சுவரேறி குதித்து சாலையில் பாய்ந்த வளர்ப்பு சிங்கம் - தாக்குதலில் 3 பேர் காயம்
BBC Tamil July 08, 2025 03:48 AM
Getty Images சித்தரிப்புப்படம்

பாகிஸ்தானில் ஒரு பெண்ணையும் அவரது மூன்று குழந்தைகளையும் தாக்கி விட்டு, செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட சிங்கம் தப்பியோடியது. அதனையடுத்து அந்த சிங்கத்தின் உரிமையாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில், ஒரு சிங்கம் கான்கிரீட் சுவரைத் தாண்டி ஒரு பெண்ணைத் துரத்தியதையும், அங்கிருந்தவர்கள் பயந்து, பாதுகாப்புக்காக ஓடியதையும் சிசிடிவி காட்சிகள் காட்டின.

அந்த சிங்கம் தாக்கியதில், அந்தப் பெண்ணுக்கும், ஐந்து மற்றும் ஏழு வயதுடைய அவரது குழந்தைகளுக்கும், கைகளிலும் முகங்களிலும் காயம் ஏற்பட்டது.

ஆனால் இப்போது அவர்கள் நன்றாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து, உரிமம் இல்லாமல் ஒரு காட்டு விலங்கை வைத்திருந்ததாகவும், அது தப்பிச் செல்ல வழிவகுத்ததாகவும், சிங்கத்தின் உரிமையாளர்கள் மீது காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போது அந்த சிங்கம் பிடிக்கப்பட்டு ஒரு வனவிலங்கு பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

  • குழந்தையின் உயிரை காத்த புதிய மருந்து புற்றுநோயை குணப்படுத்துமா?
  • உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே உள்ள இந்த ரத்த வகையின் சிறப்பு என்ன?
  • மெக்னீசியம் சத்து நம் உடலுக்கு எவ்வளவு முக்கியம்? எந்தெந்த உணவுகளில் அது இருக்கிறது?

பாகிஸ்தானில் காட்டு விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது அந்தஸ்தின் சின்னமாகக் கருதப்படுகிறது.

அங்கு சிங்கங்கள், சிறுத்தைகள், புலிகள், பூமாக்கள் மற்றும் ஜாகுவார்களை பதிவு செய்து, ஒரு விலங்குக்கு 50,000 ரூபாய் (176டாலர்; 129யூரோ) என்ற கட்டணத்தை செலுத்திய பிறகு, அவற்றை வைத்திருப்பது சட்டப்பூர்வமாக கருதப்படுகிறது.

ஆனால், அத்தகைய விலங்குகளை நகரத்தின் எல்லைக்கு வெளியே தான் வைத்திருக்க வேண்டும்.

பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள லாகூர், பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரம்.

புதன்கிழமையன்று தனது குடும்பத்தின் மீது சிங்கம் நகத்தால் தாக்கியபோது, அதன் உரிமையாளர்கள் அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்ததாகவும், அதைக் கட்டுப்படுத்த அவர்கள் எதுவும் செய்யவில்லை என்றும் சிங்கத்தால் தாக்கப்பட்ட குழந்தைகளின் தந்தை கூறினார்.

பிறகு அந்தப் பெண் எழுந்து, அங்கு இருந்தவர்களிடம் உதவி கேட்க ஓடுவதை வீடியோ சுட்டிக்காட்டுகிறது. அவர்களில் சிலர் பீதியில் ஓடுவதையும் காண முடிந்தது.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, பஞ்சாபில் அதிகாரிகள் சட்டவிரோதமாக வனவிலங்குகளை வைத்திருப்பதைத் தடுக்க, கடுமையான நடவடிக்கையைத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் ஐந்து பேரைக் கைது செய்து, 13 சிங்கங்களை மீட்டுள்ளனர்.

முன்னதாக, ஜனவரி மாதம், பாகிஸ்தானிய யூடியூப் பிரபலம் ஒருவர், சட்டவிரோதமாக சிங்கக் குட்டியை வைத்திருந்ததற்கான தண்டனையாக, விலங்குகளின் நலனைக் குறிக்கும் வீடியோக்களை உருவாக்க அவருக்கு உத்தரவிடப்பட்டது.

யூடியூபில் 5.6 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களைக் கொண்ட ரஜப் பட்டுக்கு, திருமணப் பரிசாக அந்தக் குட்டி வழங்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.