குர்கானில் வசித்து வருபவர் ரஷ்யாவைச் சேர்ந்த போலினா அக்ரவால். இந்திய ராணுவம் மற்றும் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை பாராட்டி வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் போலினா பேசியதாவது: "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நான்கு நாட்கள் போர் நடந்தபோது, ரஷ்யாவில் உள்ள எனது பாட்டி, என்னை ரஷ்யாவுக்கு திரும்பி வருமாறு அழைத்தார். ஆனால், 'இதுதான் எனது தாய் வீடு, நான் இங்கேயே இருப்பேன்' என்று அவரிடம் கூறிவிட்டேன்.
இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் இரவு பகலாக விழித்திருந்து நாட்டை காக்கின்றனர். தேசத்துக்காக தங்களது உயிரை அர்ப்பணித்த ராணுவ வீரர்களுக்கு எனது வணக்கம். அவர்கள் எல்லையில் காவல் காப்பதால்தான், நாட்டு மக்கள் இங்கு இரவில் நிம்மதியாக உறங்க முடிகிறது.
ரஷ்யா வழங்கிய அதிநவீன ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை இந்தியா கொண்டுள்ளது. எதிரி நாட்டின் ட்ரோன்கள், ஜெட் விமானங்கள் மற்றும் போர் விமானங்களை சமாளிக்கும் திறன் இந்திய ராணுவத்திற்கு உள்ளது.
பதற்றமான சூழலில் இந்திய ராணுவம் தயாராக இருந்ததை பாராட்ட வேண்டும். சுயநலமின்றி நாட்டுக்காக போரிடும் ராணுவ வீரர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். துணிச்சலான முடிவுகளை எடுத்த பிரதமர் மோடியையும் பாராட்டுகிறேன்."போலினாவின் தேசப்பற்று மற்றும் உருக்கமான பேச்சு பலரையும் கவர்ந்துள்ளது.