இந்திய கிரிக்கெட்டின் 'கிங்' ஆக வலம் வந்தவர் விராட் கோலி என்றால், அவரின் அடிகளைப் பின்பற்றி பேட்டிங்கிலும், கேப்டன்சியிலும் சிறப்பாக செயல்பட்டுவரும் சுப்மன் கில் இந்திய கிரிக்கெட்டின் 'இளவரசர்'தான் என்பதில் சந்தேகமில்லை.
கிரிக்கெட்டின் வர்ணனையாளர்களுமே சுப்மன் கில்லை 'இந்திய கிரிக்கெட்டின் இளவரசர்' என்று வர்ணித்து புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் சுப்மன் கில் எட்ஜ்பாஸ்டனில் பெற்றுக் கொடுத்த சரித்திர வெற்றிதான்.
வரலாற்றில் ராஜாக்கள் பெற்ற வெற்றிகளைவிட இளவரசர்கள் பெற்ற வெற்றிதான் சரித்திரமாக மாறியுள்ளது.
ஏனென்றால், சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் இவர்கள் மூவரும் இல்லாத அணியாக இருந்து இந்திய அணி அந்நிய மண்ணில் பெறும் மாபெரும் வெற்றியாகும்.
ஜாம்பவான்கள் பாராட்டு ஏன்?இந்திய அணியின் இந்த வெற்றியை ஜாம்பவான்கள் சச்சின், கங்குலி, விவிஎஸ் லட்சுமண், சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், ஷிகர் தவண் என பலரும் புகழ்ந்து பாராட்டியுள்ளனர்.
ஏனென்றால், பிரிமிங்ஹாம் நகரில் இதுவரை நூற்றாண்டுகளில் இந்தியா பங்கேற்ற 8 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியைக் கூட இந்திய ஜாம்பவான்களால் வெல்ல முடியவில்லை, அதிகபட்சமாக ஒரு டிரா மட்டுமே செய்திருந்தனர். எட்ஜ்பாஸ்டனில் வெல்ல வேண்டும் என்ற முன்னாள் ஜாம்பவான்களின் கனவை இப்போது நனவாக்கியுள்ளது கில் கேப்டன்சி.
இதற்கு முன் ஜாம்பவான்கள் கவாஸ்கர், கபில்தேவ், அசாருதீன், கங்குலி, தோனி, கோலி என பலர் கேப்டன்சியில் இங்கு இந்திய அணி விளையாடியபோதும் ஒரு போட்டியில்கூட வெல்ல முடியவில்லை. ஆனால், இங்கு இளம் இந்திய வீரர்களுடன் களமிறங்கிய சுப்மன் கில் புதிய சரித்திரத்தை எழுதியுள்ளார்.
அது மட்டுமல்ல, சுப்மன் கில் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற இரண்டாவது போட்டியிலேயே அந்நிய மண்ணில் சொந்த அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இங்கிலாந்து மண்ணில் முதல் டெஸ்டை தோற்ற இந்திய அணி அடுத்த போட்டியி்ல் வென்று தொடரை சமன் செய்தது இதுதான் முதல்முறை.
இதற்கு முன் 13 டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்தில் விளையாடிய இந்திய அணி முதல் டெஸ்டில் தோற்றுள்ளது, 6 டெஸ்ட் தொடர்களில் 2வது போட்டியில் தோற்றுள்ளது. அதன்பின்புதான் வெற்றி பெற்று 7 டெஸ்ட் தொடர்களை சமன் செய்திருக்கிறது. முதல் டெஸ்டில் தோற்று, 2வது டெஸ்டில் வென்று இந்திய அணி பதிலடி கொடுப்பது இதுதான் முதல்முறையாகும்.
அது மட்டுமல்ல, இந்திய அணி வெளிநாடுகளில் அதிகபட்ச ரன்களில் பெற்ற வெற்றியும் இதுவாகும். இதற்கு முன் 2019ல் நார்த்சவுண்டில் நடந்த டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸை 319 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே அதிகபட்சமாக இருந்தது. ஆனால், இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் வைத்து 336 ரன்களில் தோற்கடித்தது இப்போது அதைவிட அதிகபட்சமாக மாறிவிட்டது.
இந்திய அணி இந்த டெஸ்டில்தான் முதல்முறையாக ஒரு டெஸ்டில் 1,000 ரன்களுக்கு மேல் குவித்தது. இரு டெஸ்ட்களில் மட்டும் இந்திய அணி 1,849 ரன்களை சேர்த்து ஒரு டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளில் வேறு எந்த அணியும் சேர்க்காத ஸ்கோரை இந்திய அணி பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது.
இந்திய அணி இரு டெஸ்ட் போட்டிகளிலும் மாபெரும் ரன் குவிப்புக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருந்தவர் கேப்டன் சுப்மன் கில். முதல் போட்டியில் சதம், 2வது டெஸ்டில் 269, 158 என 430 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். இந்திய அணி மாபெரும் ரன் வித்தியாசத்தில் வெல்வதற்கு கூட சுப்மன் கில்லின் ரன் குவிப்பு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது.
இந்திய டெஸ்ட் அணியில் சுப்மன் கில் அறிமுகமானதில் இருந்தே அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். 2020 டிசம்பர் 26 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 2வது டெஸ்டில் கில் அறிமுகமாகி குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்து அந்த போட்டியை வெல்ல காரணமாக இருந்தார். காபாவில் நடந்த கடைசி டெஸ்டில் இந்திய அணிக்கு 91 ரன்கள் சேர்த்து டெஸ்ட் தொடரை வெல்ல கில் முக்கியக் காரணமாக இருந்தார். 2023ல் பார்டர்-கவாஸ்கர் கோப்பையிலும் கில் அடித்த சதம், கோப்பையை இந்திய அணி 2வது முறையாக வெல்லவும் காரணமாக இருந்தது. ஒரு சாதாரண பேட்டராக கில் தனது பங்களிப்பை அதிகபட்சமாகவே அணிக்காக வழங்கியிருந்தார்.
சுப்மன் கில் இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்பதற்கு முன் இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்தது. நியூசிலாந்தில் உள்நாட்டில் நடந்த டெஸ்ட் தொடரில் படுமோசமாகத் தோற்று, ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்து தோல்விகளை சுமந்திருந்தது.
இந்த சூழலில்தான் ரோஹித் சர்மா, கோலி, அஸ்வின் ஆகிய ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். மிகவும் நெருக்கடியான கட்டம், இந்திய அணி தலைமுறை மாற்றத்துக்கான நேரத்தில் கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழிநடத்துவது எளிதான பணி அல்ல. ஆனால், அதை செய்வதற்கு சரியான நபராக சுப்மன் கில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு முன் 2024ல் ஜிம்பாப்வே சென்ற இந்திய அணிக்கு முதல்முறையாக கேப்டனாக கில் நியமிக்கப்பட்டிருந்தார், அதில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்த ஒரு அனுபவம் மட்டுமே சுப்மன் கில்லுக்கு இருந்தது. ஆனால் சுப்மன் கில்லுக்கு இருக்கும் பொறுமை, நிர்வாகத்திறன், வீரர்களை வழிநடத்தும் திறமை ஆகியவற்றின் மீது நம்பிக்கை இருப்பதாகக் கூறி பிசிசிஐ கேப்டன் பொறுப்பை வழங்கியது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு கேப்டனாக கில்லை நியமித்து இந்திய அணியை வழியனுப்பி வைத்தது பிசிசிஐ. தன் மீதான நம்பிக்கையை சிறிது கூட பிசகாமல் கில் முதல் போட்டியில் கேப்டனாகவும், பேட்டராகவும் நிரூபித்தார். முதல் போட்டியிலேயே இந்திய அணி வெல்ல வேண்டிய நிலையில் விக்கெட் வீழ்த்த முடியாத காரணத்தால் வெற்றி வாய்ப்பை இழந்தது.
ஆனால், 2வது டெஸ்டில் கில்லின் அற்புதமான பேட்டிங்கால் கிடைத்த 430 ரன்கள், பந்துவீச்சாளர்களை சரியாகப் பயன்படுத்தியது, குறிப்பாக புதிய பந்தில் சிராஜ், ஆகாஷ் தீப்பை பயன்படுத்திய விதம் வரலாற்று வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.
கேப்டனாக கில் பொறுப்பேற்பதற்கு முன் சுப்மன் கில் டெஸ்ட் போட்டியில் 32 டெஸ்ட் போட்டியில் 5 சதங்கள் அடித்து 36 ரன்கள் சராசரி வைத்திருந்தார். ஆனால், கேப்டனாக பொறுப்பேற்ற பின் சுப்மன் கில் 4 இன்னிங்ஸ்களில் தொடர்ந்து 3 சதங்களை அடித்து 585 ரன்கள் சேர்த்து தனது டெஸ்ட் சராசரியை 36-லிருந்து 42 ஆக உயர்த்தியுள்ளார். இரு டெஸ்ட் போட்டியிலேயே தனது பேட்டிங் சராசரியாக இவ்வளவு வேகமாக எந்த கேப்டனும் உயர்த்தியதில்லை.
குறிப்பாக, கேப்டனாக பொறுப்பேற்பதற்கு முன் கில் வேகப்பந்துவீச்சை அணுகும் அவரின் பேட்டிங்கில் இருந்த நுணுக்கங்களைவிட, இங்கிலாந்து தொடரில் பல புதிய ஷாட்களை ஆடி தனது பேட்டிங்கை மெருகேற்றியுள்ளார். குறிப்பாக, வேகப்பந்துவீச்சில் ஃபுல் ஷாட்கள் ஆடுவது, கட் ஷாட்களை ஆடுவதில் நேர்த்தியை கையாண்டுள்ளார்.
குறிப்பாக, கில் களத்தில் இருந்தபோது இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் டீப் ஸ்குயர் லெக், லாங் லெக்திசை, டீப் பேக்வார்ட் பாயின்ட் திசையில் பீல்டர்களை தவறாமல் நிறுத்தியிருந்தார். உண்மையில் இப்படிப்பட்ட இடங்களில், திசைகளில் இதற்கு முன் கில் பெரும்பாலும் ஷாட்களை ஆடியது இல்லை, இந்த இடங்கள் அவரின் வழக்கமான ஷாட்கள் ஆடும் பகுதியும் அல்ல. ஆனால், இந்தத் தொடரில் கில்லின் பேட்டிங்கில் புதுவிதமான நுட்பங்கள், நுணுக்கங்கள் வெளிப்படுகின்றன.
அது மட்டுமல்ல, கேப்டனாக பொறுப்பேற்று இரு போட்டிகளில் 585 ரன்களை எடுத்ததன் மூலம் கோலியின் சாதனையையும் கில் முறியடித்தார். கோலி கேப்டனாக பொறுப்பேற்று முதல் இரு போட்டிகளில் 449 ரன்கள்தான் சேர்த்திருந்தார்.
கேப்டனாக வந்தபின் கில் 2வது டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த 3வது இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன் சுனில் கவாஸ்கர் (107,182), விராட் கோலி (115,141) மட்டுமே அந்த பெருமையை பெற்றிருந்த நிலையில் சுப்மன் கில் அந்த பெருமைக்கு சொந்தக்காரராக மாறினார்.
சில வீரர்கள் கேப்டன் பொறுப்பை ஏற்பதற்கு முன் பேட்டராக சிறப்பாக செயல்பட்டிருப்பார்கள், ஆனால், கேப்டன் பொறுப்பேற்றபின் தங்களின் வழக்கமான பேட்டிங் திறமை என்பது சுமையாக மாறி கேப்டன்சி மீது மட்டுமே கவனம் திரும்பும். சில நேரங்களில் கேப்டன்சியே சுமையாக மாறியதும் உண்டு. அந்த வகையில், பேட்டராக ஜொலித்த சச்சின், டிராவிட், சுனில் கவாஸ்கர் போன்றோர் கேப்டனாக ஜொலிக்கவில்லை, மாபெரும் வெற்றிகளைப் பெற முடியவில்லை. ஒருநாள், டி20 உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த 'கூல் கேப்டன்' தோனி கூட டெஸ்ட் அணிக்கு கேப்டனாக தொடர முடியாமல் ஆஸ்திரேலியத் தொடரில் பாதியிலேயே தனது ஓய்வை அறிவித்தார்.
ஆனால், கேப்டன்சியை ரசனையுடன் செய்து, தனது பேட்டிங் ஃபார்மும் குலையாமல் செய்தவர்களில் சமீபத்திய உதாரணம் விராட் கோலி மட்டும்தான். டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பின்புதான் கோலியின் பேட்டிங்கில் வேகம் அதிகரித்தது, ரன்கள் குவிந்தன. அதேபோன்ற உத்வேகம், ரசனையுடன் பணி செய்வது, தீர்க்கம் தற்போது சுப்மன் கில்லிடம் காணப்படுகிறது. கோலியின் அடிதொட்டு இப்போது கில்லும் வந்துள்ளார்.
சுப்மன் கில் சிறுவயதிலிருந்தே விராட் கோலியைப் பார்த்து அவரின் பேட்டிங் திறமை மீது ஈர்ப்பு கொண்டு வளர்ந்தவர் என்கிறது கிரிக்இன்ஃபோ தளம். சிறுவயதிலிருந்தே சுப்மன் கில் கிரிக்கெட் பார்க்கும்போது கோலியின் ஸ்கோர், சாதனைகளை அறிந்துகொள்வதிலும் அவர் போன்று சாதிக்க வேண்டும் என்ற தீரா காதலுடன் இருந்துள்ளார்.
2019-20ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் தொடருக்காக அந்நாட்டுக்கு இந்திய அணி பயணம் செய்திருந்தபோது அதில் சுப்மன் கில்லும் இடம்பெற்றிருந்தார். அப்போது அங்கு வலைப்பயிற்சியில் கில்லின் பேட்டிங் திறமையைப் பார்த்த விராட் கோலி, கில்லின் வயதில் தான் இருக்கும்போது அவரின் பேட்டிங் திறமையில் 10% கூட இருக்கவில்லை என்று பெருமையாகக் குறிப்பிட்டுள்ளதாக கிரிக்இன்ஃபோ தளம் தெரிவித்துள்ளது.
விராட் கோலி போலவே கில்லும் ஏறக்குறைய 25 வயதில் கேப்டன் பொறுப்பேற்றுள்ளார். தோனிக்குப்பின் முழுநேரக் கேப்டனாக கோலி கேப்டனாக வந்தபோது உலகக் கிரிக்கெட் உற்றுநோக்கிய மாதிரிதான் இப்போது கில்லையும் கவனித்தார்கள். ஆனால், கோலியின் அடிகளை பின்பற்றுகிறேன் என்பது யாருக்கும் வெளிப்படையாகத் தெரியாதவாறு முதல் போட்டியில் அவர் அடித்த அதே சதத்தைப் போன்று கில்லும் சதம் அடித்தார். அது மட்டுமல்ல கோலி இங்கிலாந்தில் பதிவு செய்த அதிகபட்ச சதங்களையும் முறியடித்து, அதிகபட்ச ஸ்கோரையும் சேர்தது குருவை மிஞ்சிய சிஷ்யன் என்பதையும் கில் நிரூபித்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் கண்ட்ரோல் ரேட் எனப்படும் தவறான ஷாட்களை ஆடுவதை தவிர்ப்பதிலும் கில் கோலியைவிட விஞ்சினார். கோலியின் அடிகளை பின்பற்றி கேப்டன் பொறுப்பேற்றுள்ள கில், அவரை விடவும் ஒருபடி மேலாகவே தொடக்கத்திலேயே விஞ்சி நிற்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு