புரதத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வே நமக்கு இப்போது தான் வரத் தொடங்கியிருக்கிறது என்று சொல்லலாம். ஆனாலும் ஒரு நாளைக்குப் போதிய அளவு புரதம் எடுக்காமல் குறைபாட்டைச் சந்திக்கிறோம்.
அதிலும் குறிப்பாக அசைவம் சாப்பிடுகிறவர்களைக் காட்டிலும் சைவம் சாப்பிடுகிறவர்களுக்கு புரதச்சத்து குறைபாடு அதிகமாக ஏற்படுகிறது. ஏனெனில் சைவ உணவுகளில் புரதங்கள் மிகக் குறைவு. வெஜிடேரியன்களின் அதிகபட்ச புரத உணவு என்றால் அது இந்த பனீர் தான்.
பனீரில் கலப்படம் செய்யப்படுவது அதிகமாகிறது. இதை சாப்பிடுவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அதிகமாக உடல் நலப் பாதிப்புகள் உண்டாகின்றன.
குறிப்பாக அஜீரணக் கோளாறு, அசிடிட்டி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கு கடும் வயிற்று வலியும் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த கலப்படப் பனீரை எப்படி கண்டுபிடிப்பது? வாங்க பார்க்கலாம்.
1. கொதிக்க வைத்தல்
ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விட்டு அதில் ஒரு சிறிய பனீர் துண்டை போட்டு சில நிமிடங்கள் வரை கொதிக்க விடுங்கள்.
அப்படி கொதித்து வரும்போது பனீர் மென்மையாக இருந்தால் அது ஒரிஜினல். ரப்பர் போல ஆனாலோ அல்லது உடைந்தாலோ அது போலியாக இருக்கலாம்.
2. தொட்டுப் பார்த்தல்
ஒரு சிறிய துண்டு பனீரை எடுத்து விரல்களுக்கு இடையில் வைத்து நன்கு தேய்க்க வேண்டும்.
அப்படி தேய்க்கும்போது கலப்படமில்லாத ஃபிரஷ்ஷான பனீராக இருந்தால் அது உதிரும். போலியாக இருந்தால் அது விரல்களுக்கு இடையில் வழுக்கிக் கொண்டு போகும்.
3. மணமும் சுவையும்
ஒரிஜினல் பனீராக இருந்தால் அது எப்போதும் ஃபிரஷ்ஷான மணம் வீசும்.
பாலின் மணமும் சுவையும் அதிலிருந்து வரும். ஆனால் போலி பனீரில் எந்தவித வாசனையும் இருக்காது. வித்தியாசமான கொழுப்புச் சுவை மட்டும் அதிலிருந்து கிடைக்கும்.
4. அயோடின் கரைசல் சோதனை
இந்த சோதனை மற்ற எல்லா சோதனைகளை விடவும் மிக எளிமையானது.
பனீரில் ஒரு துளி அயோடினைத் தடவினால் உடனே அந்த இடம் நீலம் அல்லது கருப்பு நிறமாக மாறினால் அதில் ஸ்டார்ச் அதிகமாகக் கலந்து இருக்கிறது என்று அர்த்தம். அது கலப்பட பனீர் என்று அர்த்தம்.
போலியான பனீரில் பாலுக்கு பதிலாக சில மலிவான பொருள்கள் கலப்படம் செய்யப்படுகின்றன.
ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட கொழுப்பு வகைகள் குறிப்பாக பனை எண்ணெய் மற்றும் வனஸ்பதி ஆகியவை கலக்கப்படுகின்றன. இது உடல்பருமன், கொலஸ்டிரால் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
ஸ்டார்ச் மாவுகள் அதிகமாக சேர்க்கப்படுகின்றன. இவற்றால் செரிமான ஆற்றலையும் பாதிக்கும். புரத உட்கொள்ளலையுயும் தடுக்கிறது.
சலவை சோடா மற்றும் சோப் கலக்கப்படுகின்றன - இவற்றால் சுடல் சுவர்களின் அரிப்பு, நாளடைவில் கல்லீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளும் ஏற்படும்.