பஹல்காம் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட இந்தியாவின் ராணுவ நடவடிக்கை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நாட்டு மக்களுக்கு இன்று (மே,12) உரையாற்றினார்.
''ஏப்ரல் 22ம் தேதியன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், அப்பாவி பொதுமக்கள் அவர்களது குடும்பத்தின் முன், அவர்களுடைய குழந்தைகளின் கண் முன்னால் கொல்லப்பட்டனர். இது மிகவும் குரூரமான செயல். இது நமது நாட்டின் நம்பிக்கையை உடைப்பதற்கான செயல், இது என் மனதில் மிகப்பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது.'' என்றார் நரேந்திர மோதி.
மேலும், ''இந்த சூழலில் ராணுவத்திற்கு அனைத்து அதிகாரத்தையும் கொடுத்தோம். நமது நாட்டு பெண்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தோம். மே 6 மற்றும் 7ம் தேதிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நம்முடைய மன உறுதியை நாட்டு மக்கள் பார்த்தனர். பயங்கரவாத முகாம்கள் மீதும் பயங்கரவாதிகள் மீதும் மிகப்பெரிய நடவடிக்கை எடுத்தோம்.'' என்றார் நரேந்திர மோதி.
'பயங்கரவாத தாக்குதல்களுக்கு தொடர்பு'மேலும் தொடர்ந்த நரேந்திர மோதி,'' இந்திய ராணுவமும், இந்தியாவின் டிரோன்களும் தாக்குதல் நடத்தின. பஹாவல்பூர், முரிட்கே போன்ற பயங்கரவாத முகாம்கள், ஒருவிதத்தில் உலகளாவிய பயங்கரவாத மையங்களாக இருந்தன.
9/11, லண்டன் டியூப் வெடிகுண்டு, இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்களுக்கு இந்த பயங்கரவாத முகாம்களுடன் தொடர்பு உள்ளன
இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்தவர்களை, அடக்க நமக்கு கிடைத்த வாய்ப்பு ஆபரேஷன் சிந்தூர். இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டவர்களை, இந்தியா ஒரே அடியில் ஒழித்துவிட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால், பாகிஸ்தான் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஒடிந்துவிட்டது.
இதற்குப்பிறகு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்காமல், இந்தியாவின் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், பொதுமக்களின் குடியிருப்புகள், ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் டிரோன், ஏவுகணைகள் எப்படி இந்தியாவின் முன் தவிடுபொடியாகின என்பதை உலகமே பார்த்தது. பாகிஸ்தானின் தாக்குதல்களை வானத்திலேயே இந்தியா சுக்குநூறாக்கியது. இந்தியாவின் டிரோன், ஏவுகணைகள் துரிதமாக செயல்பட்டு, பாகிஸ்தானின் வான்படை தளங்கள் மீது நடத்திய தாக்குதல்களில் ஏற்பட்ட சேதத்தை அந்நாடு முடங்கிப்போனது'' என்றார்.
பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று உலகம் முழுவதிலும் சென்று பாகிஸ்தான் முறையிட்டது என்றார் நரேந்திர மோதி
''பாகிஸ்தான் தானே முன்வந்து நமது ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலை தொடர்பு கொள்ளும்போது, இந்தியா, பாகிஸ்தானின் பயங்கரவாத இடங்களை சிதிலமாக்கிவிட்டது.
பாகிஸ்தானின் தரப்பில் இருந்து எந்தவித பயங்கரவாத மற்றும் ராணுவ நடவடிக்கைகள் இருக்காது என்று கூறியபிறகு தான் நாம் ஒப்புக்கொண்டோம்.
நாம் கொடுத்த பதிலடியை அவர்கள் தாங்கிக் கொண்டார்கள். ஆனால் எதிர்காலத்தில், பாகிஸ்தான் எப்படிப்பட்ட நிலையை எடுக்கிறது என்பதன் அடிப்படையில்தான் அந்த நாட்டுடன் நமது விவகாரங்களை முன்னெடுப்போம்.
நம் நாட்டு ராணுவம் உட்பட முப்படைகளும் முழுமையான தயார் நிலையில் உள்ளன. ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், புதிய கோணத்தை காட்டியது.
இந்தியாவின் மீது பயங்கரவாதிகள் தாக்கினால், மூக்குடைக்கும் பதிலைக் கொடுப்போம். பயங்கரவாதத்தின் வேர் தொடங்கும் இடத்திலேயே அதை முடிப்போம். ஆணு ஆயுதம் என்ற பிளாக்மெயிலை இந்தியா சரியாக கையாளும்.
ஆபரேஷன் சிந்தூர் கொன்ற பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள் கலந்துக் கொண்டது மூலமாக அவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை உலகம் பார்த்தது.'' என்றார் நரேந்திர மோதி
'ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓட முடியாது'உரையை தொடர்ந்த மோதி, ''இந்த ஆபரேஷன் மூலம், நம்முடைய மேட் இன் இந்தியா வெற்றிபெற்றது உறுதியானது. 21ம் நூற்றாண்டில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களின் தரத்தை உலகம் பார்த்தது. நமது ஒற்றுமை, நம் நாட்டின் மிகப்பெரிய சக்தி ஆகும். உண்மையில், இந்த காலம் போருக்கானது அல்ல. ஆனால், இந்த யுகம், பயங்கரவாதத்துக்குமானது அல்ல. மேம்பட்ட உலகிற்கான காலம் இது.
பாகிஸ்தானின் அரசு, ராணுவம் பயங்கரவாதத்தை வளர்த்து வந்தால், பயங்கரவாதமே அந்நாட்டை அழித்துவிடும். நிலைக்க வேண்டுமானால், அந்நாடு அதை அழிக்க வேண்டும், அதைத்தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை.
பயங்கரவாதமும், வர்த்தகமும் ஒன்றாக இயங்காது. அதேபோல, ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓட முடியாது.
அவசியம் ஏற்பட்டால், இந்தியா தனது முழு சக்தியை பயன்படுத்தும். நான் மீண்டும் ஒருமுறை, ராணுவம் மற்றும் பிற படைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்'' என்றார்
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு