டெல்லி லஜ்பத் நகர் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவம், நகரமே கலங்கும் அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 42 வயது ருச்சிகா சேவானியும், அவரது 14 வயது மகன் கிரிஷும் தங்களது வீட்டிலேயே கொடூரமாக கொல்லப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட முகேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் நடந்த நாள் இரவு 9.30 மணிக்கு, ருச்சிகாவின் கணவர் குல்தீப் சேவானி வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். ஆனால், வீட்டின் முக்கிய கதவு பூட்டப்பட்டிருந்தது. மனைவி மற்றும் மகனை அழைத்தும் பதில் வரவில்லை. அதே சமயம், வீட்டு வாசலிலும் படிக்கட்டுகளிலும் இரத்தக்கறைகள் இருப்பதைக் கண்ட அவர், உடனடியாகபோலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் வீட்டிற்குள் நுழைந்தபோது, ருச்சிகா சேவானி, இரத்தம் உறைந்த சட்டையுடன், படுக்கை அருகே தரையில் கிடந்தார். அவரது மகன் கிரிஷ், குளியலறை தரையில் உயிரற்ற நிலையில், இரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. ருச்சிகா தனது கணவருடன் சேர்ந்து, லஜ்பத் நகர் சந்தையில் துணிக்கடையை நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீசாரின் விசாரணையில், கடையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த 24 வயதான முகேஷ், வீட்டில் வேலைக்கும் உதவுவதாக தெரியவந்தது. பீகாரைச் சேர்ந்த முகேஷ், அமர் காலனியில் வசித்து வந்தார். ருச்சிகா சேவானி திட்டியதால் கோபமடைந்த முகேஷ் அவரையும், அவரது மகனையும் கொலை செய்துள்ளார். தப்பிச் செல்ல முயன்ற முகேஷை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.