இந்தியா - பாகிஸ்தான் மோதலில் முக்கிய பங்கு வகித்த டிரோன்கள் - யாருக்கு வலிமை அதிகம்?
BBC Tamil May 11, 2025 01:48 PM
Getty Images ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா MQ 9 ரீப்பர் ட்ரோன்களைப் பயன்படுத்தியது

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதல்களில் இரு தரப்பும் டிரோன்களைப் பயன்படுத்தின. இது தெற்காசியாவில் அணு ஆயுதம் கொண்ட அண்டை நாடுகளுக்கு இடையேயான முதல் டிரோன் போராக பார்க்கப்பட்டது.

தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டிருப்பதால் பதற்றம் சற்றே தணிந்துள்ளது.

நேற்று (மே 10) இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் ஷங்கர், 'ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே புரிதல் எட்டப்பட்டுள்ளதாகக்' கூறினார்.

அதேபோல, பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக அமலுக்கு வரும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் டார் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக நடந்த மோதலில், டிரோன்கள் பயன்படுத்தப்பட்டது பேசுபொருளாக மாறியது. இதற்கு முந்தைய மோதல்களைப் போல அல்லாமல், டிரோன்களின் பயன்பாடு ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்றே கூறலாம்.

டிரோன்களைப் பயன்படுத்துவது குறித்து பாதுகாப்பு நிபுணர் பிரிகேடியர் ஷர்தேந்து இவ்வாறு கூறுகிறார்: "இது தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய புதிய முறை ஆகும், ஆளில்லாமல் இயக்கப்படும் டிரோன்கள் இருக்கும்போது, போர் விமானத்தைப் பயன்படுத்த வேண்டியதில்லை. டிரோனில் விமானி இருக்கமாட்டார் என்பதால் தாக்குதல் நடத்தும் தரப்புக்கு உயிர் சேதம் ஏற்படாது."

Getty Images யுக்ரேனின் எரிசக்தி உள்கட்டமைப்பை அழிக்க ரஷ்யா ஸிர்கான்-2 என்ற தற்கொலை டிரோனைப் பயன்படுத்தியுள்ளது மோதலில் முக்கிய பங்கு வகித்த டிரோன்கள்

டிரோன் என்பது பறக்கக்கூடிய ஒரு வகை ரோபோ ஆகும், இதை மென்பொருள் அமைப்பு மூலம் கட்டுப்படுத்த முடியும். விமானத் திட்டம், விமானப் பாதை போன்றவற்றை டிரோனின் மென்பொருளில் முன்கூட்டியே திட்டமிட்டு தொலைவிலிருந்து கட்டுப்படுத்தலாம்.

டிரோன்கள் ஆன்போர்டு சென்சார்கள் மற்றும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (ஜிபிஎஸ்) உடன் இணைந்து செயல்படுகின்றன. இவை தானாக இயங்கக்கூடியவை.

இம்பீரியல் போர் அருங்காட்சியக வலைத்தளத்தின்படி, இது முன்னர் ரிமோட்லி பைலட்டட் வெஹிக்கிள் (Remotely Piloted Vehicle (RPV)) என்று அழைக்கப்பட்டது. முதல் உலகப் போரின் போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தால் உருவாக்கப்பட்ட டிரோன் 1917-1918 இல் சோதிக்கப்பட்டது. இவை முன்பு ரேடியோ அலைகள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டன.

"தற்போது தயாரிக்கப்படும் டிரோன்கள் மிகவும் மேம்பட்டவை. தொலைவிலிருந்தே இலக்கைக் கண்டறிந்து அதை குறிவைத்து தாக்க முடியும். டிரோன்கள் விபத்துக்குள்ளானாலும், போர் விமானத்தை விட பொருளாதார இழப்பு குறைவாகவே இருக்கும்" என்று பாதுகாப்பு நிபுணர் பிரிகேடியர் ஷர்தேந்து கூறுகிறார்.

9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா இதை ஆப்கானிஸ்தானில் அதிகமாகப் பயன்படுத்தியுள்ளது. அண்மையில் இது ரஷ்யா-யுக்ரேன் போரில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

2025 மே 9 நாளன்று ராய்ட்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, ஜெரான்-2 ஒரு காமிகேஸ் அல்லது தற்கொலை டிரோன் ஆகும். யுக்ரேனின் எரிசக்தி உள்கட்டமைப்பை அழிக்க ரஷ்யாவால் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில், மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட டிரோனை ரஷ்யா காட்சிப்படுத்தியது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Getty Images ஸ்கை ஸ்ட்ரைக்கர் டிரோன் எதிரி எல்லைக்குள் நுழைந்து, அந்நாட்டின் ரேடாரின் கண்களில் அகப்படாமலே தாக்க முடியும் இந்தியாவிடம் உள்ள டிரோன்கள்

இந்தியாவில் பல வகையான டிரோன்கள் உள்ளன. பாலகோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்குப் பிறகு, இஸ்ரேலுடன் பல டிரோன் ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது.

இருப்பினும், பாதுகாப்பு நிபுணர் பிரிகேடியர் ஷர்தேந்து கூறுகையில், "பாகிஸ்தானிடம் உள்ள டிரோன்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவிடம் மூன்று மடங்கு அதிக டிரோன்கள் உள்ளன, இதன் காரணமாக இந்தியாவுக்கு அதிக வலிமை உள்ளது. இவற்றில் ஹாரோப், ஹிரோன் மார்க்-2, ஸ்கை-ஸ்ட்ரைக்கர் போன்ற டிரோன்கள் அடங்கும் "

இந்தியாவிடம் ஸ்கை-ஸ்ட்ரைக்கர் டிரோன் உள்ளது. இவை இந்தியா - இஸ்ரேல் கூட்டு முயற்சியில் பெங்களூருவில் தயாரிக்கப்பட்டவை.

"இந்தியாவிடம் பல்வேறு வகையான டிரோன்கள் உள்ளன" என்று புது டெல்லியை தளமாகக் கொண்ட விமான சக்தி ஆய்வு மையத்தின் மூத்த உறுப்பினரும், ஓய்வுபெற்ற குழு கேப்டன் டாக்டர் தினேஷ் குமார் பாண்டே கூறுகிறார். நிலைமைக்கு ஏற்றாற்போல, எந்த டிரோனைப் பயன்படுத்துவது என ராணுவம் தான் முடிவு செய்யும் என்று அவர் கூறுகிறார்.

"தற்போது இந்தியா பல நாடுகளுக்கு டிரோன்களை ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பல நாடுகள் இந்தியாவிடமிருந்து டிரோன்களை வாங்குகின்றன" என்று அவர் கூறுகிறார்.

2021ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 100 ஸ்கை-ஸ்ட்ரைக்கர் டிரோன்களை வாங்கியது, சுமார் 100 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஸ்கை-ஸ்ட்ரைக்கர் டிரோன்கள் 10 கிலோ வரையிலான போர்க் கருவிகளை சுமந்து செல்லும் திறன் கொண்டவை.

குறைந்த அளவில் ஓசை எழுப்பும் தன்மை கொண்டிருப்பதால், இவை குறைந்த உயரத்தில் கூட பயனுள்ளதாகக் கருதப்படுகின்றன.

"இவை அமைதியானவை, கண்ணுக்குத் தெரியாதவை மற்றும் திடீரென்று தாக்குபவை" என்று, இதை உருவாக்கும் நிறுவனம் கூறுகிறது.

ஹாரோப் டிரோனின் பறக்கும் வரம்பு மிக அதிகம். இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட இந்த டிரோன், சுமார் 9 மணி நேரம் காற்றில் பறக்கக்கூடியது என்பதுடன் 1000 கிலோமீட்டர் வரை செல்லக் கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா தனக்கு எதிராக ஹாரோப்பை பயன்படுத்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. ஹாரோப் என்பது ஒரு ரேடார் எதிர்ப்பு தொழில்நுட்பமாகும். அதன் கேமராக்கள் பெரிய ராணுவ இயந்திரங்களை அடையாளம் காண உதவுகின்றன. துல்லியமான சர்ஜிக்கல் தாக்குதல்களை நடத்தும் திறனும் இதற்கு உண்டு.

23 கிலோ எடையுள்ள போர்க்கருவிகள் அல்லது குண்டுகளை சுமந்து செல்ல முடியும். கடலில் இருந்து போர்க்கப்பல்கள் மூலமும் ஹாரோப் டிரோனைப் பயன்படுத்தலாம்.

இதைத் தவிர, 3000 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய ஹெரான் மார்க்-2 டிரோனும் இந்தியாவிடம் உள்ளது. 2023 இல் வாங்கப்பட்ட இது, 24 மணி நேரம் வரை பறக்கும் திறன் கொண்டது.

அவற்றின் உள்ளே ரேடார் ஐஆர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிரோன்கள் லேசர் உதவியுடன் இலக்கை துல்லியமாக சென்றடைபவை. இவற்றை தரவு இணைப்பு வழியாக தரையில் இருந்து கட்டுப்படுத்தலாம்.

ஓய்வுபெற்ற குரூப் கேப்டன் தினேஷ் குமார் பாண்டே கூறுகையில், "எந்த டிரோன் எவ்வளவு சுமையை சுமந்து செல்லும் என்பது அதன் இயந்திரத் திறனைப் பொறுத்தது. டிரோனில் சுமையை அதிகரித்தால் அதன் நீண்ட தூரம் பறக்கும் திறன் குறையும்." என்றார்.

பாகிஸ்தானிடம் உள்ள டிரோன்கள் Getty Images பாகிஸ்தான் தின அணிவகுப்பில் பங்கேற்கும் ஷாபர்

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய மோதலில், துருக்கியில் தயாரிக்கப்பட்ட டிரோனை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக இந்தியா கூறியது. பாகிஸ்தானிடம் திரள் டிரோன்கள் (Swarm drones) உள்ளன.

திரள் டிரோன்களைப் பற்றி கூறும் ஓய்வுபெற்ற குரூப் கேப்டன் தினேஷ் குமார் பாண்டே, "அவை குழுக்களாக நகரும், அவற்றைக் தாக்குவது எளிதல்ல, தாக்கப்பட்டாலும் அவற்றில் பல தப்பிவிடும்" என்று கூறுகிறார்.

"அவை சிறிய பல தொகுதிகளாக அனுப்பப்படுகின்றன, அவை வான் பரப்பை அடைந்த பிறகு ஒன்று சேரும்," என்று அவர் கூறினார். ஒரு இலக்கை குறிவைத்து செல்லும் அவை, பாதுகாப்பாக இயங்குபவை" என்று அவர் கூறுகிறார்.

பாகிஸ்தானிடம் ஷாபர்-2 டிரோன்களும் உள்ளன, அவை 23000 அடி வரை பறக்கும் திறன் கொண்டவை. அரபு நியூஸ் வெளியிட்ட செய்திகளின்படி, ஷாபர்-3 பாகிஸ்தானால் நவம்பர் 2024 இல் சோதிக்கப்பட்டது. இந்த டிரோன் தோராயமாக 35000 அடி உயரத்தை எட்டும்.

இது 500 கிலோ வரை எடையை சுமந்து செல்லும் என்று பாகிஸ்தான் கூறுகிறது. ஓய்வுபெற்ற குரூப் கேப்டன் தினேஷ் குமார் பாண்டேவின் கருத்துப்படி, "பாகிஸ்தானின் சொந்த தயாரிப்பான புராக் டிரோன்கள் தவிர மீதமுள்ளவை வெளிநாட்டிலிருந்து வாங்கப்பட்டவை."

இது தவிர, பாகிஸ்தானிடம் துருக்கியில் தயாரிக்கப்பட்ட பைரக்டர் அகின்சி டிரோனும் உள்ளது. இது வான் மற்றும் தரை இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த டிரோனில் ரேடார் வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளது.

"அகின்சி டிரோன், மிகவும் மேம்பட்ட வகையாக இருந்தாலும், அது எவ்வளவு இருக்கிறது என்பது தெரியவில்லை, ஏனெனில் அவற்றில் பல இன்னும் தயாரிக்கப்படவில்லை என்பதால் குறிப்பாக சொல்ல முடியாது" என்று ஓய்வுபெற்ற குரூப் கேப்டன் தினேஷ் குமார் பாண்டே கூறுகிறார்.

இரு நாட்டு டிரோன்களின் வலிமை Getty Images இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, நடுத்தர உயரம் கொண்ட, நீண்ட தூர டிரோனான ருஸ்டமை உருவாக்கியுள்ளது.

வலைத்தளத்தின்படி, இந்தியாவிடம் நடுத்தர உயரத்தில் பறக்கக் கூடிய 200 டிரோன்களும் (MALE), 980 மினி டிரோன்களும் உள்ளன. பாகிஸ்தானிடம் நடுத்தர உயரத்தில் பறக்கும் 60 டிரோன்களும், 60 கடற்படை டிரோன்களும், 70 விமானப்படை டிரோன்களும் மற்றும் 100 ராணுவ டிரோன்களும் உள்ளன. இருப்பினும், இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தியாவிடம் ஹார்பி, ஹாரோப், எம்க்யூ 9 ரீப்பர் மற்றும் ருஸ்டம்-2 ஆகிய டிரோன்கள் உள்ளன.

ஹார்பி என்பது இஸ்ரேலிய தயாரிப்பு டிரோன் ஆகும். இது 9 மணி நேரம் பறக்கும். இதன் வரம்பு 500 கிலோமீட்டர் வரை இருக்கும். ஹார்பி 32 கிலோ வரை எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இதன் விலை சுமார் 4 மில்லியன் டாலர்கள் ஆகும்.

ஹாரோப் இஸ்ரேலிலும் தயாரிக்கப்படுகிறது. இது 9 மணி நேரம் பறக்கக்கூடியது, ஆனால் அதன் வரம்பு சுமார் 1000 கி.மீ. இது 23 கிலோ வரை எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

MQ-9 ரீப்பர் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது, 1700 கிலோ வரை எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த டிரோனை இராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது.

27 மணி நேரம் வானில் பறக்கக்கூடிய திறன்கொண்ட இந்த டிரோன் 1850 கிலோமீட்டர் வரை செல்லும். ஒரு டிரோனின் விலை 32 மில்லியன் டாலர்கள் ஆகும்.

ருஸ்டம்-2 இந்தியாவின் டிஆர்டிஓ-வால் உருவாக்கப்பட்டது. இதன் வரம்பு 200 கிலோமீட்டர் வரை இருக்கும். இது 350 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இதன் விலை, டிரோன் ஒன்றுக்கு 50 முதல் 60 லட்சம் டாலர்கள் வரை இருக்கும். இது தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது.

Techie.com வலைத்தளத்தின்படி, பாகிஸ்தானிடம் துருக்கியில் தயாரிக்கப்படும் பைரக்டர் அகின்சி (Bayraktar Akinci) உள்ளது. இதன் நீளம் 12.2 மீட்டர். இது 1500 கிலோ வரை எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது, 40,000 அடி உயரத்தை எட்டக்கூடியது.

பைரக்டர் டிபி-2, துருக்கியில் தயாரிக்கப்படுகிறது. இது 18000 அடி உயரம் வரை செல்லக்கூடிய இந்த டிரோனால் 27 மணி நேரம் வரை இயங்க முடியும். இது 150 கிலோ வரை எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

இதுதவிர சீனாவில் தயாரிக்கப்பட்ட CH-4 டிரோன்களும் பாகிஸ்தானிடம் உள்ளன. இது 3000-5000 கிலோமீட்டர் வரை செல்லக்கூடியது. இது 345 கிலோ வரை எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.