இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். ரோகித் ஷர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது விராட் கோலியின் அறிவிப்பும் வந்திருக்கிறது.
ஏற்கெனவே கடந்த ஆண்டு உலகக்கோப்பை தொடருடன் டி20 போட்டிகளில் இருந்து இருவரும் ஒன்றாக ஓய்வு பெற்றனர். இனி ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாட உள்ளார் விராட் கோலி.
கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் 269ஆவது வீரராக அறிமுகமானார் விராட் கோலி. இந்த அறிவிப்பை அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்திருக்கிறார் விராட் கோலி. அதில் வெள்ளை உடையில் விளையாடுவது மிகவும் நெருக்கமானது எனத் தெரிவித்துள்ளார் கோலி.
அந்தப் பதிவில், "நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தொடங்கி 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், இந்த வடிவம் என்னை இத்தகைய பயணத்திற்கு எடுத்துச் செல்லும் என நான் எப்போதும் நினைத்திருக்கவில்லை. இது என்னை சோதித்துள்ளது, என்னை வடிவமைத்துள்ளது, நான் வாழ்நாளுக்கும் எடுத்துச் செல்லும் பாடங்களை எனக்கு கற்பித்துள்ளது.
வெள்ளை உடையில் விளையாடுவதில் மிகவும் தனிப்பட்ட முறையில் ஏதோ ஒன்று உள்ளது. அந்த அமைதியான கடின உழைப்பு, நீளமான நாட்கள், யாரும் பார்க்காத ஆனால் எப்போதும் உங்களுடன் இருக்கும் சிறிய தருணங்கள்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நான் இந்த வடிவத்தில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுக்கையில், அது எளிதானதாக இல்லையென்றாலும், அது தான் சரி எனத் தோன்றுகிறது. நான் என்னிடம் இருந்த அனைத்தையும் இந்த வடிவத்திற்காக கொடுத்துள்ளேன். அது எனக்கு நான் எதிர்பார்த்ததைவிட அதிகம் கொடுத்திருக்கிறது.
நான் இந்த விளையாட்டிற்கும், என்னுடன் சேர்ந்து களத்தைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இந்தப் பயணத்தில் நான் காணப்பட்டதாக உணர வைத்த ஒவ்வொரு நபருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியுடன் விடை பெறுகிறேன். நான் என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை எப்போதும் ஒரு புன்னகையுடன் திரும்பி பார்ப்பேன்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
36 வயதான கோலி இந்தியாவுக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 31 சதங்கள், ஏழு அரை சதங்கள் மற்றும் 46.85 சராசரியுடன் 9230 ரன்களை அவர் சேர்த்துள்ளார். அதிகபட்ச ஸ்கோராக 254 ரன்களை அவர் குவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக விராட் கோலியின் சாதனை அளப்பரியது. இது வரை 68 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ள விராட் கோலி அதில் 40 போட்டிகளில் வென்று 11 போட்டிகளை டிராவில் முடித்துள்ளார். கேப்டனாக அவரின் வெற்றி சதவிகிதம் 58 ஆக உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வழிநடத்திய கேப்டன்களில் வெற்றி சதவிகிதத்தின் அடிப்படையில் விராட் கோலியே முதலிடம் வகிக்கிறார். அந்த வகையில், தோனி, கங்குலி உள்ளிட்ட கேப்டன்களைக் காட்டிலும் கோலியே சிறந்தவராக இருக்கிறார்.
புள்ளிவிவரங்களை விடவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் முக்கியமானது. இந்திய கிரிக்கெட்டிற்கு இக்கட்டான ஒரு காலகட்டத்தில் டெஸ்ட் அணிக்கு தலைமையேற்கும் பொறுப்பு கோலி வசம் வந்தது. 2014ஆம் ஆண்டு இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது டெஸ்ட் தொடரின் நடுவிலே கேட்பனாக இருந்த தோனி ஓய்வு பெற விராட் கோலி வசம் தலைமை பொறுப்பு வந்தது.
சச்சின், டிராவிட் போன்ற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றிருந்த நிலையில் வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணி திணறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் பணிச்சுமை காரணமாக ஜாம்பவானும் தன்னுடைய வழிகாட்டியுமான தோனி உடனடியாக ஓய்வு பெற்ற தருணத்தில் கேட்பன்சி கோலியின் கைகளுக்கு வந்தது.
டெஸ்ட் வடிவத்தில் தடுமாறிக் கொண்டிருந்த இந்திய அணியை வலுவாக மீண்டும் கட்டமைத்து நம்பர் ஒன் அணியாக வெளிநாட்டு தொடர்களிலும் ஆதிக்கம் செலுத்த வைத்தார் கோலி. அதுவரை தடுப்பாட்டம் ஆடுவதை வழக்கமாக கொண்டிருந்த இந்திய அணிக்கு கோலியின் ஆக்ரோஷமான அணுகுமுறை புது ரத்தம் பாய்ச்சியது.
இந்தியாவை முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார் கோலி.
டெஸ்ட் தொடர்களில் இந்தியாவுக்காக அதிக இரட்டை சதங்கள் (7) அடித்த இந்திய வீரர், கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்தவ்ர் எனப் பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார் கோலி.
இங்கிலாந்தின் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோருடன் சேர்த்து தனது சகாப்தத்தின் நான்கு சிறந்த பேட்டர்களில் ஒருவராக கோலி கருதப்படுகிறார்.
- 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் விராட் கோலி டெஸ்ட் தலைமை பொறுப்பேற்ற போது இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் 7வது இடத்தில் இருந்தது. விராட் கோலி கேட்பனாக பொறுப்பேற்ற இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே 2016ஆம் ஆண்டு அக்டோபரில் இந்திய அணி தரவரிசைப் பட்டியில் முதல் இடத்தைப் பிடித்தது. தோனிக்குப் பிறகு இந்திய அணியை டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு அழைத்துச் சென்றவர் விராட் கோலி தான். அது மட்டுமில்லாது, அப்போது தொடங்கி மார்ச் 2020 வரை 42 மாதங்கள் முதல் இடத்தில் நீடித்தது. இந்திய அணியை நீண்ட காலம் முதல் இடத்தில் தக்கவைத்த டெஸ்ட் கேப்டனும் விராட் கோலி தான்.
- ஒரு பேட்டராக டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தபோது 937 புள்ளிகளைப் பெற்றிருந்தார் கோலி. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இந்திய பேட்டர் பெற்ற அதிகபட்ச புள்ளி அது தான்.
- விராட் கோலி தலைமையில் தான் இந்திய அணி முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரை (2018-2019 பார்டர் கவாஸ்கர் கோப்பை) வென்றது.
- 2015-2017 இடைப்பட்ட காலத்தின் விராட் கோலி தொடர்ந்து ஒன்பது டெஸ்ட் தொடர்களை வென்றார். இதன் மூலம் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார்.
டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி ஆடிய சிறந்த இன்னிங்ஸ்119 & 96 vs தென்னாப்பிரிக்கா
2013ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸில் நடைபெற்ற தனது முதலாவது போட்டியில், 119 மற்றும் 96 ரன்கள் விளாசினார் விராட் கோலி.
முதல் இன்னிங்ஸில் அவர் அடித்த சதம் இந்தியாவின் வலுவான ஸ்கோருக்கு அடித்தளமாக அமைந்தது.
அதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 96 ரன்கள் விளாசிய அவருக்கு, இரட்டை சதங்களை எட்டும் வாய்ப்பு மிக அருகில் இருந்தது.
தென்னாப்பிரிக்காவின் சூழலுக்கு ஏற்ப விளையாடிய அவரது திறமைக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து பாராட்டுக்கள் கிடைத்தன.
எம்.எஸ். தோனி காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். அப்போது அடிலெய்டில் முதல் முறையாக இந்தியாவின் தற்காலிக டெஸ்ட் கேப்டனாகப் பொறுப்பேற்ற விராட் கோலி, முதல் போட்டியிலேயே தனது திறமையை வெளிப்படுத்தினார்.
முதல் இன்னிங்ஸில் 115 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 141 ரன்கள் குவித்து இரட்டை சதங்களைப் பதிவு செய்தார்.
முதல் இன்னிங்ஸ் முழுக்கவே தன்னம்பிக்கையுடன் விளையாடிய கோலி, ஆஸ்திரேலிய பந்துவீச்சைக் கட்டுக்குள் கொண்டு வந்து, அதிரடியான ஸ்ட்ரோக்குகளால் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் அவர் அடித்த 141 ரன்கள் என்பது அவரது சிறந்த இன்னிங்ஸாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
வெற்றி பெற 364 ரன்கள் தேவை என்ற இலக்கை நோக்கி, ஆட்டம் சென்று கொண்டிருந்தது.
ஆனால் அடுத்தடுத்து பார்ட்னெர்ஷிப்பை இழந்த கோலி, துணிச்சலாக விளையாடினார்.
ஆக்ரோஷமான ஆட்டத்தின் மூலம், வெற்றியை நோக்கி இந்தியாவை போராட வைத்தார் விராட் கோலி.
அந்த போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போதிலும், கோலியின் தலைமைத்துவமும், அவரது பேட்டிங் திறனும் பரவலாகப் பாராட்டைப் பெற்றன.
235 vs இங்கிலாந்து2016 ஆம் ஆண்டு, வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து அணியின் நான்காவது டெஸ்ட் போட்டியில், கோஹ்லி 235 ரன்கள் விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோராக இது உள்ளது.
ஆரம்பத்தில் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருந்த பிச்சில் பேட்டிங் செய்த கோலி, இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர்களையும், வேகப்பந்து வீச்சாளர்களையும் திறமையாக எதிர்கொண்டார்.
இந்தியா '631 ரன்கள்' எனும் பெரிய ஸ்கோர் எடுப்பதற்கு முதுகெலும்பாக கோலியின் இன்னிங்ஸ் அமைந்தது.
கோலி கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் பேட்டிங் செய்து, 340 பந்துகளைச் சந்தித்தார்.
25 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து, ஆடுகளத்தில் சகிப்புத்தன்மையோடும், ஆட்டத்தில் கூர்மையான கவனத்தோடும் விளையாடினார்.
இந்த இன்னிங்ஸ், கோலியின் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாகி, அவரது சாதனைகளில் முக்கிய இடத்தைப் பிடித்தது. ஏனென்றால் அதே ஆண்டில் அவர் அடித்த மூன்றாவது இரட்டைச் சதம் அது.
அந்த சமயத்தில் எந்த இந்திய கேப்டனும் இந்த சாதனையை எட்டவில்லை.
தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக, 2018 இல் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அபாரமாக விளையாடி 149 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இது தான் இங்கிலாந்தில் விராட் கோலி அடித்த முதல் சதம் .
2014 இல் இங்கிலாந்தில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு, மிகுந்த அழுத்தத்துடன் இந்த தொடரைச் சந்தித்த கோலி, ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் வலிமையான பந்து வீச்சை தைரியமாக எதிர்கொண்டார்.
54/2 என்ற ஸ்கோரோடு களமிறங்கிய கோலி, கடினமான பந்துவீச்சுகளையும் தைரியமாக எதிர்கொண்டு ஒரு அபாரமான சதத்தை பதிவு செய்தார்.
மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்தபோதிலும், கிட்டத்தட்ட தனி ஆளாக நின்று, இந்தியாவை ஆட்டத்தில் தக்க வைத்துக் கொண்டார்.
அவரது இன்னிங்ஸில் 22 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். பொறுமையாகவும், ஆக்ரோஷமாகவும் விளையாடி, அருமையான ஆட்டத்தை கோலி வெளிப்படுத்தினார்.
இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் டெஸ்டில் தோல்வியடைந்தாலும், கோலியின் ஆட்டம் ஒரு இந்திய வீரரின் சிறந்த வெளிநாட்டு சதங்களில் ஒன்றாக பரவலாகப் பாராட்டப்பட்டது.
153 vs தென்னாப்பிரிக்கா2018 ஆம் ஆண்டு, செஞ்சுரியனில் கோலி கடினமான சூழ்நிலைகளில் தனது மிகச்சிறந்த இன்னிங்ஸில் ஒன்றை விளையாடினார்.
மாறுபட்ட பவுன்ஸ் கொண்ட பிச்சிலும், மோர்னே மோர்கெல், காகிசோ ரபாடா மற்றும் வெர்னான் பிலாண்டர் தலைமையிலான தரமான தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சுக்கும் எதிராக, இந்தியாவின் மொத்த ஸ்கோரான 307 இல், கோலி 153 ரன்களை எடுத்து அபாரமாக விளையாடினார்.
மறுமுனையில் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தாலும், கோலி எவ்வாறு உறுதியாக விளையாடினார் என்பதுதான் அந்த இன்னிங்ஸை சிறப்பு வாய்ந்ததாக மாற்றியது.
மற்ற எந்த இந்திய வீரரும் அந்த இன்னிங்ஸில் 50 ரன்களைக் கடக்கவில்லை.
அந்தப் போட்டியில் திறமையான ஸ்ட்ரோக் ஆட்டத்தை வெளிப்படுத்தி, 15 பவுண்டரிகள் விளாசினார் கோலி.
254 vs தென்னாப்பிரிக்கா2019 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் புனேவில் நடந்த போட்டியில் விராட் கோலி தனது சிறந்த டெஸ்ட் ஸ்கோரான 254ஐ பதிவு செய்தார்.
தொடக்க வீரர்கள் உறுதியான அடித்தளத்தை அமைத்த பிறகு, 136/2 என்ற நிலையில் களமிறங்கிய கோலி, அவரது இன்னிங்ஸை மிகுந்த கட்டுப்பாட்டோடு எடுத்துச் சென்றார்.
கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் கிரீஸில் மிகச் சரியான வேகத்தில் ஆடினார்.
33 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் கொண்ட அவரது இன்னிங்ஸ், காகிசோ ரபாடா, வெர்னான் பிலாண்டர் மற்றும் அறிமுக வீரர் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோரைக் கொண்ட தரமான தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக அமைந்தது.
அவர்களால் கோலியின் நேர்த்தியான ஆட்டத்திறனை சமாளிக்க முடியவில்லை.
கோலி அந்தப் போட்டியில் ஆட்டமிழக்கவில்லை.
அவரது இரட்டை சதம் இந்தியா 601/5 என்று ஸ்கோரில் வெற்றியடைய உதவியது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு