பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல், பாகிஸ்தான் பதிலடி - என்ன நடக்கிறது? நேரலை
BBC Tamil May 07, 2025 06:48 PM
Getty Images

"பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று இந்தியா அறிவித்துள்ளது.

"பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்ட மற்றும் நடத்திய பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் எனும் துல்லிய தாக்குதலில், ஒன்பது இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டன" என இந்தியா கூறியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தளங்களின் மீது இலக்கு வைக்கப்படவில்லை எனவும் மிகவும் கவனத்துடன் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது. மேலும், இரு குழந்தைகள் உள்பட குறைந்தது 8 பேர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தார் கூறியுள்ளார். மேலும், இந்தத் தாக்குதலில் 35 பேர் காயமடைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அகமதுபூர் கிழக்கு நகரில் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், "ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் மேற்கொண்ட பதில் தாக்குதலில் மூன்று இந்திய பொது மக்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது" என்று ராய்ட்டர்ஸ் மற்றும் ஏ.எஃப்.பி செய்தி முகமைகள் கூறியுள்ளன.

Reuters

இந்திய அரசு தனது அறிக்கையில், "இந்த நடவடிக்கை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்துள்ளது. அங்கிருந்துதான் இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டன," என்று கூறியுள்ளது. மொத்தம் ஒன்பது இலக்குகள் குறிவைக்கப்பட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியதாக சமீப ட்வீட் ஒன்றில் கூறியுள்ளார். இந்தியாவுக்கு உரிய பதிலடி தரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் எல்லையில் பூஞ்ச்-ராஜௌரி பகுதியில் பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதலை நடத்தியதாக இந்தியா கூறுகிறது.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் ஜியோ டிவியில் பேசுகையில், இந்தியா பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறுவது பொய் என்றும் அவை மக்கள் வாழும் பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன என்றும் குற்றம்சாட்டினார்.

ஆனால், தற்போது வரை, எந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை பிபிசியால் சுயாதீனமான உறுதி செய்ய முடியவில்லை.

ஏப்ரல் 22ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. அந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது இந்தியாவின் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், "பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக" இந்திய ராணுவம் கூறுகிறது.

இந்திய ராணுவம் பதிவிட்ட ஒரு ட்வீட்டில், "ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச்-ராஜௌரி பகுதியில் உள்ள பீம்பர் காலியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக" தெரிவித்துள்ளது.

மேலும் அதில், "இந்திய ராணுவம் சரியான முறையில் பதிலடி கொடுத்து வருவதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் எதிர்வினை என்ன?

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் எதிர்வினையாற்றியுள்ளார். இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலளித்துப் பேசிய அவர், திருப்பித் தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று தெரிவித்தார்.

"எதிரி நாடு மிகவும் கோழைத்தனமாக பாகிஸ்தானின் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தியாவின் இந்தத் தாக்குதலை "போர்ச் செயல்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், "இந்தப் போர்ச் செயலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" என்று பதிவிட்டிருந்தார்.

பாகிஸ்தான் நாட்டு மக்கள் அனைவரும் பாகிஸ்தான் ராணுவத்திற்குத் துணை நிற்கிறார்கள், நாட்டின் மன உறுதி வலிமையாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதேநேரம், "ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தின் பிரிவு 51இல் குறிப்பிடப்பட்டுள்ள தற்காப்பு உரிமையின்படி, பாகிஸ்தான் தனக்கு விருப்பமான நேரத்தில் மற்றும் இடத்தில் இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Getty Images இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலளித்த ஷாபாஸ் ஷெரீஃப், பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை உள்ளது என்று கூறியுள்ளார். (கோப்புப் படம்)

"எதிரிகளை எப்படிக் கையாள வேண்டும் என்று பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் நன்றாகத் தெரியும். எதிரியின் தீய எண்ணங்கள் வெற்றி பெற ஒருபோதும் விடமாட்டோம்" என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்திருந்தார்.

பிபிசி உருதுவிடம் பேசியிருந்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப், "தீவிரவாதிகளின் மறைவிடங்களைக் குறி வைத்துள்ளதாக இந்தியா கூறுகிறது. சர்வதேச ஊடகத்துக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். அவை தீவிரவாத மறைவிடங்களா அல்லது பொதுமக்கள் வசிப்பிடங்களா என்பதை இங்கு வந்து அனைத்து பக்கங்களிலும் பாருங்கள்.

தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் இரண்டு மசூதிகளும் அடங்கும். எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துல்லியமான சமீபத்திய தரவுகள் தற்போது என்னிடம் இல்லை. தாக்குதல் நடந்ததாக உறுதி செய்யப்படுள்ள ஏழு இடங்களில் இரண்டு காஷ்மீரிலும் ஐந்து பாகிஸ்தானிலும் உள்ளன. இவை அனைத்துமே பொது மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள்" என்று தெரிவித்தார்.

இந்தியாவின் தாக்குதல்கள் குறித்து பிபிசியிடம் பேசிய பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் அதுல்லா தரார், "அவர்கள் எங்கள் எல்லையைத் தாண்டியுள்ளனர்" என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறிய கருத்துகளை தரார் மீண்டும் வலியுறுத்தினார். அவர், "இந்தத் தாக்குதல் நியாயமற்றது. இது முற்றிலும் திட்டமிடப்படாத தாக்குதல். நாங்கள் இதற்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்போம். எங்கள் பதில் தாக்குதல் வானிலும் நிலத்திலும் தொடரும்" என்று தெரிவித்தார்.

தாக்குதலை நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன? Getty Images

தாக்குதல் நடந்த இடத்தின் தற்போதைய நிலைமை குறித்து நேரில் கண்ட சிலர் பிபிசியிடம் பேசுகையில், "நாங்கள் எங்கள் வீடுகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஏற்பட்ட வெடிச்சத்தம் எங்களை உலுக்கியது. இப்போது எங்கள் குடும்பங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வெளியே இருக்கிறோம். பாதுகாப்பான இடம் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்," என்று முசாபராபாத்தில் வசிக்கும் ஷாநவாஸ் கூறினார்.

தாக்குதல்கள் மேலும் தொடரக்கூடும் என்று அங்குள்ள பலரும் அஞ்சுகிறார்கள்.

"முதல் குண்டுவெடிப்பு என் வீட்டை உலுக்கியபோது நான் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்," என்று தாக்குதல் நடந்த பகுதியிலுள்ள பிலால் மசூதியில் வசிக்கும் முகமது வாஹீத் கூறினார்.

"நான் உடனடியாக வெளியே ஓடிச் சென்றபோது, மற்றவர்களும் அதே நிலையில் இருப்பதைக் கண்டேன். மேலும் மூன்று ஏவுகணைகள் வந்து விழுந்தபோது, அனைவரையும் பீதி மற்றும் குழப்பம் ஆட்கொண்டிருந்தது. எங்களால் நிலைமையைப் புரிந்துகொள்ளவே முடியாமல் இருந்தோம்," என்று கூறினார் வாஹீத்.

மேலும், "டஜன் கணக்கான பெண்களும் ஆண்களும் காயமடைந்துள்ளனர். மக்கள் அவர்களை இங்கிருந்து சுமார் 25கி.மீ தொலைவிலுள்ள சி.எம்.ஹெச் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். நாங்கள் முசாபராபாத் நகருக்கு மிக அருகில் இருக்கிறோம். காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர்," என்று வஹீத் கூறுகிறார்.

தாக்குதல் குறித்து டிரம்ப் கூறியது என்ன? Getty Images

இந்நிலையில் இந்தத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான தாக்குதல்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இது அவமானகரமானது. இப்போதுதான் கேள்விப்பட்டோம் ஓவல் அலுவலகத்திற்குள் இப்போது வரும்போதுதான் தெரிய வந்தது," என்று தெரிவித்தார்.

மேலும், "கடந்த கால அனுபவங்களால், ஏதோ நடக்கப் போகிறது என மக்கள் அறிந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் நீண்ட காலமாக, பல தசாப்தங்களாக, நூற்றாண்டுகளாகப் போரிட்டு வருகின்றனர். இது விரைவில் முடிவுக்கு வருமென நம்புகிறேன்," என்று பதிலளித்தார்.

ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், "சர்வதேச எல்லையில் இந்தியாவின் ராணுவ தாக்குதல் குறித்து மிகவும் கவலை கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

மேலும், "முடிந்த வரை இரு நாட்டு ராணுவமும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று இரு நாடுகளுக்கும் பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுக்கிறார். மற்றொரு இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலுக்கான அபாயத்தை உலகம் தாங்காது" என்று தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.