கோர விபத்து... கார் மரத்தில் மோதி மருமகன், மாமனார், குழந்தை பலி... பெண் மருத்துவர் படுகாயம்!
Dinamaalai May 22, 2025 12:48 AM

பெரம்பலூர் மாவட்டத்தில்  இன்று காலை மரத்தில் கார் மோதியதில் மருமகன், மாமனார், குழந்தை பலியாகினர். பெண் மருத்துவர்  படுகாயம் அடைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா சூரங்குடி தெற்கு கிரிவளை கிராமத்தில் வசித்து வருபவர்  அன்புச்செல்வன் மகன் பாலபிரபு.  இவரது மனைவி கவுரி. இவர். சித்தா டாக்டராக பணிபுரிந்து வருகிறார். சென்னை தாம்பரத்தில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.  இவர்களது மகள் 2 வயது கவிகா . கவுரியின் தந்தை, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா இச்சிப்பட்டி அடுத்த பூசாரி தோட்டத்தை சேர்ந்த கந்தசாமி  . பாலபிரபு, குடும்பத்துடன் தாம்பரம் பகுதியில் வசித்து வருகிறார். பாலபிரபுவும், கவுரியும் காதல் திருமணம் செய்தவர்கள்.
பாலபிரபு, மனைவி, குழந்தை மற்றும் மாமனாருடன் கோயில் திருவிழாவிற்காக சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்றிருந்தார். நேற்றிரவு சென்னைக்கு குடும்பத்துடன் காரில் புறப்பட்டனர். இதில் பாலபிரபு, காரை ஓட்டி வந்தார்.  இன்று காலை 7.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அடுத்த பெருமாள் பாளையம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதிவிட்டது.  
இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இடிபாட்டுக்குள் சிக்கி கவிகா, பாலபிரபு, அவரது மாமனார் கந்தசாமி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கவுரி படுகாயமடைந்தார். தகவலறிந்து பாடாலூர் போலீசார் விரைந்து வந்து, 3 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில் கவுரி சிகிச்சைக்காக  பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.