பெருநகர சென்னை மாநகராட்சி, பெட்டர் வேர்ல்டு ஷெல்டர் எனும் அமைப்புடன் இணைந்து, மாற்றுத்திறனாளி பெண்களுக்கான ஒரு காப்பகத்தையும், ஒரு பிரத்யேக உடற்பயிற்சி மையத்தையும் நுங்கம்பாக்கத்தில் நடத்தி வருகிறது. இங்கு பாரா விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் இலவசமாக தங்கி, பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்.
அப்படி தங்கியிருக்கும் பாரா விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவர், கர்நாடகாவின் ராமநகரத்தைச் சேர்ந்த லக்ஷ்மி. 10 வருடங்களுக்கு முன், ஒரு ரயில் பயணத்தில் வழிதவறி சென்னை வந்துசேர்ந்த லக்ஷ்மி, இன்று பாரா கூடைப்பந்து வீராங்கனையாக மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்கிறார்.
லக்ஷ்மி 15 வயதில், ஒரு ரயில் விபத்தில் தனது இரு கால்களையும் இழந்தவர். இவருக்கு திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் பிறந்தபிறகு, ஒரு கட்டத்தில் கணவர் இறந்துவிட, வறுமையின் காரணமாக முதல் பிள்ளை மற்றும் 3வது பிள்ளையை தனது உறவினர்களிடம் கொடுத்தார் லக்ஷ்மி. இரண்டாவது பிள்ளையான தனலக்ஷ்மியை இவரே வளர்த்து வந்தார்.
வேலை வாய்ப்பும், தங்குவதற்கு இடமும் அளிப்பதாக உறவினர் ஒருவர் உறுதியளிக்க, தனது மகளுடன் ராஜஸ்தான் மாநிலம் சென்றுள்ளார்.
"அங்கு சிறிது காலம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தேன். அதில் பல மாற்றுத்திறனாளிகள் பணிபுரிந்தார்கள். ஆனால் ஊதியம் மிகக்குறைவு. தினமும் தரையில் தவழ்ந்து தான் பணிக்குச் செல்வேன். ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை, ஊருக்கே செல்லலாம் என முடிவு செய்தேன்.
அந்த நிறுவனத்தில் இருந்த ஒருவர், அருகில் உள்ள நகரப் பகுதியில் ஒரு தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் பணமும், ஒரு சக்கர நாற்காலியும் இலவசமாக வழங்குவதாக கூறினார். சரி அதை வாங்கிவிட்டு சொந்த ஊருக்கு திரும்பலாம் என முடிவு செய்து, அவரை நம்பி எனது 5 வயது மகளுடன் சென்றேன்." என்று கூறுகிறார் லக்ஷ்மி.
ஆனால் அங்கு கிடைத்த உதவித்தொகையை உடன் வந்தவர் எடுத்துக்கொண்டு, தென்னிந்தியாவை நோக்கிச் செல்லும் ஏதோ ஒரு ரயிலில் லக்ஷ்மியையும் அவரது மகளையும் அனுப்பிவைத்துள்ளார்.
ராஜஸ்தானில் இருந்து சென்னைக்குஅன்று நடந்ததை நினைவுகூறும் லக்ஷ்மி, "'உனது ஊருக்குதான் செல்கிறது ஏறு' என அந்த நபர் என்னை மகளுடன் ஏற்றிவிட்டார். கையில் ஒரு ரூபாய் கூட இல்லை, கிடைத்த 2000 ரூபாயையும், 'நான் தானே உன்னை அழைத்துவந்தேன், அதற்கு கமிஷன்' எனக்கூறி அவர் பிடுங்கிக்கொண்டார்.
டிக்கெட்டோ அல்லது உணவோ வாங்கித் தரவில்லை. பசியுடன் தான் நானும் எனது மகளும் பயணித்தோம். ஒரு இடத்தில் ரயில் நின்றபோது முழிப்பு தட்டியது. எழுந்துபார்த்தபோது அருகில் வைத்திருந்த அந்த சக்கர நாற்காலியை காணவில்லை. பதறி, எனது மகளுடன் ரயில் நிலையத்தில் இறங்கி அங்குமிங்கும் தவழ்ந்து, சக்கர நாற்காலியை பார்த்தீர்களா என அங்கிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது ரயில் கிளம்பத் தொடங்கியது. தவழ்ந்து செல்வதற்குள் அது வெகு தூரம் சென்றுவிட்டது" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "மகளுடன் பிளாட்பாரத்திலேயே அமர்ந்திருந்தேன். நள்ளிரவு நெருங்க நெருங்க பயம் வந்தது. மொழி தெரியாத ஏதோ ஒரு தென்னிந்திய ஊரில் இருக்கிறேன் என்பது மட்டும் தெரிந்தது. அப்போது அங்கு வந்த ஒரு ரயிலில் மகளுடன் ஏறினேன். நான் வாழ்க்கையில் எடுத்த சிறந்த முடிவு அதுதான்.
அந்த ரயில் சென்னை செல்கிறது என்றோ, நான் சில வருடங்களில் ஒரு பாரா விளையாட்டு வீராங்கனையாக மாறப்போகிறேன் என்றோ அப்போது தெரியாது." என்கிறார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கி, பிளாட்பாரத்திலேயே அமர்திருந்த லக்ஷ்மியையும் அவரது மகளையும் கண்ட சிலர், விசாரித்துவிட்டு, ஒரு அரசு பெண்கள் காப்பகத்திற்கு அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
"அந்த காப்பகத்தில் சிறிது காலம், பிறகு வேறொரு தனியார் காப்பகத்தில் சிறிது காலம் என கழித்த பிறகு, பெட்டர் வேர்ல்டு ஷெல்டர் அமைப்பின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் நடத்திய காப்பகத்தில் எனது மகளுடன் தங்கினேன். மகளை ஒரு நல்ல பள்ளியில் சேர்க்க அவர்கள் உதவினர்.
அவ்வப்போது கர்நாடகாவில் எனது உறவினர்களிடம் வளர்ந்துவந்த இரு பிள்ளைகளிடமும் பேசி வந்தேன். ஆனால், இப்படியே வாழ்க்கை கழிந்துவிடக்கூடாது என நினைத்து தையல் தொழில் கற்று வந்தேன். அதன் பிறகு பாரா விளையாட்டு போட்டிகளைப் பற்றி அறிந்துகொண்டேன்." என்கிறார் லக்ஷ்மி.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சென்னை பெருநகர் மாநகராட்சியின் 'மாற்றுத்திறனாளி பெண்கள் காப்பகத்தில்' தற்போது தனது 15 வயது மகள் தனலக்ஷ்மியுடன் வசித்துவருகிறார் லக்ஷ்மி.
தனலக்ஷ்மி இப்போது ஒரு தனியார் பள்ளியில், 7ஆம் வகுப்பு முடித்துவிட்டு, 8ஆம் வகுப்பிற்கு செல்ல காத்திருக்கிறார்.
பாரா விளையாட்டில் தனக்கு ஆர்வம் ஏற்பட்டதைக் குறித்து பேசிய லக்ஷ்மி, "எனக்கு எந்த பாரா விளையாட்டு ஏற்றது என குழப்பத்தில் இருந்தபோது, சக்கர நாற்காலி கூடைப்பந்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. முதலில் பயிற்சி எடுக்கத் தொடங்கியதும் எளிதாக இருப்பது போல இருந்தது. சரி என நம்பிக்கையுடன் ஒரு போட்டியில் கலந்துகொள்ள சென்றபோது, எதிரணியைச் சேர்ந்த ஒருவர் இடித்ததில் சக்கர நாற்காலியில் இருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டது.
அந்த வலி போகவே சில நாட்களானது. அதன் பிறகுதான் இது எளிதான ஒன்று அல்ல எனப் புரிந்துகொண்டு, தீவிரமாக பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். இப்போது நான் ஒரு மாநில அளவிலான பாரா கூடைப்பந்து வீராங்கனை." என்கிறார்.
"லக்ஷ்மியைப் போல இன்னும் பல மாற்றுத்திறனாளி பெண்கள், பாரா விளையாட்டுகள் தங்கள் வாழ்வை உயர்த்தும் என நம்புகிறார்கள்" என்கிறார் நுங்கம்பாக்கம் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான அரசு காப்பகத்தின் நிர்வாகியும், பெட்டர் வேர்ல்டு ஷெல்டர் அமைப்பின் இயக்குனருமான, டாக்டர் ஐஸ்வர்யா ராவ். இவரும் ஒரு மாற்றுத்திறனாளியே.
"லக்ஷ்மி உள்பட இங்கு தங்கியிருக்கும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தையல் போன்ற தொழில்களைதான் முதலில் கற்றுக்கொடுத்து வந்தோம். ஆனால், ஏதோ ஒரு கைத்தொழில் என்பது அவர்களுக்கான அடுத்த கட்டமாக இருக்காது என்பதை உணர்ந்தோம். அப்போது 2016 பாரா ஒலிம்பிக்கில், தமிழக வீரர் மாரியப்பன் பெற்ற வெற்றி எங்களை சிந்திக்க வைத்தது" என்கிறார்.
2016இல், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் டி-42 பிரிவில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
"அந்த வெற்றியால் தமிழகத்தில் பாரா விளையாட்டுகளுக்கு ஒரு அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு எங்கள் காப்பகத்தில் இருக்கும் பெண்களுக்கு பாரா விளையாட்டு பயிற்சிகளை அளித்தோம். அது பலனளிக்க ஆரம்பித்தது. எங்களது பெண்கள் பலரும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளனர்." என்கிறார் ஐஸ்வர்யா ராவ்.
மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு மனச்சோர்வு, ஆஸ்துமா, நீரிழிவு நோய், பக்கவாதம், உடல் பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான ஆபத்து இரு மடங்கு அதிகம் என எச்சரிக்கிறது.
இதைக் குறிப்பிட்டுப் பேசிய டாக்டர் ஐஸ்வர்யா, "அதனால்தான் ஏதோ ஒரு தொழில் அல்லது வேலைவாய்ப்பு என அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதை விட பாரா விளையாட்டில் ஆதரவளித்தால், உடல்நலமும் அவர்களுக்கு மேம்படும்.
எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளால் உடல் உழைப்பு தேவைப்படும் அன்றாட வேலைகளை எளிதில் செய்ய முடியாது. எங்கு சென்றாலும் சக்கர நாற்காலி எனும்போது, எளிதாக எடை கூடி, உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். எனவே தான் எங்கள் காப்பகத்தின் உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி செய்வதும், பாரா விளையாட்டுகளில் கலந்துகொள்வதும் அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது." என்கிறார்.
தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவில் இருக்கும் பல பகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகளும் எளிதாக பயன்படுத்தக்கூடிய உடற்பயிற்சி மையங்கள் மிகவும் குறைவு எனக் குறிப்பிடும் ஐஸ்வர்யா, "இந்த உடற்பயிற்சி மையம்தான் தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான முதல் இலவச மையம். இதைப் போலவே தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் உருவாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அது விரைவில் நிறைவேறும் என நம்புகிறோம்." என்கிறார்.
இந்த அரசு காப்பகத்தில் தங்கியிருக்கும் தேசிய பாரா பளுதூக்கும் வீராங்கனையான நதியா, "சாதாரண உடற்பயிற்சி கூடத்திற்குள் மாற்றுத்திறனாளிகள் நுழைந்தாலே விசித்திரமாக பார்ப்பார்கள். காரணம், வழக்கமான ஜிம்களில் சக்கர நாற்காலி பயன்படுத்த வசதிகள் இருக்காது. எனவே நாங்கள் தவழ்ந்து செல்வோம். உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு அவர்களை அவர்கள் பார்க்கும் பார்வையை மறக்கவே முடியாது. மிகவும் அவமானமாக இருக்கும், பிறகு எங்கே நிம்மதியாக உடற்பயிற்சி செய்வது. எனவே அரசு இதுபோன்ற மேலும் சில உடற்பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும்" என்கிறார்.
மாற்றுத்திறனாளி பெண்களுக்கான புதிய பிரத்யேக உடற்பயிற்சி கூடங்கள் அமைப்பது குறித்து பேசிய சென்னை பெருநகர் மாநகராட்சியின் ஆணையர் ஜெ.குமரகுருபரன், "இப்போது நுங்கம்பாக்கத்தில் மட்டுமே காப்பகத்துடன் இணைந்த ஒரு உடற்பயிற்சி நிலையம் தொடங்கியுள்ளோம். இது பாரா வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல. அனைத்து மாற்றுத்திறனாளி பெண்களுக்கும் இலவசம்தான்.
அவர்கள் முறையாக பதிவு செய்துவிட்டு இதைப் பயன்படுத்தலாம். விரைவில் சென்னையின் பிற பகுதிகளிலும் இத்தகைய 'ஜிம்களை' நிறுவ உள்ளோம். மாற்றுத்திறனாளிகள் நல அமைப்புகளின் ஆலோசனைபடியே இவை வடிவமைக்கப்படும்." என்று கூறினார்.
"பாரா விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்காகவோ அல்லது வாழ்வாதாரமாகவோ நான் பார்க்கவில்லை. ஒரு முறை சாப்பாடு இல்லை என மகள் பார்க்க பிறரிடம் கையேந்தி நின்றிருக்கிறேன்.
இப்போது அதே மகள் முன் பாரா விளையாட்டு வீராங்கனையாக பதக்கத்துடன் நிற்கிறேன். சீக்கிரமாக எனது மற்ற இரண்டு மகள்களையும் என்னுடன் அழைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறேன்" என்கிறார் லக்ஷ்மி.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு