தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ், நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மார்ச் 8 ஆம் தேதி வெளியாகிய நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில், மே 13 முதல் 15 ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால், சிபிஎஸ்இ நிர்வாகம் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஎஸ்ஐ தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
சிபிஎஸ்ஐ தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுகளை, அதிகாரப்பூர்வ இணையதளமான results.cbse.nic.in, cbse.nic.in ஆகிய இணையதளங்கள் வழியாக முடிவுகளைத் தெரிந்துக்கொள்ளலாம். இவற்றை தவிர, UMANG செயலி, DigiLocker (டிஜி-லாக்கர்), ஐவிஆர் அழைப்பு (IVRS - Interactive Voice Response System) ஆகியவை உதவியுடன் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
டிஜி-லாக்கர் செயலி அல்லது இணையதளம் சென்று தேர்வு முடிவுகளை பார்க்க, மாணவர்களுக்கான லாகின் (Login) தகவல்களை பள்ளி நிர்வாகங்கள் வழங்கியுள்ளன. அதற்குள் சென்று தேர்வு முடிவுகள் வெளியான பின்பு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டிஜி-லாக்கர் என்பது அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MeitY) உருவாக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் ஆவண சேமிப்பு மற்றும் மேலாண்மை சேவையாகும்.
டிஜிலாக்கர் வாயிலாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்வது எப்படி?
படி 1: டிஜிலாக்கரின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்திற்கு செல்லவும்.
படி 2: ஏற்கனவே கணக்கு உள்ள பயணர்கள் தொலைப்பேசி எண், ஆதார் எண் அல்லது பெயரை பயன்படுத்தி உள்நுழையலாம். புதிய பயனர்கள் தொலைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி புதிய கணக்கிற்கு பதிவுசெய்து, OTP மூலம் சரிபார்க்கவும்.
படி 3: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் 2025 அல்லது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்ற சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் பிரிவிற்குச் செல்லவும்.
பரி 4: மாணவர்களுக்கான தேர்வு பதிவெண், பள்ளி எண், 6-இலக்க அணுகல் குறியீடு (சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு வழங்கப்படுவது) உள்ளிட்ட தேவையான விவரங்களை உள்ளிடவும்.
படி 5: விவரங்களை உள்ளிட்ட பின் சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்ததும், மதிப்பெண் பட்டியல் (Marksheet), தேர்ச்சி சான்றிதழ் (Certificate of completion) திரையில் தோன்றும். மாணவர்கள் ஆவணங்களை PDF- ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதேபோல், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்களின் தேர்வு பதிவெண், பள்ளியின் எண், அட்மிஷன் கார்டு ஐடி ஆகிய தகவல்களைப் பதிவிட்டு முடிவுகளை வீட்டிலிருந்தபடியே தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.