தலைமை காஜி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Dinamaalai May 25, 2025 11:48 PM

தமிழ்நாடு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிப் நேற்றிரவு சுமார் 9 மணி அளவில் வயது முப்பு காரணமாக காலமான நிலையில், அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்று சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், இன்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிபின் இல்லத்திற்கு நேரில் சென்று மறைந்த சாகிபின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

முதல்வர் ஸ்டாலினுடன் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் ஆகியோர் துக்க நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில், தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் சாஹிப் உடலுக்கு, அமமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தமிழன் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தமிழக அரசின் தலைமை காஜியாக செயல்பட்டு வந்த சலாவுதீன் முகமது சாகிப் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியரான அவர், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியத் தலைவர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார். தமிழகத்திலுள்ள இஸ்லாமிய மக்களுக்கு கல்வி, கலாச்சாரம் குறித்து வழிகாட்டினார். அனைவர் மீதும் அன்பு செலுத்திய அவர், மத நல்லிணக்கத்திற்காகவும் பாடுபட்டார். அவரை இழந்து வாடும் இஸ்லாமிய பெருமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் நிபுணத்துவம் பெற்றவரும், தமிழக அரசின் தலைமை காஜியுமான சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் அவர்கள் வயது மூப்பின் காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தலைமை ஹாஜி அவர்களின் பிரிவால் வருந்தும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தமிழக அரசின் மாநில தலைமை ஹாஜி சலாஹூதீன் முஹம்மத் அய்யூப் சாஹிப் அவர்களின் வயது 84. வயது மூப்பு காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) இரவு 9 மணியளவில் அவர் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.

சுமார் 40 வருடங்களாக தமிழக அரசு தலைமை காஜியாக கவுரவ பொறுப்பு வகித்தவர், எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதும் நினைவு கூறத்தக்கது. அவரை இழந்து வாடும் இஸ்லாமிய சொந்தங்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்' என்று அவர் கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.