"பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று இந்தியா இன்று அதிகாலை அறிவித்தது.
"பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்ட மற்றும் நடத்திய பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் எனும் துல்லிய தாக்குதலில், ஒன்பது இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டன" என இந்தியா கூறியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாகவும் 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும், 46 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய ராணுவத்தின் தாக்குதலில் பொது மக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று இந்திய அரசு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.
இதன் சமீபத்திய தகவல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
'அப்பாவி மக்களை கொன்றவர்களையே கொன்றோம்'பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் 'துல்லியமாகவும் விழிப்புடனும் கூர் உணர்வுடனும்' நடவடிக்கை எடுத்திருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
எல்லைச் சாலைகள் அமைப்பின் (BRO) நிறுவன நாளையொட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோதியின் வழிகாட்டுதலின்படி, இந்திய ராணுவம் இந்தியர்கள் அனைவரையும் பெருமையடைய வைத்துள்ளது" என்றார்.
இந்திய ராணுவம் புதிய வரலாற்றை படைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
ராஜ்நாத் சிங் கூறுகையில், "துல்லியமாகவும் விழிப்புடனும் கூர் உணர்வுடனும் இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்கூட்டியே திட்டமிடப்பட்டு துல்லியமாக இலக்குகளை தாக்கியுள்ளோம். எந்தவொரு குடிமக்கள் பகுதிகளும் பாதிக்காத வண்ணம் இத்தாக்குதல் நடத்தப்படுவதை உறுதி செய்தோம்," என்றார்.
ராமாயணத்தை மேற்கோளிட்டு பேசிய அவர், அனுமனின் கொள்கைகளை இந்திய ராணுவம் பின்பற்றுவதாக தெரிவித்தார்.
மேலும் அவர், "அப்பாவி மக்களை கொன்றவர்களை மட்டுமே நாங்கள் கொன்றோம்." என்றார்.
அமித் ஷா ஆலோசனைஇந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எல்லை மாநில முதலமைச்சர்களைச் சந்தித்து பேசினார்.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் எல்லையோர மாநில முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், உத்தராகண்ட், உத்தர பிரதேசம், பிகார், சிக்கிம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின் விவரங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை.
ஆனால், பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்த சில மணி நேரங்களில் இந்த சந்திப்பு நடந்தது.
இந்தியாவின் காஷ்மீரில் தாங்தாரில் வசிக்கும் தஸ்வீர் அஹ்மத் கூறுகையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை தாண்டிய தாக்குதலில் தனது வீடு உட்பட குறைந்தது ஆறு வீடுகள் அழிக்கப்பட்டதாக கூறினார்.
அவரது குடும்பம் உயிர் பிழைத்ததாகவும், ஆனால் அவர்களது உடைமைகள் எதையும் காப்பாற்ற முடியவில்லை என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"பாதுகாப்பான பகுதி என்று நாங்கள் நினைத்த இடத்துக்கு ஓடினோம், ஆனால் அதுவும் தீயில் சிக்கியது" என்று பிபிசியிடம் கூறிய அஹ்மத் ,
"உணவு, உடைகள் மற்றும் எங்கள் தலைக்கு மேல் கூரை என, எங்களிடம் எதுவும் இல்லை" என்று தெரிவித்தார்.
மேலும் எச்சரிக்கையின்றி தாக்குதல் நடந்ததாக அவர் கூறினார்.
"அந்த பகுதியில் முழுமையான அமைதி இருந்தது. திடீரென்று குழப்பம் ஏற்பட்டது . இவ்வாறு நடக்கப் போகிறது என யாருக்கும் தெரியவில்லை," என்றும் அஹ்மத் தெரிவித்தார்.
பிபிசியுடன் அவர் பகிர்ந்த வீடியோவில், ஒரு வீடு முழுவதும் தீக்கிரையாக்கப்பட்டிருப்பது காணப்பட்டது. அந்தக் காட்சிகளை எங்களால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சுமார் 550 விமானங்கள் ரத்துவான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் (கிட்டத்தட்ட) 550 திட்டமிடப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நிகழ்நேர விமான கண்காணிப்பு சேவையான Flightradar24 வழங்கிய தரவுகளின்படி, வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு திட்டமிடப்பட்ட பயணியர் விமானங்களில், பாகிஸ்தானில் 16% விமானங்களும், இந்தியாவில் 3% விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில், 135 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் 417 திட்டமிடப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று Flightradar24 தெரிவித்துள்ளது.
இதனிடையே, பயங்கரவாத முகாம்கள் குறித்த இந்தியாவின் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் மறுக்கிறது.
பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் தலைமையில் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் குழு (NSC) கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
தனது நாட்டில் பயங்கரவாத முகாம்கள் உள்ளன என்று இந்தியா கூறியதை நிராகரித்த பாகிஸ்தான், அக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என கூறியுள்ளது.
"22 ஏப்ரல் 2025க்குப் பிறகு, நம்பகமான, வெளிப்படையான மற்றும் நடுநிலையான விசாரணை நடைபெறுவதற்கு பாகிஸ்தான் நேர்மையான ஒரு யோசனையை முன்வைத்தது. அது துரதிர்ஷ்டவசமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'பயங்கரவாத முகாம்கள்' என்று கூறப்படும் இடங்களுக்கு சர்வதேச ஊடகங்கள் மே 6 ஆம் தேதியன்று பயணம் செய்ததாகவும், இன்று மேலும் பல ஊடகங்கள் வருகை தருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தியா தனது கூற்றுகளுக்கு எந்த ஆதாரத்தையும் வழங்காமல், 'தன் குறுகிய பார்வை கொண்ட அரசியல் நோக்கங்களைத் திருப்திபடுத்துவதற்காக அப்பாவி பொதுமக்களைத் தாக்கியுள்ளது' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஹாவல்பூரில் உள்ள சுப்ஹான் அல்லா மசூதியில் இந்தியா நடத்திய தாக்குதலில், ஐ.நாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் மற்றும் அவருடைய நெருங்கிய கூட்டாளிகள் நான்கு பேர் கொல்லப்பட்டதாக ஜெய்ஷ்-இ-முகமது தெரிவித்துள்ளது.
அவர் தலைமையில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, இறந்தவர்களில் அவரது மூத்த சகோதரியும் அவரது கணவரும், மசூத் அசாரின் மருமகனும் அவரது மனைவியும், ஒரு மருமகள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகளும் அடங்குவர்.
பிப்ரவரி 2019இல் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்களைக் கொன்ற தற்கொலைத் தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகமது நடத்தியது. இது இந்தியா, பாகிஸ்தானை போரின் விளிம்புக்குக் கொண்டு சென்றது.
இந்தத் தாக்குதலில் அசூத் அசாரின் நெருங்கிய உதவியாளர்கள் மூவரும் அவர்களில் ஒருவரின் தாயும் கொல்லப்பட்டதாக ஜெய்ஷ் இ முகமது குழு கூறியுள்ளது.
இந்தியாவின் உயர் தூதரக அதிகாரியை வரவழைத்து, இந்தியாவின் வான் தாக்குதல்களுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததாக பாகிஸ்தானின் வெளியுறவு துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அந்த அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பெண்கள், குழந்தைகள் உட்பட குடிமக்கள் பலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள் பாகிஸ்தானின் இறையாண்மை மீது நிகழ்த்தப்பட்ட தெளிவான விதிமீறல், சர்வதேச சட்டம், ஐ.நா. சாசனம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை நிர்வகிக்கும் மரபுகள் மீதான அப்பட்டமான மீறல் என்றும் தூதரக அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய "பொறுப்பற்ற" நடவடிக்கை பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை தீவிர அச்சுறுத்தலுக்கு உட்படுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அதிர்ஷ்டவசமாக நாங்கள் உயிர்தப்பினோம்'இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள முக்கிய மருத்துவமனைக்கு பிபிசி நேரில் சென்றது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் படைகளுக்கு இடையேயான தாக்குதலில் காயமடைந்த நான்கு பேர் இந்த மருத்துவமனைக்கு இன்று காலை அனுமதிக்கப்பட்டனர்.
இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையில் உள்ள உரியில் உள்ள தன் வீட்டின் முதல் தளத்தில் 18 வயதான மன்சூர் உறங்கிக் கொண்டிருந்தபோது, ஷெல் குண்டுகளின் சிதறல்கள் ஜன்னல் வழியாக நுழைந்து அவருடைய கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் தெரிவித்தார்.
அதே மருத்துவமனையில் படார்டின் நாய்க் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதன்கிழமை அதிகாலையில் சலாமாபாத்தில் உள்ள அவர்களின் வீட்டில் குண்டு தாக்கியதால் அவர்கள் காயமடைந்தனர்.
நாய்க் மற்றும் அவருடைய எட்டு வயது மகனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது, அவரின் சகோதரரின் மனைவிக்கு மார்புப்பகுதியில் ரத்தக்கட்டு ஏற்பட்டுள்ளது.
"எங்கள் வீடு எரிந்து நாசமாகிவிட்டது, அதிர்ஷ்டவசமாக நாங்கள் உயிர்தப்பினோம்," என நாய்க் தெரிவித்தார்.
'யாரும் போரை விரும்பவில்லை, ஆனால்..' - ஒமர் அப்துல்லாஇந்த பிராந்தியத்தில் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே போர் ஏற்பட வேண்டும் என யாரும் விரும்பவில்லை என்றும், ஆனால் பதற்றத்தைத் தணிப்பது பாகிஸ்தானின் பொறுப்பு என்றும் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் இந்தியாவின் வான் தாக்குதல்கள் குறித்து பேசிய அவர், கடந்த மாதம் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களுக்கு "தகுந்த பதிலடி" கொடுக்க இந்திய அரசு "சரியான வழியை" தேர்ந்தெடுத்திருப்பதாக தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்.22 அன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் தான் பொறுப்பு என இந்தியா கூறிய நிலையில், இந்தியாவின் குற்றச்சட்டை பாகிஸ்தான் மறுத்தது.
ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய ஒமர் அப்துல்லா, "பாகிஸ்தானில் ராணுவம் அல்லது குடிமக்கள் பகுதிகள் அல்லாமல் பயங்கரவாதிகளின் பதுங்கிடங்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டன, ஆனால் இந்தியாவில் குடிமக்கள் வசிக்கும் சில பகுதிகளிலும் பாகிஸ்தான் குண்டு வீசியுள்ளது" என்றார்.
இதுகுறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என ஒமர் அப்துல்லா தெரிவித்தார். தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கிராமங்களை விட்டு வெளியேறும் மக்கள்இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், பஞ்சாபின் சில கிராமங்களில் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
தங்களுடைய உடைமைகளை டிராக்டர் ட்ராலிகளில் ஏற்றிக்கொண்டு, எல்லையிலிருந்து தொலைவில் உள்ள கிராமங்கள் அல்லது தங்களின் உறவினர்கள் வீடுகளுக்கு செல்கின்றனர்.
எல்லையிலிருந்து வெளியேறும் சில குடும்பங்களிடம் பிபிசி பேசியது. பாதுகாப்பான இடங்களை நோக்கி தாங்கள் செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை பாதுகாக்க குடும்பத்தில் ஓரிரு பேர் வீட்டில் இருப்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தியா-பாகிஸ்தானுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள ஃபெரோஸ்பூர் மாவட்டத்தின் ஹுசைனிவாலா எல்லையில் சுமார் 12-14 கிராமங்கள் உள்ளன.
ஜுகே ஹஸாரா சிங் கிராமத்தை சேர்ந்த ஜீத் சிங் கூறுகையில், "இங்கு பயம் நிறைந்த சூழல் உள்ளது. இங்குள்ளவர்கள் தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு செல்கின்றனர்." என்றார்.
வயதான பெண்மணியான பஞ்சோ பாய் கூறுகையில், "நாங்கள் எங்கள் தானியங்களை எடுத்துக்கொண்டு மோகா மாவட்டத்துக்கு செல்கிறோம். இங்கு போர் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது, மேலும் பாகிஸ்தான் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாம்." என்றார்.
இந்திய அரசு தனது அறிக்கையில், "இந்த நடவடிக்கை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்துள்ளது. அங்கிருந்துதான் இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டன," என்று கூறியுள்ளது. மொத்தம் ஒன்பது இலக்குகள் குறிவைக்கப்பட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியதாக சமீப ட்வீட் ஒன்றில் கூறியுள்ளார். இந்தியாவுக்கு உரிய பதிலடி தரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் எல்லையில் பூஞ்ச்-ராஜௌரி பகுதியில் பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதலை நடத்தியதாக இந்தியா கூறுகிறது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் ஜியோ டிவியில் பேசுகையில், இந்தியா பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறுவது பொய் என்றும் அவை மக்கள் வாழும் பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன என்றும் குற்றம்சாட்டினார்.
ஆனால், தற்போது வரை, எந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
இந்நிலையில், "பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக" இந்திய ராணுவம் கூறுகிறது.
இந்திய ராணுவம் பதிவிட்ட ஒரு ட்வீட்டில், "ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச்-ராஜௌரி பகுதியில் உள்ள பீம்பர் காலியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக" தெரிவித்துள்ளது.
மேலும் அதில், "இந்திய ராணுவம் சரியான முறையில் பதிலடி கொடுத்து வருவதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இந்தியா எப்படி தாக்குதல் நடத்தியது?பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், "ஏப்ரல் 22ஆம் தேதி லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானால் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள், கொடூரமான தாக்குதலை பஹல்காமில் சுற்றுலா வந்திருந்த இந்திய குடும்பங்கள் மீது நடத்தியிருந்தன. அதில் அவர்கள் நேபாளத்தை சேர்ந்த ஒருவர் உள்பட 26 பேரை கொலை செய்திருந்தனர்" என்று தெரிவித்தார்.
இதற்குப் பதிலடி கொடுப்பதற்காக புதன்கிழமை அதிகாலை 1:05 மணி மற்றும் 1:30 மணிக்கு இடையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, "பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகளைத் தாக்கினோம்" என்று தெரிவித்தார். எதிர்வினை ஆற்றுவதற்கான, எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு பதில் கொடுப்பதற்கான உரிமையை இந்தியா பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பில் மிஸ்ரி, "இந்தியாவின் நடவடிக்கை குறிவைக்கப்பட்டது, அளவிடப்பட்டது மற்றும் ஆத்திரமூட்டாதது" என்று கூறினார். பஹல்காம் தாக்குதல் மிகவும் காட்டுமிராண்டித்தனமானது என்றும் அவர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலையைச் சீர்குலைப்பதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அவர் கூறினார். "இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிப்பதன் மூலம் தொடர்ந்து இந்தப் பகுதியை பின்தங்கிய நிலையில் வைத்திருப்பதே இதன் நோக்கம்" என்று அவர் கூறினார். இது தவிர, நாட்டில் மதக் கலவரங்களைத் தூண்டும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
தீவிரவாத உட்கட்டமைப்பை அகற்ற பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது என்று வெளியுறவுச் செயலாளர் கூறினார். மேலும், இந்திய அரசின் செய்தியாளர் சந்திப்பில் "இந்தத் தாக்குதலில் பொது மக்கள் யாரும் உயிரிழக்கவில்லை" என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் எதிர்வினையாற்றியுள்ளார். இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலளித்துப் பேசிய அவர், திருப்பித் தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று தெரிவித்தார்.
"எதிரி நாடு மிகவும் கோழைத்தனமாக பாகிஸ்தானின் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தியாவின் இந்தத் தாக்குதலை "போர்ச் செயல்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், "இந்தப் போர்ச் செயலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" என்று பதிவிட்டிருந்தார்.
பாகிஸ்தான் நாட்டு மக்கள் அனைவரும் பாகிஸ்தான் ராணுவத்திற்குத் துணை நிற்கிறார்கள், நாட்டின் மன உறுதி வலிமையாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அதேநேரம், "ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தின் பிரிவு 51இல் குறிப்பிடப்பட்டுள்ள தற்காப்பு உரிமையின்படி, பாகிஸ்தான் தனக்கு விருப்பமான நேரத்தில் மற்றும் இடத்தில் இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"எதிரிகளை எப்படிக் கையாள வேண்டும் என்று பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் நன்றாகத் தெரியும். எதிரியின் தீய எண்ணங்கள் வெற்றி பெற ஒருபோதும் விடமாட்டோம்" என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் மீது தாக்குதல்களை நடத்தியதாக இந்தியா அறிவித்துள்ளது. முசாபராபாத்தில் நடந்த தாக்குதலுக்கு பிந்தைய காணொளியை ஏபி செய்தி முகமை வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்தக் காணொளியை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
பிபிசி உருதுவிடம் பேசியிருந்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப், "தீவிரவாதிகளின் மறைவிடங்களைக் குறி வைத்துள்ளதாக இந்தியா கூறுகிறது. சர்வதேச ஊடகத்துக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். அவை தீவிரவாத மறைவிடங்களா அல்லது பொதுமக்கள் வசிப்பிடங்களா என்பதை இங்கு வந்து அனைத்து பக்கங்களிலும் பாருங்கள்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் இரண்டு மசூதிகளும் அடங்கும். எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துல்லியமான சமீபத்திய தரவுகள் தற்போது என்னிடம் இல்லை. தாக்குதல் நடந்ததாக உறுதி செய்யப்படுள்ள ஏழு இடங்களில் இரண்டு காஷ்மீரிலும் ஐந்து பாகிஸ்தானிலும் உள்ளன. இவை அனைத்துமே பொது மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள்" என்று தெரிவித்தார்.
இந்தியாவின் தாக்குதல்கள் குறித்து பிபிசியிடம் பேசிய பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் அதுல்லா தரார், "அவர்கள் எங்கள் எல்லையைத் தாண்டியுள்ளனர்" என்று குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறிய கருத்துகளை தரார் மீண்டும் வலியுறுத்தினார். அவர், "இந்தத் தாக்குதல் நியாயமற்றது. இது முற்றிலும் திட்டமிடப்படாத தாக்குதல். நாங்கள் இதற்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்போம். எங்கள் பதில் தாக்குதல் வானிலும் நிலத்திலும் தொடரும்" என்று தெரிவித்தார்.
இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறும் பாகிஸ்தான்இந்தியாவின் ஐந்து போர் விமானங்களையும் ஒரு ஆளில்லா விமானத்தையும் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமை பகிர்ந்த காணொளியில் பேசிய பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர், "மூன்று ரஃபேல், ஒரு சுகோய்-30, ஒரு மிக்-29 ஆகிய ஐந்து இந்திய விமானங்கள் மற்றும் ஒரு ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்," என்றார்.
பிபிசியால் இதை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை
ஆனால் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ள கருத்துக்கு இந்தியா பதில் ஏதும் அளிக்கவில்லை.
தாக்குதல் நடந்த இடத்தின் தற்போதைய நிலைமை குறித்து நேரில் கண்ட சிலர் பிபிசியிடம் பேசுகையில், "நாங்கள் எங்கள் வீடுகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஏற்பட்ட வெடிச்சத்தம் எங்களை உலுக்கியது. இப்போது எங்கள் குடும்பங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வெளியே இருக்கிறோம். பாதுகாப்பான இடம் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்," என்று முசாபராபாத்தில் வசிக்கும் ஷாநவாஸ் கூறினார்.
தாக்குதல்கள் மேலும் தொடரக்கூடும் என்று அங்குள்ள பலரும் அஞ்சுகிறார்கள்.
"முதல் குண்டுவெடிப்பு என் வீட்டை உலுக்கியபோது நான் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்," என்று தாக்குதல் நடந்த பகுதியிலுள்ள பிலால் மசூதியில் வசிக்கும் முகமது வாஹீத் கூறினார்.
"நான் உடனடியாக வெளியே ஓடிச் சென்றபோது, மற்றவர்களும் அதே நிலையில் இருப்பதைக் கண்டேன். மேலும் மூன்று ஏவுகணைகள் வந்து விழுந்தபோது, அனைவரையும் பீதி மற்றும் குழப்பம் ஆட்கொண்டிருந்தது. எங்களால் நிலைமையைப் புரிந்துகொள்ளவே முடியாமல் இருந்தோம்," என்று கூறினார் வாஹீத்.
மேலும், "டஜன் கணக்கான பெண்களும் ஆண்களும் காயமடைந்துள்ளனர். மக்கள் அவர்களை இங்கிருந்து சுமார் 25கி.மீ தொலைவிலுள்ள சி.எம்.ஹெச் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். நாங்கள் முசாபராபாத் நகருக்கு மிக அருகில் இருக்கிறோம். காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர்," என்று வஹீத் கூறுகிறார்.
இந்நிலையில் இந்தத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான தாக்குதல்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இது அவமானகரமானது. இப்போதுதான் கேள்விப்பட்டோம் ஓவல் அலுவலகத்திற்குள் இப்போது வரும்போதுதான் தெரிய வந்தது," என்று தெரிவித்தார்.
மேலும், "கடந்த கால அனுபவங்களால், ஏதோ நடக்கப் போகிறது என மக்கள் அறிந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் நீண்ட காலமாக, பல தசாப்தங்களாக, நூற்றாண்டுகளாகப் போரிட்டு வருகின்றனர். இது விரைவில் முடிவுக்கு வருமென நம்புகிறேன்," என்று பதிலளித்தார்.
ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், "சர்வதேச எல்லையில் இந்தியாவின் ராணுவ தாக்குதல் குறித்து மிகவும் கவலை கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும், "முடிந்த வரை இரு நாட்டு ராணுவமும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று இரு நாடுகளுக்கும் பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுக்கிறார். மற்றொரு இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலுக்கான அபாயத்தை உலகம் தாங்காது" என்று தெரிவித்தார்.
"இது இரண்டு அணு ஆயுத போட்டியாளர்களுக்கு இடையிலான பதட்டத்தை எதிர்பாராவிதமாக அதிகரித்துள்ளது" என்று பிபிசி உலக சேவையின் தெற்கு ஆசிய ஆசிரியர், அன்பரசன் எத்திராஜன் தெரிவிக்கிறார்.
மேலும், "இந்தியா ஏதாவது ராணுவ நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், பாகிஸ்தானுக்குள் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களின் தீவிரம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் குண்டு வீசிய சில இடங்கள் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவை என்றும், அவை பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறிவைக்கவில்லை என்றும் இந்தியா கூறுகிறது.
பாகிஸ்தான் பதிலடி கொடுப்பதாக சூளுரைத்துள்ளது, இதன் தன்மையும் இலக்குகளும் டெல்லியின் எதிர்வினையைத் தீர்மானிக்கும்.
"இரு நாடுகளும் தீவிரமடையும் நிலைமைகளைச் சமாளிக்க முடியும் என்று நினைக்கின்றன, ஆனால் பதற்றங்கள் அதிகமாக உள்ளன. எந்தவொரு ராணுவ மோதலின் போக்கையும் கணிப்பது கடினம். கடந்த காலங்களில் அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் அவற்றைக் கட்டுப்படுத்த தலையிட்டன.
மற்ற உலகளாவிய பிரச்னைகள் காரணமாக டிரம்ப் நிர்வாகத்தின் கவனம் திசை திருப்பப்பட்ட நிலையில், பதற்றத்தைத் தணிக்க வாஷிங்டன் எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்," என்கிறார் அன்பரசன்.
மேலும், "இரு நாடுகளிலும் உள்ள அரசியல் தலைவர்கள் தாங்கள் தீர்க்கமாகச் செயல்பட்டுள்ளோம் என்று தங்கள் மக்களுக்குக் காட்ட விரும்புவார்கள், வெற்றியைக் கோருவார்கள். அவர்கள் ஒரு பெரிய சூதாட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்" என்று குறிப்பிடுகிறார் அவர்.
'மத்தியஸ்தம் செய்ய சரியான தருணம்'மத்தியஸ்தம் செய்வதற்குச் சரியான தருணம் இது என்று வாஷிங்டனில் உள்ள தெற்காசிய ஆய்வாளர் மைக்கல் குகல்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்தியா தாக்குதல் நடத்தியதாலும், பாகிஸ்தான் பதிலடி தாக்குதல் குறித்து எச்சரித்ததாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது மோதல் அபாயங்கள் அதிகமாக உள்ளன. இந்த ஆரம்ப நடவடிக்கைகளின் தன்மையின் அடிப்படையில், மேலும் விரோதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதோடு, "கடந்த மாதம் பஹல்காமில் நடந்த தாக்குதல் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் உடன்படுவதாகத் தெரிகிறது, ஆனால் பதற்றத்தைத் தணிப்பது அவசியம். ஏற்கெனவே தீப்பற்றி எரியும் உலகத்தில், குறிப்பாக இரண்டு அணு ஆயுத போட்டியாளர்களுக்கு இடையிலான ஒரு போரை யாரும் விரும்பவில்லை.
இந்தியா, பாகிஸ்தானுடன் நல்ல உறவுகளைக் கொண்ட நாடுகளான, அமெரிக்காவும் அரபு வளைகுடா நாடுகளும் பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டிய நேரம் இது. அணுசக்தி அபாயங்கள் தொடங்குவதற்கு முன்பு இதைத் தணிப்பதற்கான வழிகளைத் தேடுமாறு இரு நாடுகளையும் வலியுறுத்த வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு