இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை தீப்தி ஷர்மா தனது சக வீராங்கனை மீது அளித்துள்ள மோசடி புகார் விளையாட்டு துறையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சிறந்த சுழற்பந்துவீச்சாளரான தீப்தி சர்மா தற்போது விளையாடி வரும் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் உத்திரப்பிரதேச வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் தனது அணியில் உள்ள சக வீராங்கனையான ஆருஷி கோயல் மீது திருட்டு மற்றும் நம்பிக்கை மோசடி புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், ரூபாய் 25 லட்சத்திற்கும் மேல் ஆருஷி கோயல் தன்னை ஏமாற்றியதாகவும், தனது நட்பை பயன்படுத்தி ஆருஷி மற்றும் அவரது பெற்றோர்களான மஞ்சு, தன்சந்த் ஆகியோர் தொடர்ந்து தங்களது அவசர சூழ்நிலைகளை காட்டி பணரீதியாக சுரண்டியதாகவும், மேலும் ஆக்ராவில் உள்ள தனது வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உட்பட ரூ. 2 லட்சம் வெளிநாட்டு பணமும் கொள்ளையடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்த புகாரை தீப்தி சர்மாவின் சகோதரனான சுமித், சதார் ஆக்ரா காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் ஆருஷி கோயல் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் கிரிக்கெட் விளையாட்டு துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.