தேசிய நெடுஞ்சாலைகளில் சுரங்கப்பாதைகள், பாலங்கள், மேம்பாலங்கள் அல்லது உயர்த்தப்பட்ட சாலைகள் உள்ள பகுதிகளுக்கு 50 % வரை சுங்கக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கான பயணச் செலவு குறையும்.முன்பு ஒரு தேசிய நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 40 கி.மீ ஆக இருந்தால் பொதுவாக 400 கிமீ தூரம் என்ற கணக்கீடு மேற்கொள்ளப்பட்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். அதே சாலையில் 10 பாலங்கள் அல்லது மேம்படுத்தப்பட்ட சாலைகள் இருக்கும் பட்சத்தில் டோல் கட்டணம் 400 கிமீ என்ற கணக்கீட்டிற்கு பதிலாக அதில் பாதி, அதாவது 200 கிமீ என்ற தூரத்திற்கு மட்டுமே கணக்கிடப்படும்.
அதேபோல் தினசரி நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் இத்திட்டம் 2025 ஆகஸ்ட் 15 முதல் தொடங்க உள்ளது. இந்த வருடாந்திர பாஸின் விலை ரூ.3,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில், பயனர்கள் 200 முறை சுங்கச்சாவடியை கடக்கலாம் அல்லது ஒரு வருடம் வரை பாஸை பயன்படுத்தலாம்.
இந்த திட்டம் வழக்கமாக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களின் ஆண்டு சுங்க கட்டணச் செலவை 70% வரை குறைக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.7,000 வரை சேமிக்கலாம். டாக்சிகள், பேருந்துகள் அல்லது லாரிகள் உட்பட வணிகரீதியான போக்குவரத்து வாகனங்களுக்கு இது பொருந்தாது. வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸிற்கு தகுதியானவர்கள், விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ், கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற தனிப்பட்ட, வணிக நோக்கமற்ற வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். உங்கள் ஃபாஸ்டேக் செயலில் இருக்க வேண்டும், மேலும் சரியான முறையில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். அது செல்லுபடியாகும் வாகனப் பதிவுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸைப் பெற பயனர்கள் ராஜ்மார்க் யாத்ரா செயலி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.nhai.gov.in) அல்லது www.morth.nic.in ஆகியவற்றை அணுகலாம். வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் பெறுவதற்கான படிப்படியான வழிமுறைகள் :
முதலில், ராஜ்மார்க் யாத்ரா மொபைல் செயலியைப் பதிவிறக்கவும் அல்லது NHAI அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். அதில், வருடாந்திர ஃபாஸ்டேக் திட்டம் என்பதை கிளிக் செய்து, உங்கள் வாகனப் பதிவு எண் மற்றும் ஃபாஸ்டேக் ஐடியை உள்ளீடு செய்யவும். அடுத்து, ரூ.3,000ஐ ஆன்லைனில் ஒரு முறை செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தி சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்ததும், வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் செயல்படுத்தப்பட்டதற்கான உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
குறிப்பாக, ஒரு வருடம் அல்லது 200 பயணங்களுக்குப் பிறகு, இது தானாகவே வழக்கமான ஃபாஸ்டேக்காக மாற்றப்படும். அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ரூ.3,000 செலுத்தி வருடாந்திர பாஸை நீங்கள் புதுப்பிக்கலாம். இந்த வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் திட்டம், நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் அவர்கள் சுங்க கட்டணத்தில் கணிசமான தொகையைச் சேமிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?