பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மீண்டும் உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகிவருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானுடன் போர் தொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவரை பா.ஜ.க. தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து இதற்குசித்தராமையா, போர் தீர்வாகாது என்று கூறியதாகவும், தவிர்க்க முடியாத சூழலில் போர் வரலாம் என்று கூறியதாகவும் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கியுள்ளார். மத்திய அரசைக் கண்டித்து பெலகாவியில் காங்கிரஸ் சார்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டத்தில் சித்தராமையா கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த கூட்டத்தில் பெண்கள் சிலர் புகுந்து கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அத்துடன், காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், சித்தராமையாவுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
கூட்டத்தின் இதைப் பார்த்து கோபமடைந்த முதலமைச்சர் சித்தராமையா, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரியை மேடைக்கு அழைத்து கண்டித்தார். அப்போது அவர் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? என்று கேட்டு அந்த அதிகாரியை அடிப்பதற்கு கை ஓங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. பொது மேடையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நடந்து கொண்ட விதம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.