பாகிஸ்தானின் குண்டுவெடிப்பு சம்பவத்தில், 07 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் தெற்கு வாரிஸ்தான் மாவட்டம் வனா கிராமத்தில் அமைதி பேச்சுவார்த்தை குழு அலுவலகம் உள்ளது.
இங்கு கிராமங்களுக்கு இடையேயான பிரச்சினை, உள்ளூர் பிரச்சினை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த அலுவலகத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொள்வர்.
இந்நிலையில், இந்த அலுவலகத்தில் இன்று காலை 20-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்துள்ளனர். அப்போது அந்த அலுவலகத்தில், திடீரென குண்டு வெடித்த்துள்ளது. இதில், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 07 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 09 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.