் தலைக்கேறி கடைசியில் இறந்தே போகிறான். வாழும்போதே வாழ்க்கைக்கு விடை தேடாதவன் மாண்டு என்ன செய்யப் போகிறான்? தன்னம்பிக்கையே வெற்றி என்பதைப் புரிந்து கொண்டு எண்ணிய காரியத்தைத் திறம்படச் செய்ய வேண்டும். அதுதான் உன்னை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும்.