இன்று மாலை சபரிமலையில் நடைதிறப்பு... மே 19ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகை
Dinamaalai May 14, 2025 02:48 PM

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாத தொடக்கத்தில் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி வைகாசி (இடவம்) மாத தரிசனத்திற்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.

தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு ஆகியோர் தலைமையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதரி நடைதிறக்க உள்ளார். மங்கல இசை முழங்க கோயில் நடை திறக்கப்பட்டு, ஆழிக்குண்டத்தில் அக்னி ஏற்றப்படும். பின்னர், ஐயப்பன் விக்கிரகத்தில் உள்ள விபூதி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து பூஜை எதுவுமின்றி நடை சாத்தப்படும்.

இதனைத் தொடர்ந்து நாளை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு வரும் மே 19ம் தேதி வரை தொடர் வழிபாடுகள் நடைபெற உள்ளன.

மே 19ல் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சபரிமலைக்கு வருவதாக இருந்தது. இதற்காக 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக குடியரசுத் தலைவரின் பயணம் தள்ளி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, அந்நாட்களுக்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு தொடங்கப்பட்டது.

இந்நிலையில் திட்டமிட்டபடி வரும் 19ம் தேதி குடியரசுத் தலைவர் சபரிமலைக்கு வர உள்ளதாக தெரிகிறது. இதற்காக 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான தரிசன முன்பதிவு மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேவசம் போர்டு அதிகாரிகள் கூறும் போது, "குடியரசுத் தலைவர் வர உள்ளதால், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்நாட்களில் பக்தர்களுக்கான தரிசனம் இருக்காது" என்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.