பாவூர்சத்திரம் அருகே கார் மோதி அரசுப் பேருந்து கண்டக்டர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டி காரை ஏற்றி கொன்றது அம்பலமாகியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா அடைக்கப்பட்டனம் அருகே உள்ள மேலப்பட்டமுடையார் புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 43 வயதுடைய வேல்துரை. பாபநாசம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது மனைவி பேச்சியம்மாள் என்ற உமா மற்றும் இரு குழந்தைகளுடன் அடைக்கலப் பட்டணத்தில் உள்ள மெக்கானிக் முத்து சேர்மன் என்ற சுதாகருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். சுதாகர் மனைவி 2 வருடம் முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்ததாக கூறபடுகிறது. இதனால் சுதாகரின் குழந்தைகளையும் பேச்சியம்மாள் கவனித்து வந்ததாக சொல்லபடுகிறது. இதில் சுதாகர் மற்றும் பேச்சியம்மாள் இருவருக்கும் நெருக்கம் ஆகியுள்ளது.
வேல்துரை வேலைக்கு சென்றவுடன் பேச்சியம்மாளும் சுதாகரும் கணவன், மனைவி போலவே இருந்து வந்துள்ளனர். வீட்டுக்கு வரும் நபர்கள் இவர்கள்தான் கணவன், மனைவி எனவும் நினைக்க தொடங்கினர். வேல் துரை வழக்கமாக பாவூர்சத்திரம் வரை பைக்கில் சென்று அங்கே பைக்கை நிறுத்தி அங்கிருந்து பேருந்து மூலம் தென்காசிக்கு பணிக்கு செல்வது வழக்கம். அதன்படி திங்கள் கிழமை அதிகாலையில் தனது பைக்கில் பாவூர்சத்திரம் நோக்கி வேல்துரை நெல்லை தென்காசி நான்கு வழிச்சாலையில் சென்றுள்ளார். பைக் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வேல்துரை தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கார் மோதிய வேகத்தில் அங்குள்ள மின்கம்பமே நெளிந்து உருக்கலைந்தது. இதில் காரை ஒட்டி வந்த நபர் மற்றும் காரில் இருந்த நபர் தப்பி ஓடினர். சம்பவம் அறிந்து விரைந்து சென்ற பாவூர்சத்திரம் போலீசார், வேல்துரையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த வேல்துரையின் முகம் கார் மோதியதில் முழுவதுமாக சிதைந்து அவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்தது.
விபத்து குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார் காரின் நம்பர் பிளேட் இல்லாததால் விபத்து குறித்து சந்தேகமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து விசாரணை செய்ததில் கார் அடைக்கலபட்டணத்தைச் சேர்ந்த மெக்கானிக் சுதாகருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இந்த காரை பூலாங்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஒட்டி சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து காரை ஓட்டி வந்த பூலாங்குளத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஆறுமுகம் என்பவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது . வேல்துரையின் மனைவி பேச்சியம்மாளுக்கும், அவர் வாடகைக்கு வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் முத்து சேர்மன் என்கிற சுதாகருக்கும் இடையில் தகாத உறவு தெரியவந்தது. மேலும் கண்டக்டர் வேல்துரை பணிக்கு செல்லும் போதெல்லாம் முத்து சேர்மன் என்கிற சுதாகரும் பேச்சியம்மாளும் அவ்வப்போது தனிமையில் கணவன், மனைவி போல் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கேள்விப்பட்ட வேல் துரை இருவரையும் கண்டித்ததாகவும், வேறு வீடு மாற்றிச் செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதனால் பேச்சியம்மாள் என்ற உமா மற்றும் சுதாகர் தாங்கள் பிரிந்து விடுவோமோ என்ற அச்சத்தில் வேல்துரையை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர். அதன் பின்னர் சுதாகரின் நண்பர் ஆறுமுகம் உதவியுடன் விபத்து போன்று கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர் இந்த மூவர் குழு. போலீசாரின் இந்த தீவிர விசாரணையின் தொடர்ச்சியாக குற்றவாளிகள் மெக்கானிக் சுதாகர், காரை ஒட்டி சென்ற அவரது நண்பர் ஆறுமுகம் மற்றும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த வேல்துரை மனைவி பேச்சியம்மாள் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.