காலையில் எழுந்ததும் முதலில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன? ஆயுர்வேத மருத்துவர்கள் அறிவுரை
Tv9 Tamil July 08, 2025 04:48 AM

நாம் காலையில் எழுந்ததும் செய்யும் செயல்கள் தான் நமது நாளை தீர்மானிக்கிறது. குறிப்பாக வெறும் வயிற்றில் எழுந்தவுடன் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது உங்கள் செரிமானம், வளர்சிதை மாற்றம், தோல் மற்றும் மன நிலை எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கிறது. ஆயுர்வேத மருத்துவர்கள் காலை உணவின் முதல் உணவு எளிமையானதாகவும் அதே நேரம் சத்தானதாகவும், இருக்க வேண்டும் என  வலியுறுத்துகின்றனர். காலையில் வெறும் வயிற்றில் சில உணவுகளை எடுத்துக்கொள்வது நமது உடல் நிலையை மேம்படுத்தும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.  அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

டெல்லி அரசின் ஆயுர்வேதத் துறையின் தலைமை மருத்துவர் டாக்டர் ஆர்.பி. பராஷர் கூறுகையில், ஆயுர்வேதத்தின்படி, காலை நேரம் என்பது வாத மற்றும் கப தோஷங்களின் சமநிலை நேரம். காலையில் எழுந்தவுடன், உங்கள் உடல் குளிர்ச்சியாகவும், சோம்பலாகவும், மெதுவாகவும் இருக்கும். இந்த நேரத்தில் எளிதில் செரிமானமாகக் கூடிய மற்றும் குடல்களை சுத்தம் செய்ய உதவும் உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டும்.

வெதுவெதுப்பான நீர்

ஆயுர்வேதத்தில், ஒரு நாளை ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் தொடங்க அறிவுறுத்தப்படுகிறது.  கூடுதலாக அதில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தேன் கலந்து குடிப்பது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை செயல்படுத்துவதோடு மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

ஊறவைத்த திரிபலா அல்லது சீரக நீர்

இரவு முழுவதும் ஊறவைத்த திரிபலா பொடியையோ அல்லது காலையில் சீரகத்தையோ குடிப்பது உடலை நச்சு நீக்க உதவுகிறது. இது கல்லீரலை சுத்தப்படுத்துவதோடு, வாயு மற்றும் அமிலத்தன்மையிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

ஊறவைத்த பாதாம் மற்றும் உலர் திராட்சை:

ஆயுர்வேதத்தில் இரவு முழுவதும் ஊறவைத்த 4 முதல் 5 பாதாம் பருப்புகளையும், சிறிது உலர் திராட்சையையும் சாப்பிடுவது மிகவும் சத்தானதாகக் கருதப்படுகிறது. பாதாம் மூளைக்கு நன்மை பயக்கும், திராட்சை உடலில் இரும்புச்சத்து மற்றும் ஆற்றல் அளவை அதிகரிக்கும்.

ஊறவைத்த சியா விதை நீர் அல்லது வெந்தய நீர்:

சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை வயிற்றை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன. வெந்தய நீர் செரிமானத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது, மேலும் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.

 பழங்கள்

சில ஊட்டச்சத்து நிபுணர்கள் காலையில் வெறும் வயிற்றில்  பப்பாளி, ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங்கள் அல்லது உலர் பழங்களை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இது உடலுக்கு இயற்கையான சர்க்கரை, நார்ச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை வழங்குகிறது, இது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடாதீர்கள்
  • வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது அமிலத்தன்மை மற்றும் வாயு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது பசியை அடக்கி, செரிமான அமைப்பையும் பாதிக்கிறது.
  • கஅதிகாலையில் குளிர்ந்த பொருட்களை உட்கொள்வது செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் உடலின் இயற்கையான வெப்பத்தை பாதிக்கிறது.
  • வெறும் வயிற்றில் கனமான உணவை உண்பது செரிமான அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி உங்களை சோர்வடையச் செய்கிறது.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.