தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “குமரிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் மழைக்கு சாதகமான கடல்காற்று தமிழகம் நோக்கி வீசுவதால் இன்று ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதற்கிடையே சென்னை புகா் பகுதிகளில் திங்கள்கிழமை லேசான மழை பெய்தது. ஏப்.29-ஆம் தேதியும் சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நேற்று காலை வரை தமிழகத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூா்), மணமேல்குடி (புதுக்கோட்டை) - தலா 50 மி.மீ, உத்தமபாளையம் (தேனி), மஞ்சளாறு (தேனி), கழுகுமலை (தூத்துக்குடி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூா்) - தலா 40 மி.மீ. மழை பதிவானது.
4 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் திங்கள்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக பரமத்திவேலூா் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் ஈரோடு - 101.48, வேலூா் - 101.12, திருச்சி - 100.58 டிகிரி என மொத்தம் 4 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
மேலும் ஏப்.29 முதல் மே 2ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.