இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராத் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
அவரது ஓய்வு செய்தியைக் கேட்டு ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் தேசிய தேர்வாளர் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது கடந்த 2008ஆம் ஆண்டு, வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆஸ்திரேலிய போட்டியில் சதம் விளாசிய கோலியின் ஆட்டம், முன்னாள் கிரிக்கெட் வீரரும், அப்போது தேர்வாளர் குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கரை மிகவும் கவர்ந்தது.
இதனையடுத்து, அவர் நேரடியாக கோலியை ஒருநாள் அணிக்குத் தேர்வு செய்யக் கூறினார். ஆனால், அப்போது சிலர் “ஒரு இளம் வீரரை சர்வதேச சுற்றுப்பயணத்திற்கு எவ்வாறு தேர்வு செய்யலாம்?” என விமர்சனம் செய்தனர். ஆனால், வெங்சர்க்கரின் உறுதியால், 2008 ஆகஸ்ட் 18ஆம் தேதி இலங்கைக்கு எதிரான போட்டியில் கோலி தனது சர்வதேச பயணத்தை தொடங்கினார். இந்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.