இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியை இந்திய அணி வென்று தொடரை சமன் செய்துள்ளது. இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இரட்டை சதம் (269 ரன்கள்) அடித்திருந்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஷுப்மன் கில் சதமடிக்க (161 ரன்கள்) 427 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் என்கிற இமாலய இலக்கை நிர்ணயித்திருந்தது இந்திய அணி.
25 நிமிடங்களில் திருப்புமுனை4வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களுடன் இருந்தது. கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றி பெற 536 ரன்கள் தேவைப்பட்டது, கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன.
ஹேரி ப்ரூக் 15 ரன்களுடனும், போப் 24 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஏற்கெனவே ஆகாஷ் தீப், சிராஜ் இருவரும் இங்கிலாந்து பேட்டர்களை தங்களின் ஸ்விங் பந்துவீச்சால் அலறவிட்ட நிலையில் அவர்களின் துல்லியமான லென்த்தில் கணிக்க முடியாத ஸ்விங் பந்துவீ்ச்சு இன்று காலையும் தொடர்ந்தது.
ஆட்டம் தொடங்கிய 25 நிமிடங்களுக்குள் ஆகாஷ் தீப் இரு அருமையான பந்துகளால் இரு விக்கெட்டுகளை சாய்த்து இங்கிலாந்து அணியை நெருக்கடிக்குள் தள்ளினார்.
முதலாவதாக ஆட்டம் தொடங்கி 4வது ஓவரில் ஆலி போப்பிற்கு இன் கட்டரில் பந்துவீசி க்ளீன் போல்டாக்கினார் ஆகாஷ் தீப். ஏற்கெனவே திணறிக்கொண்டிருந்த போப் 25 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
போப் ஆட்டமிழந்த அடுத்த 2 ஓவர்களில் ஹேரி ப்ரூக் விக்கெட்டுக்கு ஆகாஷ் குறிவைத்தார். பேட்டர் ஆடமுடியாத வகையில் இன்ஸ்விங்கில் பந்தை வீசி ஹேரி ப்ரூக்கை நிலைகுலையச் செய்து கால்காப்பில் வாங்கவைத்தார் ஆகாஷ்.
ப்ரூக் கால்காப்பில் வாங்கியதும் ஆகாஷ் அப்பீல் செய்தவுடனே நடுவர் மறுபேச்சு இன்றி கையை உயர்த்தி அவுட் வழங்கினார். டிஆர்எஸ் முறையீட்டுக்கு வாய்ப்பின்றி துல்லியமான எல்பிடபிள்யு என்பதால், ப்ரூக்கும் முறையீடு செய்யாமல் வெளியேறினார்.
இந்த இரு விக்கெட்டுகளும், இங்கிலந்து அணி சேஸிங் கனவிலிருந்து சற்று பின்னோக்கி தள்ளச் செய்தது. சேஸ் செய்துவிடலாம் என எண்ணி களமிறங்கிய இங்கிலாந்து பேட்டர்கள் பின்னடைவைச் சந்தித்தனர். 4வது நாள் முடிவில் 64 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து, இன்று காலை ஆட்டம் தொடங்கி, 19 ரன்களைச் சேர்பதற்குள் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜேம் ஸ்மித் இருவரும் 7வது விக்கெட்டுக்கு நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். பந்து தேய்ந்து, மென்மையாக மாறிவிட்டதால், எதிர்பார்த்த ஸ்விங்கும், வேகமும் கிடைக்காததால் பேட்டர்கள் அடித்து ஆடுவதற்கு வசதியாக இருந்ததால், ரன்களை இங்கிலாந்து பேட்டர்கள் வேகமாகச் சேர்த்தனர்.மதிய உணவு இடைவேளைக்குச் செல்லும்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்திருந்தது.
ஸ்டோக்ஸை ஆட்டமிழக்கச் செய்ய சுந்தர், ஜடேஜாவை மாறி, மாறி கேப்டன் கில் பயன்படுத்தினார். இதில் ஸ்டோக்ஸ் 18 ரன்னில் இருந்தபோது, ஜடேஜா பந்துவீச்சில் கிடைத்த கேட்சை கில் தவறவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்டோக்ஸ் ஆபத்தானவர் எந்த நேரத்திலும் ஆட்டத்தை திருப்பிவிடுவார் என்பதால் இவருக்கு குறிவைத்து கில் செயல்பட்டு பந்துவீச்சை உணவு இடைவேளைக்குப்பின் மாற்றினார்.
வாஷிங்டன் திருப்புமுனைஉணவு இடைவேளை முடிந்துவந்தபின், மீண்டும் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. ஸ்டோக்ஸ் 33 ரன்கள் சேர்த்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து தோல்வியின் பக்கம் தள்ளப்பட்டு ஆட்டம் இந்திய அணியின் கைகளுக்கு திரும்பியது. 7-வது விக்கெட்டுக்கு ஸ்டோக்ஸ், ஸ்மித் இருவரும் 70 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து வோக்ஸ் களமிறங்கி ஸ்மித்துடன் சேர்ந்தார். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய ஸ்மித் 73 பந்துகளில் அரைசதம் அடித்தபின் வேகமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினார்.
பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் பவுன்ஸராக வீசப்பட்ட பந்தை தூக்கி அடிக்க வோக்ஸ் முற்பட்டபோது, அது சிராஜிடம் கேட்சானது. வோக்ஸ் 7 ரன்னில் ஆட்டமிழக்கமே ஆட்டம் மொத்தமும் இந்தியாவின் பக்கம் திரும்பியது.
இந்திய அணியின் வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டது. ஸ்மித், கார்ஸ் களத்தில் இருந்தனர். ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்யும் நோக்கில் ஆகாஷ் மீண்டும் பந்துவீச அழைக்கப்பட்டார்.
ஆகாஷ் சற்று ஸ்லோவர் பந்தாக ஆப்சைடு விலக்கி வீசினார். இதை கணிக்காத ஸ்மித் தூக்கிஅடிக்கவே, பேக்வார்ட் ஸ்குயரில் நின்றிருந்த சுந்தரிடம் கேட்ச் கொடுத்து 88 ரன்களில் வெளியேறினார். இங்கிலாந்து அணி 8வது விக்கெட்டை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.
ஆகாஷ் தீப் தனது டெஸ்ட் வாழ்க்கையில் முதல்முறையாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி திருப்புமுனையாக இருந்தார்.
இந்திய அணியின் வெற்றிக்கு 2 விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. கார்ஸ், டங் இருவரும் களத்தில் இருந்தனர். பிரசித், ஜடேஜா மாறி, மாறி பந்துவீசியும் இருவரும் சளைக்காமல் ஆடினார்.
ஒரு கட்டத்தில்பேட்டர்களுக்கு நெருக்கடி தரும்வகையில் ஸ்லிப்பில், மிட்விக்கெட்டில் பீல்டர்களை நெருக்கமாக நிறுத்தி ஜடேஜா பந்துவீசினார். ஜடேஜாவின் வியூகத்துக்கு பலன் கிடைத்து.
ஜடேஜாவீசிய பந்தை டங் தட்டிவிட, மிட்விக்கெட்டில் நின்றிருந்த சிராஜ், அற்புதமாக டைவ் செய்து கேட்ச் பிடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இங்கிலாந்து 9வது விக்கெட்டை இழந்தது.
அடுத்ததாக பஷீர் களமிறங்கி, கார்ஸுடன் சேர்ந்தார். கடைசி விக்கெட்டை வீழ்த்த ஆகாஷ் பந்துவீச அழைக்கப்பட்டார். ஆகாஷ் பந்துவீச்சில் சற்று திணறிய கார்ஸ், திடீரென பெரிய ஷாட்டுக்கு முயன்று பந்தை தூக்கி அடித்தார். ஆனால் சிராஜ் பந்தை பிடிக்கும் முயற்சியில் தவறாக கணித்ததால் கேட்சை தவறவிட்டார்.
வெற்றிக்கான கேட்ச்ஜடேஜா அடுத்து பந்துவீச அழைக்கப்பட்டார். ஜடேஜா பந்துவீச்சில் பஷீர் கால்காப்பில் வாங்கிய பந்தை கேட்ச்பிடித்தபோது நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் டிஆர்எஸ் முறையீட்டில் பந்து பேட்டில் படவில்லை, கால்காப்பில் மட்டுமே பட்டது எனத் தெரியவந்ததால் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது.
அதன்பின்பும், ஜடேஜா, ஆகாஷ் இருவரும் மாறி மாறி பந்துவீசியும் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இறுதியாக ஆகாஷ் தீப் வீசிய 64வது ஓவரில் அந்த வெற்றி விக்கெட் விழுந்தது. ஆகாஷ் வீசிய பந்தை கார்ஸ் தூக்கிஅடிக்க கேப்டன் கில் கேட்ச் பிடிக்கவே இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது.
வெற்றியின் நாயகர்கள்இந்திய அணியின் வெற்றிக்கு ஒவ்வொரு வீரர்களும் பங்களிப்பு செய்துள்ளனர்.முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் அரைசதம், ஷுப்மன் கில் இரட்டை சதம், ஜடேஜா அரைசதம், 2வது இன்னிங்ஸில் ராகுலின் அரைசதம், கில்லின் 2வது சதம், ரிஷப்பந்த் அரைசதம், ஜடேஜாவின் 2வது அரைசதம் என பேட்டிங்கில் முடிந்தவரை பங்களிப்பு செய்தனர்.
பந்துவீச்சில் பும்ரா இல்லாத நிலையில் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது உண்மையில் பாராட்டுக்குரியது. முதல் இன்னிங்ஸில் சிராஜ் எடுத்த இங்கிலாந்து மண்ணில் முதல் 5 விக்கெட், ஆகாஷ் தீப்பின் 4 விக்கெட். 2வது இன்னிங்ஸில் ஆகாஷ் தீப் எடுத்த முதல் 6 விக்கெட், சிராஜ், வாஷிங்டன் விக்கெட் ஆகியவை வெற்றிக்கு துணையாக இருந்தன.
39 ஆண்டுகளுக்குப்பின் நிகழ்ந்த சாதனைஅதிலும் ஆகாஷ் தீப் வெற்றிக்கான திருப்புமுனையை இரு இன்னிங்ஸிலும் வழங்கினார் என்பதை மறுக்க இயலாது. இரு இன்னிங்ஸிலும் சேர்த்து ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆகாஷ் பெற்றார்.
1986ம் ஆண்டு இதே பிர்மிங்ஹாம் மைதானத்தில் சேத்தன் சர்மா 10 விக்கெட்டுகளை வீழ்த்தியபின் ஏறக்குறைய 39 ஆண்டுகளுக்குப்பின் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளார்.
அன்று காபா, இன்று பிர்மிங்ஹாம்2021ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் முதல்முறையாக இந்திய அணி வரலாற்று பெற்றி பெற ஷுப்மன் கில், ரிஷப் பந்த், சிராஜ் ஆகிய 3 பேரும் முக்கிய காரணமாக இருந்தனர். இன்று எட்ஜ்பாஸ்டனில் புதிய சரித்திரத்தை எழுதவும் இந்த 3 வீரர்களின் பங்களிப்பு முக்கியமாக இருந்துள்ளது. இதில் ஆகாஷ் தீப்பின் முதல்முறை 6 விக்கெட், ஒட்டுமொத்த 10 விக்கெட் முக்கியமாக இருந்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று 2வது போட்டியிலேயே அந்நிய மண்ணில் கில் வெற்றி தேடித்தந்துள்ளார். இதில் கேப்டன் கில்லின் பேட்டிங் பங்களிப்பு இரு டெஸ்ட் போட்டிகளிலும் மகத்தானது. முதல் போட்டியில் சதம், 2வது டெஸ்டில் இரட்டை சதம், சதம் என 430 ரன்கள் குவித்து முழுமையான உழைப்பை வழங்கினார்.
அதேபோல ரிஷப் பந்த் முதல் இன்னிங்ஸில் சொதப்பினாலும், 2வது இன்னிங்ஸில் விரைவாக அடித்த அரைசதம், சிராஜ் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து மண்ணில் எடுத்த 6 விக்கெட், 2வது இன்னிங்ஸில் ஒருவிக்கெட் என 7 விக்கெட்டுகளை சாய்த்து மீண்டும் சரித்திரம் படைக்க உதவினர்.
பிர்மிங்ஹாமில் புதிய வரலாறுபிர்மிங்ஹாமில் இதுவரை 8 டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி ஒரு போட்டியில் கூட வென்றதில்லை, ஒரு போட்டியில் மட்டுமே டிரா செய்திருந்தது. ஆனால், இந்த போட்டியில் பிர்மிங்ஹாமில் வென்றதன் மூலம் இந்திய அணி முதல்வெற்றியைப் பதிவு செய்து புதிய வரலாறு படைத்தது.
நூறாண்டுகளாக பிர்மிங்ஹாமில் கிரிக்கெட் விளையாடியும் முதல் வெற்றிக்காக தவம் கிடந்த நிலையில் நூறாண்டுகளுக்குப்பின் கிடைத்த முதல் வரலாற்று வெற்றி, கொண்டாடப்பட வேண்டிய வெற்றியாகும். இந்த நாள் இந்திய அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாளாக அமைந்திருக்கிறது.
சீனியர்கள் இல்லாமல் சாதனைஇந்திய அணியில் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், பும்ரா இல்லாத நிலையில் இளம் வீரர்கள் வரலாற்று வெற்றி தேடித்தந்துள்ளனர்.
இந்திய அணியில் இடம் பெற்ற பெரும்பாலான வீரர்கள் 30 வயதுக்குள் இருக்கும் இளம் வீரர்கள், 50 டெஸ்ட் போட்டியில்கூட ஆடாத அனுபவம் குறைந்தவர்கள். இவர்களை வைத்துக்கொண்டு கேப்டன் ஷுப்மன் கில் இங்கிலாந்து மண்ணில் வென்றது உண்மையில் வரலாற்று வெற்றியாகும், கில் கேப்டன்ஷிப் ஏற்று கிடைக்கும் முதல் வெற்றியாகும்.
இங்கிலாந்துக்கு மரணஅடிபாஸ் பால் உத்தியைக் கையாண்டு விளையாடியது முதல், இங்கிலாந்து அணி டிரா என்றாலே என்ன என்று கேள்வி கேட்கும் விதத்தில் ஆடியது. 23 டெஸ்ட்களில் 15 போட்டிகளை வென்றிருந்தது, ஒரு போட்டியில் மட்டுமே டிரா செய்திருந்தது. ஆனால், பாஸ் பால் ஆட்டத்தை ஆடும் முயற்சியில் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு இளம் இந்திய வீரர்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.
டாஸ் வென்று முதல் டெஸ்டில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் இந்த டெஸ்டிலும் 2வதுமுறையாக டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், ஸ்டோக்ஸின் முடிவு தவறானது, இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சொதப்பாது என்பதை இளம் இந்திய அணி நிரூபித்துள்ளது.
சமநிலையில் தொடர்இதன் மூலம் சச்சின்-ஆன்டர்சன் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர். 3வது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி வரலாற்று சிறப்பு மிகுந்த லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு