பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நடத்திய தாக்குதல்கள் பற்றி எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து
BBC Tamil May 07, 2025 08:48 PM
Getty Images இந்தியாவின் தாக்குதல் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமூக ஊடகங்களில் "பாரத் மாதா கி ஜெய்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

"பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக" அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"மொத்தம் ஒன்பது இடங்கள் குறிவைக்கப்பட்டன" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுபுறம், இந்திய ராணுவம் பாகிஸ்தானை ஏழு இடங்களில் தாக்கியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்தியாவில் அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாஜக தலைவர்கள் என்ன கூறுகிறார்கள்?

இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து "நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டிருந்தார்.

ராணுவ ஏடிஜிபிஐ மற்றொரு பதிவில், "பூஞ்ச்-ராஜௌரி பகுதியின் பீம்பர் கலியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம் பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Getty Images உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "ஜெய் ஹிந்த். ஜெய் ஹிந்த் கி சேனா" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒரு பதிவில், "பிரஹராய சன்னிஹிதா, ஜெய பிரதிஷ்கிதா (தாக்குதலுக்குத் தயார், வெற்றி பெறப் பயிற்சி பெற்றுள்ளோம்)" என்று எழுதியிருந்தார்.

இந்தியாவின் தாக்குதல் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமூக ஊடகங்களில் "பாரத் மாதா கி ஜெய்" என்று எழுதினார்.

இதற்கிடையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "ஜெய் ஹிந்த். ஜெய் ஹிந்த் கி சேனா" என்று பதிவிட்டுள்ளார்.

Getty Images வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் "தீவிரவாத பிரச்னைக்கு உலகம் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையைக் காட்ட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ராணுவ நடவடிக்கை குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், "தீவிரவாத பிரச்னைக்கு உலகம் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையைக் காட்ட வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

இந்திய ராணுவத்தின் நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், "பாரத் மாதா கி ஜெய். ஜெய் ஹிந்த் கி ஆர்மி" என்று பதிவிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாஜக தலைவர் அல்தாஃப் தாக்கூர், ராணுவத்தின் நடவடிக்கை குறித்து ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசுகையில், "ஆபரேஷன் சிந்தூர் இன்று மேற்கொள்ளப்பட்டது, இதில் 9 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது ஒரு நல்ல நடவடிக்கை.

ஆபரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர இந்தியாவும் இந்திய ராணுவமும் தீர்மானித்துள்ள வழி, அது முடியும் வரை செயல்படுத்தப்பட வேண்டும். இந்தியா பெரிய நடவடிக்கையை எடுத்து தீவிரவாதிகளை ஒழிக்கும் என்று நம்புகிறோம்" என்று பேசியிருந்தார்.

ஜம்மு-காஷ்மீரில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் ஜி.எம்.ஷாஹீன், "இது சரியான நேரத்தில் சரியான முடிவு. சரியான இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன" என்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ன கூறுகிறார்கள்? Getty Images இந்தியாவின் தாக்குதல் குறித்துப் பெருமைப்படுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள செய்தியில், "பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளிவரும் அனைத்து வகையான தீவிரவாதத்திற்கும் எதிராக இந்தியா உறுதியான தேசிய கொள்கையைக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத தளங்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவது குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "நமது ராணுவத்தை நினைத்துப் பெருமைப்படுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

Getty Images

ராணுவ நடவடிக்கை குறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதத்தின் அனைத்து ஆதாரங்களையும் முற்றிலுமாக அகற்றுவது இந்தியாவின் உறுதியான கொள்கையாக இருக்க வேண்டும்" என்றார்.

மேலும் "இது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான நேரம். ஏப்ரல் 22 இரவிலிருந்து, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக தேசத்தின் நடவடிக்கையில் அரசுக்கு எங்கள் முழு ஆதரவும் இருக்கும் என்பதை இந்திய தேசிய காங்கிரஸ் தெளிவுபடுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி நமது படைகளுடன் உறுதியாக நிற்கிறது" என்று பதிவிட்டிருந்தார்.

ANI ஏஐஎம்ஐஎம் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி தனது எக்ஸ் பக்கத்தில், "இன்னொரு பஹல்காம் இல்லாத அளவுக்கு பாகிஸ்தானுக்கு கடுமையான பாடம் கற்பிக்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.

இதற்கிடையில், ஏஐஎம்ஐஎம் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி தனது எக்ஸ் பக்கத்தில், "பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தளங்கள் மீது நமது பாதுகாப்புப் படைகள் குறிவைத்து தாக்குதல் நடத்துவதை நான் வரவேற்கிறேன். இன்னொரு பஹல்காம் இல்லாத அளவுக்கு பாகிஸ்தானுக்கு கடுமையான பாடம் கற்பிக்க வேண்டும். பாகிஸ்தானின் தீவிரவாத கட்டமைப்பை முற்றிலுமாக அழிக்க வேண்டும். ஜெய் ஹிந்த்!" என்று குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தனது பதிவில், "தீவிரவாதிகளின் மறைவிடங்கள் துல்லியமாகக் குறிவைக்கப்பட்டுள்ளன. இதைத்தான் நான், கடுமையாக தாக்க வேண்டும், புத்திசாலித்தனமாக தாக்க வேண்டும் என்று கடந்த வாரம் பரிந்துரைத்தேன். இதை நான் பாராட்டுகிறேன், ராணுவத்துடன் உறுதியாக நிற்கிறேன்" என்றார்.

மேலும் அவர் , "நாங்கள் எங்கள் பங்கைச் செய்துள்ளோம், எங்களைப் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த நேரத்தில், இந்த மோதல் கட்டுப்பாட்டை மீறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அனைவரும் புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும்" என்றும் தனது பதிவில் சுட்டிக்காட்டினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, பாதுகாப்பு அமைச்சகத்தின் பதிவைப் பகிர்ந்து "ஜெய் ஹிந்த்" என்று எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் டோட்டாசரா கூறுகையில், "பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் கொன்றதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரினர். இன்று இந்தியர்களாகிய நாம் அனைவரும் ராணுவத்தின் இந்த நடவடிக்கையை ஆதரிக்கிறோம், இதுபோன்ற சந்தர்ப்பத்தில், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

Getty Images சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, "ஒவ்வொரு நெற்றியிலும் உள்ள குங்குமத்தை அழிக்க விடமாட்டோம்" என்று பதிவிட்டிருந்தார்.

சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி இந்த விவகாரம் குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "ஒவ்வொரு நெற்றியிலும் உள்ள குங்குமத்தை அழிக்க விடமாட்டோம். அதை அழித்தால் நாங்கள் தகுந்த பதிலடி கொடுப்போம். ஜெய் ஜவான்! ஜெய் இந்துஸ்தான்! ஜெய் ஹிந்த்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்திய ராணுவம் மற்றும் நமது துணிச்சலான வீரர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். தீவிரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில், 140 கோடி இந்தியர்களும் இந்திய ராணுவத்துடன் நிற்கிறார்கள். இந்திய ராணுவத்தின் தைரியம் ஒவ்வொரு குடிமகனின் நம்பிக்கை. தீவிரவாதத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்று பதிவிட்டிருந்தார்.

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பிகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தனது சமூக ஊடக பதிவில், "ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்! தீவிரவாதமோ, பிரிவினைவாதமோ இருக்கக் கூடாது. நமது துணிச்சலான வீரர்கள் மற்றும் இந்திய ராணுவத்தை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

Getty Images இந்தியாவுக்கு உரிய பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் உண்டு என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அப்போதிருந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தொடர்கிறது, இரு நாடுகளும் ஒருவருக்கு எதிராக ஒருவர் எனப் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

தற்போது, இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷரிஃப் எதிர்வினையாற்றியுள்ளார். இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலளித்துப் பேசிய அவர், திருப்பித் தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று தெரிவித்தார்.

"எதிரி நாடு மிகவும் கோழைத்தனமாக பாகிஸ்தானின் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பிபிசி உருதுவிடம் பேசியிருந்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா அசீப், "தீவிரவாதிகளின் மறைவிடங்களை குறி வைத்துள்ளதாக இந்தியா கூறுகிறது. இங்கு வந்து அனைத்து பக்கங்களிலும் பாருங்கள், அவை தீவிரவாத மறைவிடங்களா அல்லது பொதுமக்கள் வசிப்பிடங்களா என்று பார்வையிடுவதற்கு சர்வதேச ஊடகத்துக்கு நான் அழைப்பு விடுகிறேன். இவை அனைத்துமே பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள்" என்று தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.