கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள எஸ்பிஐ பேங்கில் ஒரு வாடிக்கையாளர் கிளை மேலாளரை கன்னடத்தில் பேசுமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த கிளை மேலாளர் “நான் கன்னடத்தில் பேசமாட்டேன்…இந்தியில் மட்டுமே பேசுவேன்” என்று கூறினார். அதற்கு “இது கர்நாடக மாநிலம். வங்கி ஊழியர்கள் கன்னடத்தில் பேச வேண்டும் ” என வாடிக்கையாளர் கூறிய போது அதனை மறுத்த மேலாளர் “எஸ்பிஐ தலைவர் வந்து பேசட்டும்..அப்போதும் நான் இந்தியில்தான் பேசுவேன்…” என்று கூறினார்.
இந்த சம்பவம் அனைத்தையும் வாடிக்கையாளர் வீடியோவாக பதிவு செய்த நிலையில் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் கர்நாடகத்தில் பெரிய அளவிலான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள வங்கியின் மேலாளர் அந்த மாநில மொழியை மதிக்க மறுத்ததால் அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் இது தொடர்பாக இதுவரை எஸ்பிஐ மேலாளர்களிடமிருந்து எந்தவித அதிகாரப்பூர்வமான பதிலும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கன்னட அமைப்புகள், அரசியல் நபர்கள் மற்றும் பொதுமக்கள் மேலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழியின் முக்கியத்துவம் தொடர்பாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.