#featured_image %name%
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததால் துருக்கியைப் புறக்கணிப்போம் என்று இந்தியர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். அதனால் துருக்கிக்கு செல்ல இருந்த சுற்றுலாவை ரத்து செய்து, ஆப்பிள்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய இந்தியர்கள் இப்போது மேலும் ஒரு முக்கியமான இறக்குமதியை நிறுத்தியுள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாதச் சம்பவத்துக்குப் பின்னர், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை மட்டும் குறிவைத்து, அவர்களைக் களையெடுக்கும் நோக்கில் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர்க்குப் பின், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் களம் இறங்கியது. அது, சீனா கொடுத்த ஏவுகணைகள், துருக்கி அளித்த ட்ரோன்களைக் கொண்டு, இந்தியாவின் மீது தாக்கியது.
இந்தத் தாக்குதலை இந்திய வான் பாதுகாப்பு சாதனம் மூலம் இந்தியா தடுத்து விட்டாலும், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்புற கிராமங்களில் ஓரிரண்டு விழுந்து அங்கே வசிக்கும் கிராம மக்களின் வீடுகளைப் பதம் பார்த்தது. சிலர் இதில் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் அப்பாவிப் பொதுமக்களை நோக்கி அதிகளவில் இருந்த போது, இந்திய ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டு, இந்தியப் பகுதிகளில் விழுந்த ட்ரோன்களின் பாகங்களை ஆய்வு செய்த போது, அவை துருக்கியில் தயாரானவை என்பது தெரியவந்தது.
அதே நேரம், துருக்கியில் இருந்து ஒரு விமானத்தில் மேலும் அதிக எண்ணிக்கையில் ட்ரோன்கள் பாகிஸ்தானுக்கு வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் துருக்கியோ, எரிபொருள் நிரப்ப அந்த விமானம் பாகிஸ்தானுக்குள் வந்ததாக ஒரு கதையைப் பரப்பியது. ஆனால், துருக்கியின் விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தளவாடங்கள் வந்ததாகவே அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.
Also Read:
முன்னதாக, அண்மையில் துருக்கியில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தை அடுத்து, அந்நாட்டுக்கு முதல் நாடாக மனிதாபிமானப் பொருள்கள் கொண்டு சென்று, உதவிக்கு ராணுவத்தினரையும் அனுப்பி வைத்த இந்திய நாட்டுக்கு, துருக்கி மிகச் சரியான நன்றிக்கடனை காட்டி விட்டது என்று, இந்தியாவில் பொதுமக்கள் பொருமித் தள்ளினர். இது போன்ற நாடுகளுக்கு இந்தியா கருணை அடிபடையில் உதவிகள் வழங்குதை நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் பலமாக எதிரொலித்தன.
இதனிடையே, பாகிஸ்ஹான் மீதான இந்தியாவின் தாக்குதலில் இரண்டு துருக்கி வீரர்களும் உயிரிழந்ததாக உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதனால் பெரிதும் உணர்ச்சி வசப்பட்ட பலர், துருக்கியைப் புறக்கணிப்போம் என்ற வாசகங்களுடன் தங்கள் கருத்தைப் பதிவு செய்து வருகின்றனர். அதில் முதலாவதாக, துருக்கி நாட்டுக்கு இந்தியாவின் பெரிய பங்களிப்பு சுற்றுலாதான். எனவே இந்தியர்கள் துருக்கி நாட்டுக்கு சுற்றூலா செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதை ஏற்று, இந்திய சுற்றுலா நிறுவனங்கள் துருக்கிக்கான சுற்றுலாவுக்கு இனி புக்கிங் செய்யப் போவதில்லை என அறிவித்தது. இதை அடுத்து, துருக்கி சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், இந்தியர்கள் எப்போதும் போல் துருக்கிக்கு வரலாம், அவர்கள் பாதுகாப்பாக சுற்றுலாவை அனுபவிக்க துருக்கி துணை நிற்கும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், துருக்கிக்கு எதிராக நாடு முழுவதும் வேகமெடுத்துள்ளது #BoycottTurkey எனும் கோரிக்கை. அந்நாட்டில் இருந்து வந்த ஆப்பிளை திருப்பி அனுப்பி வருகிறார்கள், இந்திய வியாபாரிகள். துருக்கி ஆப்பிளுக்கு குட்பை சொன்னது மும்பை! துருக்கியின் துரோகச் செயலைக் கண்டித்து, மும்பை பழ வியாபாரிகள் துருக்கி ஆப்பிள்களை இறக்குமதி செய்வதில்லை என முடிவு செய்துள்ளனர். துருக்கி ஆப்பிள்களுக்கு பதில் இமாச்சல பிரதேசத்தில் இருந்தும், வேறு இடங்களில் இருந்தும் ஆப்பிள்களை வாங்குவோம். இதனால் 1,200 முதல் 1,500 கோடி ரூபாய் வரை துருக்கிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்படும் என மும்பை பழ வியாபாரிகள் கூறினர்.
இந்நிலையில், துருக்கிக்கு மேலும் ஒரு இடியாக, துருக்கியிலிருந்து இறக்குமதி செய்வதை ராஜஸ்தானின் மார்பிள் டிரேடர்ஸ் நிறுத்தி உள்ளனர். “நாங்கள் துருக்கிய மார்பிளின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்று. மேலும் துருக்கியுடனான வர்த்தகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளோம்” என்று ராஜஸ்தான் மார்பிள் டிரேடர்ஸ் கூறியுள்ளனர்.
இந்தியா சுமார் 14 முதல் 16 லட்சம் டன் மார்பிளை இறக்குமதி செய்கிறது, இதில் 70 சதவீதம் துருக்கியிலிருந்து வருகிறது. இதனால் துருக்கிக்கு பெரும் இழப்பைச் சந்திக்கும் என்று கூறுகின்றனர் ராஜஸ்தான் வர்த்தகர்கள்.
எதிரி நாடான பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகள் செய்து, ஆதரவு தெரிவித்த துருக்கிக்கு இதுவரை இந்திய அரசுத் தரப்பில் எந்தத் தகவலும் அல்லது புறக்கணிப்பு முடிவும் அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், இந்தியர்கள் தாமாக முன் வந்து துருக்கியைப் புறக்கணித்து வருகின்றனர்.
News First Appeared in