வாட்டர்லூ போரில் தோற்கடிக்கப்பட்டபிறகு ஐரோப்பாவில் தனக்கு வருங்காலம் இல்லை என்று முடிவு செய்த நெப்போலியன், அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார்.
ஆனால் ஃபிரான்ஸின் அட்லாண்டிக் கடற்கரையை பிரிட்டனின் போர்க்கப்பல்கள் சூழ்ந்து இருந்ததால் அங்கிருந்து தப்பிப்பது இயலாத காரியமானது.
பிரிட்டன் கடற்படையிடம் சரணடைந்து , பிரிட்டனிடம் அரசியல் அடைக்கலம் பெறலாம் என்று முடிவு செய்தார் நெப்போலியன். ஆனால் நெப்போலியனுக்கு எந்த சலுகையும் காட்டும் முடிவில் பிரிட்டன் இல்லை.
"பிரிட்டன் பொதுமக்களின் பார்வையில் பார்த்தால் நெப்போலியன் ஒரு குற்றவாளி. பாதிக்கப்பட்டவர் அல்ல. அங்கிருக்கும் கார்ட்டூனிஸ்டுகள் நெப்போலியனைக் கூண்டில் அடைபட்ட விலங்காகக் காட்டினார்கள். பிரிட்டனில் அவரை வைத்திருந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று பொதுவாக ஒரு கருத்து இருந்தது. பிரிட்டன் மண்ணிலோ அல்லது அருகில் உள்ள வேறொரு நாட்டிலோ அவரை வைத்திருந்தால் பின்னாளில் புரட்சிக்கான மையமாக அவர் மாற வாய்ப்பிருந்தது," என்று 'நெப்போலியன் இன் கேரிகேச்சர் 1795-1821' (Napoleon in Caricature 1795 – 1821) என்ற தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் ஏ எம் ப்ராட்லி.
நெப்போலியனை செயின்ட் ஹெலனா தீவுக்கு அனுப்பும் முடிவுஉலகின் பிற பகுதிகளில் இருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டிருந்த செயின்ட் ஹெலனா தீவுக்கு அவரை அனுப்ப தீர்மானித்தது பிரிட்டன் அரசு. பிரிட்டனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த தீவு அது.
ஆப்பிரிக்கப் பெருநிலப்பரப்பில் இருந்து சுமார் 1,200 கி.மீ தூரம் தள்ளி இருந்தது இந்த இடம்.
"இந்தியாவை ஆட்சி செய்து வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் கப்பல்கள் ஓய்வுக்காக நிறுத்தப்படும் இடமாக செயின்ட் ஹெலனாதீவு இருந்தது. பிரிட்டனின் ராணுவ முகாமைப் போல செயல்பட்ட அந்த பகுதியில் சுமார் 5,000 பேர் வாழ்ந்தனர். அவர்களில் சிலர் மடகாஸ்கரில் இருந்து அழைத்து வரப்பட்ட அடிமைகள். மற்றவர்கள் சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட கூலித் தொழிலாளிகள். அவர்கள் ஒவ்வொரு வருடமும் அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான கப்பல்களை பராமரித்து வந்தார்கள்," என்று தனது 'டெரிபிள் எக்ஸைல், தி லாஸ்ட் டேஸ் ஆஃப் நெப்போலியன் ஆன் செயிண்ட்.ஹெலெனா' (Terrible Exile, The last days of Napoleon on St.Helena) புத்தகத்தில் எழுதியிருக்கிறார் ப்ரையன் அன்வின்.
செயின்ட் ஹெலனாவில் அவர் போர்க்கைதியாக வைக்கப்படுவார் என்று நெப்போலியனிடம், அட்மிரல் லார்ட் கீத், 1815-ம் ஆண்டு ஜுலை 31 அன்று கூறினார்.
இதைக் கடுமையாக எதிர்த்த நெப்போலியன், தனக்கு பிரிட்டனிலேயே தங்க அனுமதி அளிப்பதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகக் கூறினார்.
இந்தத் தகவலைக் கேள்விப்பட்டதும் தனது கப்பலின் கேபினுக்குச் சென்ற நெப்போலியன் அடுத்த மூன்று நாட்கள் வெளியே வரவில்லை. நான்காம் நாள் பிரிட்டன் அரசுக்குத் தன் எதிர்ப்பை முறையாகக் கடிதம் எழுதித் தெரிவித்தார் நெப்போலியன்.
'நெப்போலியன் தி மேன் பிஹைண்ட் தி மித்' (Napoleon the man behind the myth) என்ற தனது புத்தகத்தில், "மொத்தம் 27 பேர் நெப்போலியனுடன் செயின்ட் ஹெலனாவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் கப்பலில் ஏறும்போது நெப்போலியனும், அவரது குழுவினரும் முழுமையாக சோதிக்கப்பட்டனர். நிறைய செல்வம் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதை ஏற்கெனவே யூகித்திருந்த நெப்போலியன், அனைவரது இடுப்பில் உள்ள பெல்ட்களுக்குள் தங்க நாணயங்களைக் கட்டி மறைத்து எடுத்துச் சென்றார்," என்று குறிப்பிடுகிறார் ஆடம் ஸெமோவ்ஸ்கி.
இந்த நீண்ட பயணத்தில் அவர் கடல் பயணத்தின் பல துன்பங்களையும் எதிர்கொண்டார். தனது அறையிலே தங்கி நிறைய வாசித்தார். மாலுமிகளுடன் பேசி தனது ஆங்கிலத்தை மேம்படுத்த முயற்சித்தார். அக்டோபர் 24-ம் தேதி, செயின்ட் ஹெலனா தீவு நெப்போலியனின் கண் முன்னால் விரிந்தது.
இந்தத் தீவின் பரப்பளவு 122 சதுர கி.மீ. 1502-ஆம் வருடம் போர்த்துக்கீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது இந்தத் தீவு. 1815-ஆம் ஆண்டு வாக்கில் இங்கே 3395 ஐரோப்பியர்கள், அடிமைகளாக அழைத்துவரப்பட்ட 218 கறுப்பினத்தவர், 489 சீனர்கள், 116 இந்திய மற்றும் மலேசிய நாட்டு மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
ஒரு ராணுவ ஆளுநர், இந்தத் தீவை ஆட்சி செய்தார். ஒரு சிறிய பிரிட்டிஷ் படை அங்கே நிலை கொண்டிருந்தது.
ஆரம்பத்தில் 'தி ப்ரையர்' என்ற பெயர் கொண்ட ஆங்கிலேயர்களின் எஸ்டேட் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தார் நெப்போலியன். சில நாட்களுக்குப் பிறகு அவர் லாங்வுட் ஹவுஸுக்கு மாற்றப்பட்டார்.
"மிகத் தீவிரமான கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார் நெப்போலியன். அவர் தோட்டத்துக்குச் சென்றால் கூட ஒரு பிரிட்டன் ராணுவ வீரர் உடன் வருவார். இந்தத் தீவின் ஆளுநராக ஹட்சன் லோவ் வந்த பிறகு நெப்போலியனுக்கான கட்டுப்பாடுகள் இன்னும் அதிகரித்தன. 1816-ஆம் ஆண்டுக்குள் பிரிட்டன் அரசு தரப்புடனான அவரது உறவு மேலும் மோசமானது," என்று எழுதுகிறார் ப்ரையன் அன்வின்.
ஆங்கிலேயர்கள், அவருக்காக ஒரு புது வீடு கட்ட ஆரம்பித்தபோது, இனி வாழ்நாள் முழுவதும் செயின்ட் ஹெலனாவில் தான் கழிக்க வேண்டும் என்பதை உணர்ந்தார் நெப்போலியன்.
நடை பயிற்சியும் சீட்டு விளையாட்டும்நெப்போலியன் லாங்வுட் ஹவுஸில் வாசிப்பதிலேயே தன் பெரும்பாலான நேரத்தைக் கழித்தார். ஐரோப்பாவில் இருந்து வரும் கப்பல்கள் தனக்கான புத்தகங்களைக் கொண்டு வருவதற்காக அவர் காத்திருப்பார்.
நெப்போலியனின் இரண்டாவது பொழுதுபோக்கு தன்னை சந்திக்க வரும் நபர்களை நல்ல உணவும், ஒயினும் கொடுத்து உபசரிப்பது.
"விருந்தோம்பலுக்காக அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியைவிட மிக அதிகமாகத்தான் பணம் செலவழிப்பார் நெப்போலியன். அவர் மதுபானத்தை அதிக அளவில் குடிக்கவும் செய்தார், பரிமாறவும் செய்தார்.
1816-ஆம் ஆண்டில் மட்டும் 830 மிக விலை உயர்ந்த ஒயின் பாட்டில்கள் உட்பட 3700 ஒயின் பாட்டில்கள் அவருக்கு அனுப்பப்பட்டிருந்தன. குதிரை சவாரி செய்வது அல்லது 'தி ப்ரையர்' தோட்டங்களில் நடப்பது போன்ற நடவடிக்கைகளால் தனது உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தார் நெப்போலியன்.
கேப்டன் பாப்பிள்டன் எப்போதும் அவருடன் இருப்பார். நெப்போலியன் மீது ஒரு கண் வைத்துக் கொள்ளும் பொறுப்பு அவருடையது. பல மாலை நேரங்களை தனது நண்பர் பால்கம்முடன் சீட்டு விளையாடிக் கழித்தார் நெப்போலியன்." என்று தான் எழுதிய நெப்போலியனின் சரிதையில் குறிப்பிட்டிருக்கிறார் ஜான் பால் பார்டு.
நெப்போலியன் வைக்கப்பட்டிருந்த லாங்வுட் ஹவுஸில் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தன.
"அங்கே பெயிண்ட் அடிக்கப்படும் வாசம், தன் உடல்நிலையை மோசமாக்குவதாகக் கூறினார் நெப்போலியன். செயின்ட் ஹெலனாவில் உள்ள வானிலையும், அதன் சூழலும் நெப்போலியனுக்கும், அவரது குழுவினருக்கும் வெறுப்பை வரவழைத்தது," என்று எழுதுகிறார் ஆடம் ஸெமோவ்ஸ்கி.
"நெப்போலியனுடன் சென்றிருந்த அதிகாரிகள் அவர் முன்னிலையில் முழு அரச நெறிமுறைகளைப் பின்பற்றினர். பகல் நேரத்தில் பச்சை நிற ஹண்டர் கோட் வகை உடையையோ அல்லது வெள்ளை லினென் துணியில் கோட்டும் பேண்டுமோ அணிந்திருப்பார் நெப்போலியன்.
இரவு உணவின் போது முழு ராணுவ உடையில் இருப்பார் அவர். அவருடன் இரவு உணவருந்தச் செல்லும் பெண்கள் அரசவை உடைகளையும், நகைகளையும் அணிந்திருந்தனர். உணவுக்குப் பிறகு அவர்கள் சீட்டு விளையாடுவார்கள் அல்லது பேசுவார்கள். இல்லையென்றால் நெப்போலியன் ஏதாவது புத்தகம் வாசிக்க அதை அவர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள்."
நெப்போலியனின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டதுகண்காணிப்பில் இருந்தபோதும் தோட்டவேலை செய்வதை பொழுதுபோக்காகச் செய்தார் நெப்போலியன். இரண்டு சீனத் தொழிலாளிகள் அவருக்கு உதவியாக இருந்தனர். தாவரங்களுக்குத் தனது கைகளாலேயே நீர் ஊற்றுவார் நெப்போலியன். முழுமையாகப் பார்த்தால் நெப்போலியன் ஒரு குற்றவாளியைப் போலவோ, போர்க்கைதியைப் போலவோ நடத்தப்படவில்லை. நடக்கவோ, குதிரை சவாரி செய்யவோ அனுமதிக்கப்பட்டாலும் அதுவும் ஒரு எல்லை வரைதான். அந்த சமயத்திலும் ஒரு பிரிட்டன் அதிகாரி அவருடன் இருப்பார். வீட்டுக்குள் இருந்த போதும் அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் ராணுவ வீரர்கள் யாராவது கண்காணித்துக் கொண்டுதான் இருந்தனர்.
ஒருநாளைக்கு இரண்டு முறை அவர் அங்குதான் இருக்கிறார் என்று உறுதிப்படுத்திக் கொள்ள ஒரு அதிகாரி வருவார்."இரண்டு கப்பல்கள் எப்போதும் தீவை சுற்றிக் கொண்டே இருந்தன. நெப்போலியனுக்கு எந்த செய்தித்தாள்களும் வழங்கப்படவில்லை. செயின்ட் ஹெலனாவை விட்டு நெப்போலியன் தப்பிக்க நினைத்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை," என்று தனது டைரியில் எழுதியிருக்கிறார் செயின்ட் ஹெலனாவின் ஆளுநராக இருந்த ரியர் அட்மிரல் சர் ஜார்ஜ் காக்பர்ன்.
ஆனால் அதற்கு நேர்மாறாக அந்த சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு அதை அனுபவிக்கவும் ஆரம்பித்தார் அவர். அங்கு இருந்த பிரிட்டன் அதிகாரிகள் அனைவரிடமும் மரியாதையாக நடந்து கொண்டார் அவர். அந்தத் தீவுக்கு வரும் அல்லது அந்தத் தீவின் வழியாகச் செல்லும் பிரிட்டன் ராணுவ வீரர்களுக்கு நெப்போலியனை நேரில் பார்க்க முடிவதென்பது அந்தத் தீவின் கவர்ச்சிகளுள் ஒன்றாக இருந்தது. அவர்களுடனும் நெப்போலியனின் பழக்க வழக்கம் நன்றாகத்தான் இருந்தது.
ஆனால், அந்தத் தீவில் மோசமான நிலையில் நெப்போலியன் வைக்கப்பட்டிருப்பதாக பிரிட்டன் செய்தித்தாள்களில் செய்தி பரவியது.
அட்மிரல் காக்பர்னுக்கு பதிலாக 1816-ஆம் ஆண்டு மேஜர் ஜெனரல் சர் ஹட்சன் லோவ், செயின்ட் ஹெலனாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் இருந்தே நெப்போலியனுக்கும், லோவுக்கும் எதிலும் உடன்பாடில்லை.
"புதிய ஆளுநர் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் லாங்வுட் ஹவுஸுக்கு வந்த போது நெப்போலியன் அவரை சந்திக்க மறுத்துவிட்டார். அடுத்தநாள் அவரை சந்திப்பதாக செய்தி அனுப்பினார் நெப்போலியன். மறுநாள் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஆனால் அந்த நிமிடத்தில் இருந்தே நெப்போலியனுக்கு லோவைப் பிடிக்கவில்லை. லோவும், நெப்போலியனுக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்தார் " என்று எழுதினார் ஆடம் ஸெமோய்ஸ்கி.
நெப்போலியனைப் பெரிதும் மதித்த ஆங்கிலேயர் ஒருவர் நெப்போலியனுக்கு இரண்டு அட்டைப் பெட்டிகள் நிறைய புத்தகங்கள் அனுப்பினார். அதைப் பறிமுதல் செய்தார் லோவ். நெப்போலியனின் பயன்பாட்டுக்கு என்று சில பொருட்களை அனுப்பி வைத்தார் அவரது தங்கை பாலின். நெப்போலியனுக்கு இவ்வளவு பொருட்கள் தேவையில்லை என்று சொல்லி அவை அனைத்தையும் நெப்போலியனிடம் சென்று சேரவிடாமல் தடுத்துவிட்டார் லோவ்.
லோவுக்கும், நெப்போலியனுக்கும் இடையே வலுத்த மோதல்இதற்கிடையே லோவுக்கும், நெப்போலியனுக்கும் இடையே இரண்டு சந்திப்புகள் நிகழ்ந்தன. "நெப்போலியன் இந்த சந்திப்புகள் முழுவதும் நின்று கொண்டே இருந்தார். ஒரு பேரரசர் நிற்கும்போது அவர் முன் அமர்வது வழக்கமில்லை ஆதலால் லோவும் நின்று கொண்டே இருக்க வேண்டிய சூழல் வந்தது. நெப்போலியனின் செலவுகளைக் குறைக்கச் சொல்லி லோவுக்கு செய்தி வந்தது. இதைப் பற்றி லோவ் நெப்போலியனுடன் பேச விரும்பிய போது, தனது பட்லரிடம் இதைப் பற்றிப் பேசிக்கொள்ளும்படி கூறினார் நெப்போலியன்," என்று தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் தாமஸ் ஆப்ரி.
1816-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி அன்று லோவ் நெப்போலியனைச் சந்திக்கச் சென்ற போது , லோவை நீ வெறும் கணக்கர்தான் வேறு ஒன்றுமில்லை என்று பொறுமித் தள்ளினார் நெப்போலியன்.
நெப்போலியனின் வாழ்க்க வரலாற்றை எழுதிய கில்பர்ட் மார்ட்டினோ, "நெப்போலியன் லோவிடம், நீ ஒரு கௌரவமான மனிதன் இல்லை. மற்ற மனிதர்களின் கடிதங்களை ரகசியமாகப் படிக்கும் மனிதன் நீ. நீ ஒரு சாதாரண சிறை அதிகாரிதான், ராணுவ வீரன் இல்லை. என் உடல் வேண்டுமானால் உன் கைகளில் இருக்கலாம். ஆனால் என் ஆன்மா சுதந்திரமாக இருக்கிறது என்று கூறினார் நெப்போலியன்" , என்கிறார்.
இதைக் கேட்டதும் லோவின் முகம் சிவந்தது. அவர் நெப்போலியனிடம், "நீங்கள் ஒரு அபத்தமான மனிதர். உங்கள் முரட்டுத்தனம் பரிதாபகரமானதாக இருக்கிறது," என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.
அதன் பிறகு நெப்போலியன் உயிருடன் இருக்கும்வரை அவரைச் சந்திக்க லோவ் செல்லவில்லை.
இதன்பிறகு நெப்போலியனின் மன உறுதி குலைந்து போனது. ஒரே மாதிரியான வாழ்க்கை, மோசமான வானிலை, மோசமான உணவு, வாசல் மற்றும் ஜன்னல் அருகே நிற்கும் காவலர்கள், எங்கு சென்றாலும் கட்டுப்பாடுகள் மற்றும் தொடர்ச்சியாக உடல்நலம் சரியில்லாமல் போவது ஆகியவை நெப்போலியனை மோசமாக பாதித்தது.
தான் எங்கு செல்ல விரும்பினாலும் அதற்கு லோவ் கட்டுப்பாடுகள் விதித்ததால் நடை பயிற்சி செய்வதையும், குதிரை சவாரி செய்வதையும் நிறுத்திவிட்டார் நெப்போலியன்.
1816-ஆம் ஆண்டின் இறுதியில் நெப்போலியனுக்குக் காய்ச்சலும் இருமலும் வந்தது. பல நாட்கள் தன் உடைகளை மாற்றாமலோ அல்லது அறையில் இருந்து வெளிவராமலோ கழித்தார் நெப்போலியன்.
"நெப்போலியனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போன போது, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே மறுத்தார் ஆளுநர் லோவ். பின்னர் ஒரு நல்ல ராணுவ அல்லது கடற்படை மருத்துவர் ஒருவரை அனுப்பி வைப்பதாக லோவ் கூறிய போது நெப்போலியன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஆளுநருக்காக ஒற்று வேலை பார்ப்பார்கள் என்று அவர் நம்பினார். பின்னர் அவர் ஹெச் எம்எஸ் கான்கொயரர் கப்பலின் டாக்டர் ஜான் ஸ்டோக் தன்னை வந்து பார்க்க அவர் அனுமதித்தார்."
52 வயதில் இறந்து போனார் நெப்போலியன்1819-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நெப்போலியன் ஹெபடைடிஸ் நோயால் அவதிப்படுவதைக் கண்டுபிடித்தார் டாக்டர் ஸ்டோக். அப்போது பிரிட்டனின் பிரதமராக இருந்த லார்ட் லிவர்பூலுக்கு, இதைப் பற்றி, ஏப்ரல் மாதம் தெரியப்படுத்தினார் ஸ்டோக். ஆனால் நெப்போலியனுக்கு உடலுக்கு ஒன்றுமில்லை என்று பிரதமரை நம்ப வைத்தார் லோவ்.
வசந்த காலத்துக்குள் நெப்போலியன் ஒரு மோசமான வியாதியால் தாக்கப்பட்டார். அது ஒருவேளை புற்றுநோயாகவோ அல்லது அல்சரின் காரணமாக ஏற்பட்ட ரத்தப்போக்காகவோ இருக்க வேண்டும். ஏப்ரல் கடைசி வாரத்தில் நெப்போலியன் ரத்த வாந்தி எடுக்கத் தொடங்கினார்.
வெளிச்சம் நிறைய இருப்பதால் தனது படுக்கையை வரவேற்பறைக்கு மாற்றும்படி அவர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு நாளும் உடல்நிலை மோசமடைந்த அவர் பலமுறை மயக்கமடைந்தார்.
1821-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு தனது இறுதி மூச்சை சுவாசித்தார் நெப்போலியன்.
பின்னாட்களில் அவரது மரணத்துக்கான காரணங்கள் குறித்து ஒரு சர்ச்சை எழுந்தது. "அவர் தலைமுடியில் ஆர்செனிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடன் சென்ற கூட்டாளிகளில் ஒருவரான மார்சென், அவரது சில தலைமுடிகளை , ஞாபகார்த்தமாக எடுத்து வைத்திருந்தார். அதைப் பின்னர் அறிவியல் ரீதியாகப் பரிசோதித்த போது, நெப்போலியனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நிரூபிக்கப்பட்டது," என்று நெப்போலியனைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றில் எழுதுகிறார் ஆலன் ஃபாரஸ்ட்.
தான் இறந்த பிறகு பாரீஸில் புதைக்கப்பட வேண்டும் என்று தனது இறுதிநாட்களில் ஆசை தெரிவித்தார் நெப்போலியன். அப்போதைய பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால் அவரை செயின்ட் ஹெலனாவிலேயே புதைக்க முடிவு செய்யப்பட்டது. நெப்போலியனின் அரச பாதுகாவலர்களான 12 வீரர்கள் அவரது உடலைப் புதைப்பதற்காக எடுத்துச் சென்றபோது ஒட்டுமொத்த செயின்ட் ஹெலனா தீவின் மக்களும் இந்தக் காட்சியைக் காண வந்தது.
அவரது சவப்பெட்டி நீல வெல்வெட் துணியால் மூடப்பட்டிருந்தது. அதன் மேலே அவரது வாளும், கடிகாரமும் வைக்கப்பட்டிருந்தன.
அவர் புதைக்கப்பட்டு 18 ஆண்டுகள் கழித்து பிரான்ஸ் அரசராக இருந்த லூயி ஃபிலிப் ஆணையின் பேரில், செயின்ட் ஹெலனாவில் இருந்த அவரது கல்லறையில் இருந்து உடல் தோண்டி எடுக்கப்பட்டு , பாரீஸில் முழு அரச மரியாதையுடன் மறுஅடக்கம் செய்யப்பட்டது.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு