Amritsar: இருள் சூழ்ந்த பஞ்சாப் அமிர்தசரஸ்; 'அச்சம் வேண்டாம்' - காவல்துறை விளக்கம்
Vikatan May 13, 2025 05:48 AM

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்  ‘ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ஜம்மு - காஷ்மீர் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதையடுத்து இரு நாடுகளும் தாக்குதல்களை நடத்த நாடு முழுவதும் போர் பதற்றம் ஏற்பட்டது.

இந்தியா, பாகிஸ்தானின் பஹாவல்பூர் மற்றும் முரிட்கே பகுதி, பயங்கரவாத முகாம்களையு குறி வைத்துத் தாக்கியது. பாகிஸ்தான் வான் வழியிலான ட்ரோன் தாகுதல்களை நடத்த முயற்சிக்க, அதை இந்தியா முறியடித்தது.

Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்

இப்படியாக போர் பதற்றம் நிகழ, இந்தப் போர் சூழலை கட்டுக்குள் கொண்டுவர நடந்த முயற்சியின் பலனாக, கடந்த மே 10 ம் தேதி தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் பாகிஸ்தான் ட்ரோன்கள் பள்ளிகள், புனிதத் தலங்கள் மற்றும் முக்கியக் குடியிருப்புப் பகுதிகளை குறிவைப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்ததால், நாடு முழுவதும் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு உயர்த்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரம் காட்டப்படுகிறது.

இந்தச் சூழலில் இன்று (மே 12) இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி, "இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நாங்கள் கடுமையான பதிலடி கொடுப்போம். எந்தவொரு அணு ஆயுத அச்சுறுத்தலையும் இந்தியா அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்காது." என்று பேசியிருந்தார்.

மோடி பேசிக்கொண்டிருக்கும் போதே பஞ்சாப் அமிர்தசரஸ் கோவில் இருக்கும் பகுதி முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அமிர்தசரஸில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில் பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதலுக்காகக் குறி வைப்பதாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியினர் அச்சப்பட்டிருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் அமிர்தசரஸ் பகுதியின் துணை காவல் ஆணையர், "சைரன் சத்தம் கேட்டவுடன் மின்சாரம் துண்டிக்கப்படும். நகரமே இருள் சூழ்ந்திருக்கும். அந்த சமயத்தில் எல்லோரும் விளக்குகளை அனைத்துவிட்டு, ஜன்னல் அருகில் நிற்காமல் விலகி பாதுகாப்பாக வீட்டின் உள்ளே இருங்கள். மின்சாரம் வரும் வரை அமைதியாகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். அச்சம் வேண்டாம்" என்று தனது எக்ஸ் வலைதளம் மூலம் அறிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்துவதாக பதற்றம் ஏற்பட்ட நிலையில், அமிர்தசரஸில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இந்திய இராணுவம் போர் விமானங்களை வானில் உலவுவிட்டு உயர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.