காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..!
Newstm Tamil June 16, 2025 06:48 AM

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மீண்டும் டெல்லியிலுள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்சினை காரணமாக மருத்துவமனையின் இரைப்பை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏஎன் ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதேபோல கடந்த பிப்ரவரி மாதத்திலும் வயிறு வலி காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் பிறந்த சோனியா காந்திக்கு தற்போது 78 வயதாகிறது. கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது சோனியா காந்தி வெற்றி பெற்று முதல் முறையாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக மாறினார். பின்னர் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த போது 2000-ஆம் ஆண்டிலும் அவர் மக்களவை எதிர்க் கட்சி தலைவராக பொறுப்பேற்றார்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு சோனியா காந்தி வென்றார். இருப்பினும், அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மிகவும் பின்னடைவை சந்தித்தது. இதையடுத்து தீவிர அரசியலில் இருந்து சோனியா காந்தி விலகி இருக்கிறார். தற்போது அவர் மாநிலங்களை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.