இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கிக்கொண்ட போது, வெளிப்படையாக இந்தியாவுக்கு ஆதரவாக நின்ற ஒரே நாடு இஸ்ரேல் தான்.
இஸ்ரேலிய ட்ரோன்கள் மூலம் இந்தியா தாக்குவதாக பாகிஸ்தான் கூறியது. பஹல்காமில் தாக்குதல் நடைபெற்று இரண்டு நாட்கள் கழித்து, ஏப். 22ஆம் தேதி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் மோதியை தொலைபேசியில் அழைத்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
அதுமட்டுமல்லாமல், தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான முழு உரிமை இந்தியாவுக்கு உள்ளது என, இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் தெரிவித்திருந்தார். இஸ்ரேல் ஏற்கெனவே முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்நாடு வெளிப்படையாக இந்தியாவை ஆதரிக்கிறது. இந்தியாவுடன் வரலாற்று ரீதியாக கூட்டாளியாக உள்ள ரஷ்யா கூட, இந்த விவகாரத்தில் இஸ்ரேலை போன்று இந்தியாவை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை.
பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது, இருநாடுகளும் அமைதியை கடைபிடிக்குமாறு ரஷ்யா கேட்டுக்கொண்டது. இதனால் சமூக ஊடக பயனர்கள் சிலர் ஆச்சர்யமடைந்தனர், ஆனால் 1971ம் ஆண்டில் பாகிஸ்தானுடனான போரின் போது சோவியத் ஒன்றியம் தற்போதைய நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை. நிச்சயமாக, உலகம் அதற்கு பின் நிறைய மாறிவிட்டது.
ஆனால், 2014ம் ஆண்டில் நரேந்திர மோதி பிரதமரான பிறகு, இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையே சுமூகமான உறவு நிலவியது. இஸ்ரேலுக்கு பயணித்த முதல் இந்திய பிரதமரானார் நரேந்திர மோதி.
பெரும்பாலும் அனைத்து உலக நாடுகளும் இந்த விவகாரத்தில் நடுநிலையாக காட்டிக்கொள்ள முயற்சித்த போது, இஸ்ரேல் மட்டும் இந்தியாவை வெளிப்படையாக ஆதரித்தது ஏன்?
சௌதி அரேபியாவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் தல்மிஸ் அகமது கூறுகையில், இந்தியாவில் தற்போது அதிகாரத்தில் உள்ள கட்சி, இஸ்ரேலுடன் நெருக்கமான சித்தாந்தத்தைக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "இந்தியாவுடன் இஸ்ரேலுக்கு பல்லாண்டு கால உறவு உள்ளது. இந்துத்வாவுக்கும் இஸ்ரேலின் சியோனிச இயக்கத்துக்கும் (யூத தேசியம்) சித்தாந்த ரீதியாக ஒற்றுமை உள்ளது. இந்தியாவுடன் இஸ்ரேலுக்கு சிறப்பு வாய்ந்த உறவு உள்ளது. இந்தியாவை தனக்கு நெருக்கமாக கொண்டு வருவதற்கு இஸ்ரேல் முயற்சித்து வருகிறது. இந்தியா செய்வது சரியானது என, இஸ்ரேலிய தூதர் பலமுறை பொதுவெளியில் கூறியுள்ளார். இந்தியா மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பும் அதிகரித்துள்ளது." என்றார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இஸ்ரேலிய ட்ரோன்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுவது குறித்து, ஆங்கில செய்தி இணையதளமான டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் எழுதுகையில், "இது வியூக முக்கியத்துவத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை, இந்தியா மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான வியூக ரீதியிலான வளர்ந்து வரும் உறவின் ஆழத்தையும் குறிக்கிறது. கடந்த சில தசாப்தங்களாக இந்தியா-இஸ்ரேல் உறவுகள் முதிர்ச்சி அடைந்திருப்பதை இது காட்டுகிறது." என்றார்.
ஜெருசலேம் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஸ்டிரேட்டஜி அண்ட் செக்யூரிட்டி நிறுவனத்தின் மூத்த ஆய்வறிஞரான முனைவர் ஓஷ்ரித் பிர்வாட்கர் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலுக்கு அளித்த பேட்டியில், "வியூக ரீதியாக இந்தியாவுக்கு இஸ்ரேல் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக பாகிஸ்தானுடன் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் இந்தியா இஸ்ரேலிடமிருந்து அதிக உதவிகளைப் பெற்று வருகிறது." என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "இஸ்ரேலிய ஏரோஸ்பேஸ் நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்பு கட்டமைப்புகளை வாங்குவதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இஸ்ரேலின் மேம்பட்ட டிரோன்கள் காரணமாக, இந்தியாவின் கண்காணிப்பு திறன் அதிகரித்துள்ளது. இஸ்ரேலைப் பொறுத்தவரை இந்தியா முக்கியமான சந்தையாக மட்டுமல்லாமல், பொதுவான அக்கறைகளை கொண்ட கூட்டாளியாகவும் உள்ளது. குறிப்பாக, பயங்கரவாதம், எல்லைப் பாதுகாப்பு மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் ஆகிய விவகாரங்களில் ஒத்த கருத்துடையவையாக உள்ளன." என்றார்.
இந்து மதமும், யூத மதமும் இணைந்து இஸ்லாத்தை அழித்தொழிப்பதாக இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நட்புறவு குறித்து நீண்ட காலமாக ஒரு கதை பரப்பப்பட்டு வருவதாக முனைவர் பீர்வத்கர் கூறுகிறார்.
"2023ம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்தியபோது, பல ஐரோப்பிய நாடுகளும் பாரம்பரிய நட்பு நாடுகளும் ஆயுதங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் இந்தியா வெளிப்படையாக எங்களுக்கு ஆதரவளித்தது. ராஜ்ஜீய ரீதியிலான ஆபத்துகள் மற்றும் சர்வதேச விமர்சனங்களை மீறி இந்தியா இதைச் செய்தது."என்று அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலை ஒரு நாடாக பாகிஸ்தான் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இவ்வாறான நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் ராஜ்ஜீய ரீதியிலான உறவுகள் இல்லை. பாகிஸ்தானுக்குள் இஸ்ரேலுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் அனுதினமும் நடந்து வருகின்றன.
இந்தியா ஆகஸ்ட் 15, 1947 இல் சுதந்திர நாடாகவும், இஸ்ரேல் மே 14, 1948 இல் சுதந்திர நாடாகவும் உருப்பெற்றன.
ஆனால் இந்தியாவும் இஸ்ரேல் உருவாவதற்கு எதிராக வாக்களித்தது.
பாலத்தீனம் இல்லாத இஸ்ரேலை உருவாக்க ஜவஹர்லால் நேரு எதிர்ப்பு தெரிவித்தார்.
1950ல் இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தாலும், தூதரக உறவுகளை ஏற்படுத்த 42 ஆண்டுகள் ஆனது. இதை 1992ல் பி.வி.நரசிம்ம ராவ் உருவாக்கினார்.
1988ல் பாலத்தீனத்தை அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடு இந்தியா.
மறுபுறம், அரபு அல்லாத நாடாக, இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா நீண்ட காலமாக வலிமையாக குரல் எழுப்பி வருகிறது.
ராஜ்ஜீய ரீதியிலான புறக்கணிப்பு முடிவுக்கு வந்ததற்குப் பிறகு, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மேலும் ஆழமடைந்தன.
பி.வி. நரசிம்மராவ் அதனை முடிவுக்கு கொண்டு வந்தார் என்றாலும், அந்த உறவுகளை பாஜக அரசு வளர்ச்சி பெறச் செய்தது .
2003-ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தான் இஸ்ரேல் பிரதமர் இந்தியாவுக்கு முதன்முதலாக வருகை தந்தார். அப்போது ஏரியல் ஷரோன் இந்தியா வந்திருந்தார். இஸ்ரேலுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தான்.
2008ல் இந்திய பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங் இஸ்ரேலுக்குப் பயணம் செய்தார்.
இஸ்ரேலின் தாராளவாத செய்தித்தாள் ஹாரேட்ஸ் (Haaretz) இந்த பயணம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மதிப்பீடு செய்தது.
"இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரிக்கும் போது அல்லது இந்திய அரசியலில் வலதுசாரிகளின் எழுச்சி அல்லது அதன் தலைமைத்துவத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வு அதிகரிக்கும் போது இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகள் வலுவடைகின்றன."என்று இந்த செய்தித்தாள் தனது பகுப்பாய்வில் குறிப்பிட்டது.
"1999 இல் கார்கிலில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியபோது, இஸ்ரேலுடனான தூதரக உறவை இந்தியா மேலும் வலுப்படுத்தியது.
ஊடக அறிக்கையின்படி, அந்த நேரத்தில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் அமோஸ் யாரோன் அவசர ஆயுதங்களுடன் இந்தியா வந்தார்." என்று இஸ்ரேலிய செய்தித்தாள் தனது பகுப்பாய்வில் பதிவு செய்தது.
அரபு நாடுகளுடன் நல்லுறவைக் கொண்டிருந்தாலும், காஷ்மீர் விவகாரத்தில் அரபு லீக்கின் ஆதரவை இந்தியா பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தில் அரபு லீக் எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றுள்ளது.
முன்னதாக 1978 இல், எகிப்து மற்றும் பிற அரபு நாடுகளுடன் கேம்ப் டேவிட் உடன்படிக்கையில் இஸ்ரேல் கையெழுத்திட்டது.
இதன் கீழ் சில அரபு நாடுகள் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்த முடிவு செய்தன.
இஸ்ரேல் மீதான தனது கொள்கையை இந்தியா மாற்றிக்கொள்ளவும் கேம்ப் டேவிட் ஒப்பந்தம் உதவியது.
பிரபல ராஜதந்திரியும், இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளருமான ஜே.என். தீக்ஷித் தனது 'My South Block Years: Memories of a Foreign Secretary' புத்தகத்தில், "இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்துவதற்கு சில அரபு நாடுகளின் தூதர்கள் எதிர்ப்பு தெரிவித்து, இதன் விளைவுகளை இந்தியா சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறினர்.
ஆனாலும், அவர்களின் எதிர்ப்புக்கு நேரடியாக பதிலளிக்க வேண்டியது மற்றும் எங்களின் நிலையை அங்கீகரிக்க வேண்டியது என நாங்கள் முடிவெடுத்தோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"சர்வதேச விவகாரங்களில் இந்தியா பல இஸ்லாமிய நாடுகளை ஆதரித்தாலும், காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. மேலும், இந்தியா தனது இறையாண்மையில் எந்த விதமான தலையீடு ஏற்பட்டாலும் தாழ்ந்துவிடாது, அதன் நலன்களுக்காக தொடர்ந்து பாடுபடும் என்றும் கூறினேன்.
அரபு உலக ஊடகங்களில் இந்தியா கடுமையாக விமர்சிக்கப்பட்டது. சிலர் இந்தியாவின் இந்த முடிவு குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் இதன் மூலம் இந்தியா மற்றும் அரபு நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தீட்சித் எழுதியுள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, மத்திய கிழக்கு மற்றும் அரபு இஸ்லாமிய நாடுகளுடன் ஆழமான தொடர்புகள் வைத்திருந்தது.
ஆனாலும் காஷ்மீர் விவகாரத்தில், அந்த நாடுகள் பெரும்பாலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே இருந்தன.
1969ஆம் ஆண்டில் மொராக்கோவின் ரபாத் நகரில் இஸ்லாமிய நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவும் அழைக்கப்பட்டது.
ஆனால் பாகிஸ்தானின் எதிர்ப்பை அடுத்து இந்தியாவுக்கான அழைப்பு திரும்பப் பெறப்பட்டது.
மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்ததைக் கருத்தில் கொண்டு, இந்தியா இஸ்ரேலை அணுகத் தொடங்கியது என்று பலர் நம்புகிறார்கள். இஸ்ரேல் ஒரு ஜனநாயக நாடு என்பதும் இந்தியாவின் வாதமாக இருந்தது.
இப்போது, இந்தியா இஸ்ரேலைப் பற்றிய விவகாரங்களில் எந்த அளவிலும் தயக்கம் காட்டாமல் செயல்படுகிறது.
ஜூலை 2017 இல், பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரேலுக்குப் பயணம் செய்தார், இதுவே ஒரு இந்தியப் பிரதமரின் முதல் இஸ்ரேல் பயணமாக இருந்தது. இதுவரை, இந்தியாவில் இருந்து எந்த உயர்மட்டத் தலைவர் இஸ்ரேல் சென்றாலும், கண்டிப்பாக பாலத்தீன பகுதிக்கு செல்வது வழக்கம்.
ஆனால் மோதி இந்த பயணத்தில் பாலத்தீன பகுதிக்கும் செல்லவில்லை, பாலத்தீனர்களின் பெயரையும் ஒருமுறை கூட குறிப்பிடவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு