ஏடிஎம் அட்டை தொலைந்துபோனால் என்ன செய்வது?
Newstm Tamil July 02, 2025 09:48 AM

மக்கள் தற்போது வங்கிகளுக்கு சென்று பணப்பரிவர்த்தனை செய்வது வெகுவாக குறைந்து விட்டது. அதற்கு மற்றொரு முக்கிய காரணம் ஏடிஎம் கார்டுகளின் பயன்பாடு.தேவைப்படும் நேரங்களில் ATM கார்டைப் பயன்படுத்தி பணம் எடுப்பது, பணத்தை டெபாசிட் செய்வது என வங்கி சேவைகளை பெரும்பாலும் ஏடிஎம்களிலேயே முடித்து விடுகின்றனர். அப்படிப்பட்ட ATM கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது?

 

நமது அட்டை தொலைந்துவிட்டது என்ற தகவல் நமக்குத் தெரியும்போது நம்மை அறியாமலேயே ஒரு பதற்றம் ஒட்டிக்கொள்ளும். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி நமது நண்பர்களுக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ போன் செய்வோம். அவர்களிடம் அந்த அட்டையை எப்படி முடக்குவது (பிளாக் செய்வது) அல்லது எங்கு புதிய அட்டைக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றை கேட்டுத் தெரிந்துகொண்டு அதன்படி நடைமுறைகளை மேற்கொள்வோம். ஆனால் அதற்குள் அந்த அட்டையை வேறு ஒருவர் பயன்படுத்திவிட்டால் மிகப் பெரிய அளவுக்கு பிரச்சினையாகிவிடும். அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நமது தொலைந்து போன அட்டையை பிளாக் செய்ய வேண்டும்.

உங்கள் ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டால் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:

கார்டை பிளாக் செய்யவும்: உங்கள் ATM கார்டு தொலைந்து போனதை நீங்கள் கண்டறிந்தால் முதலில் செய்ய வேண்டியது அதை பிளாக் செய்வதுதான் அல்லது டி-ஆக்டிவேட் செய்துவிடலாம். உங்கள் ATM கார்டைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடப்பதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும்.

எவ்வாறு ஏடிஎம் கார்டை பிளாக் செய்வது?:

ஆன்லைன்: உங்கள் வங்கியின் நெட் பேங்கிங் போர்ட்டல் அல்லது மொபைல் அப்ளிகேஷன் மூலம் ATM கார்டை பிளாக் செய்யலாம். மொபைல் அப்ளிகேஷன் அல்லது போர்ட்டலில் உள் நுழைந்து "ஏடிஎம் கார்டு பிளாக்" என்று பெயரிடப்பட்ட ஆப்ஷனை தேர்ந்தெடுத்து உங்கள் கார்டை பிளாக் செய்யலாம். இதனை நீங்கள் ஒரு சில நிமிடங்களில் செய்துவிடலாம். மேலும் விரைவாக நடவடிக்கை எடுக்க இந்த ஆன்லைன் தளங்கள் உங்களுக்கு உதவும்.

வங்கிக்குச் செல்லலாம்: ஒருவேளை உங்களுக்கு ஆன்லைனில் பிளாக் செய்ய முடியவில்லை என்றால், உங்கள் வங்கிக்கு தெரிவிக்கலாம். உங்களுடைய மொபைல் நம்பர், அக்கவுண்ட் நம்பர் ஆகியவற்றைக் கொண்டு விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் உங்கள் ஏடிஎம் கார்டை பிளாக் செய்து கொள்ளலாம்.

தொலைபேசி அழைப்பு: நீங்கள் வெகு தூரத்தில் இருந்து உங்கள் வங்கிக்கு செல்ல வேண்டும் என்றால் நீங்கள் வங்கியின் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்து நடந்தவற்றைக் கூறி உங்கள் ஏடிஎம் கார்டை பிளாக் செய்ய சொல்லலாம்.

கார்டை அன் பிளாக் செய்தல்: பின்னர் உங்கள் ATM கார்டை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், அதை மீண்டும் ஆக்டிவேட் செய்வதற்கு வங்கி கிளைக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு உங்கள் அடையாளத்தையும், கார்டின் உரிமையையும் சரிபார்க்க கோரிக்கை படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். சில வங்கிகள் இந்த ஆப்ஷனை ஆன்லைன் பேங்கிங் தளங்கள் மூலமாகவே வழங்குகின்றன. ஆனால் இது ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்ப மாறுபடும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.