இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், மே 23ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நேற்று முதல் வலுவடைந்ததாகவும், அதன் பின் தெற்கு கொங்கன் கடற் பகுதிக்கு அப்பால் நிலை கொண்டுள்ள இது வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையும் என தெரிவித்தது.
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி, இன்று காலை வடக்கு திசை நோக்கி காற்றழுத்த தாழ்வு நகர்ந்து சென்ற நிலையில், வலுப்பெற்றுள்ளதாகவும் தற்போது அது கிழக்கு திசை நோக்கி நகர்கிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் இன்று அந்தக் காற்றழுத்தத் தாழ்வு கரையைக் கடக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் குறிப்பாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மே 24 முதல் 28ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று கேரளாவில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தென்மேற்குப் பருவமழை ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டில் 8 நாட்களுக்கு முன்பே மே 24ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2009 ஆம் ஆண்டில், அதாவது 16 ஆண்டுகளுக்கு முன் மே 23ஆம் தேதியே கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது எனவும் தெரிவித்துள்ளது.