இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டெல்லியை நோக்கி ஏவப்பட்ட பாகிஸ்தான் ஏவுகணையை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தாக்கியது.
ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், டெல்லியை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணையை ஏவிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில் டெல்லி நோக்கி ஏவப்பட்ட பாகிஸ்தானின் ஃபத்தே 2 ஏவுகணையை, இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு ஹரியானாவின் சிர்சாவில் வழிமறித்து அழித்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடரும் போர் பதற்றத்தால் நாடு முழுவதும் பெரும் பதட்டத்தில் உள்ளது.