திருப்பதி போறீங்களா... அப்ப இங்க டோக்கன் வாங்கிட்டு போங்க...
Top Tamil News June 07, 2025 11:48 AM

சந்திரகிரி ஸ்ரீவாரி மெட்டு வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு அலிபிரியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி தொடங்கியது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வேண்டுதலின்படி சந்திரகிரி அடுத்த ஸ்ரீவாரி மெட்டு வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன்கள் இன்று  மாலை முதல் திருப்பதி அலிபிரி பூதேவி வளாகத்தில்  வழங்கும் பணிகள் தொடங்கியது. இந்த நிகழ்வில் ஊடகங்களிடம் பேசிய கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி   வெங்கையா சவுத்ரி, ஸ்ரீவாரி மெட்டு  மலைப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த  திவ்ய தரிசன டோக்கன் மையத்தை ஸ்ரீவாரி மெட்டுவிலிருந்து திருப்பதி  அலிபிரி பூதேவி வளாகத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஸ்ரீனிவாச மங்காபுரம் கோயிலில் இந்த  கவுண்டர்களை அமைக்க இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்திடம் ( ஏ.எஸ்.ஐ. ) அனுமதி பெற வேண்டும் .

இந்த செயல்முறை சிறிது காலம் எடுப்பதால், பக்தர்களின் வசதிக்காக டோக்கன் கவுண்டர்கள் தற்காலிகமாக பூதேவி வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே சர்வ தரிசன  டோக்கன்களை வழங்குவதற்கான உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்கள் பூதேவி காம்ப்ளக்ஸ் வளாகத்தில் நீண்ட காலமாகவே உள்ளன.  எனவே ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் வழங்கப்பட்டு வந்த திவ்ய தரிசன டோக்கன்கள் இங்கிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக  நான்கு சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.  தேவஸ்தானத்தின் ஏற்பாடுகள் குறித்து பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர் . போக்குவரத்து அமைப்பும் சிறப்பாக உள்ளது , பஸ் ஸ்டாண்ட்டும் அலிபிரியில் அமைந்துள்ளது எனவே, பக்தர்கள் ஸ்ரீவாரி மெட்டுவை அடைய வசதியாக இருக்கும் என்று அவர் கூறினார். ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்களுடன், பக்தர்களுக்கு சேவைகளை வழங்க தேவஸ்தான நிர்வாகம், விஜிலென்ஸ் மற்றும் கூடுதல் சுகாதார ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் திவ்ய தரிசன டோக்கன்களை வழங்க  விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்று அவர் கூறினார். இதில் ஜெ.இ.ஓ. வீரபிரம்மம், சி.வி.எஸ்.ஓ. முரளிகிருஷ்ணா மற்றும் பிற அதிகாரிகள்  ஊழியர்கள்  பங்கேற்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.