காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் கூடுதல் துணை ஆணையர் உயிரிழந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் காஷ்மீர் அதிகாரி உயிரிழந்துள்ளார். காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் கூடுதல் துணை ஆணையர் உயிரிழந்துள்ளார். கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் எஸ். ராஜ் குமார் தாப்பா கொல்லப்பட்டார். காஷ்மீர் நிர்வாக சேவைகளின் அர்ப்பணிப்புள்ள அதிகாரியை நாங்கள் இழந்துவிட்டோம், எனது அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.