ஹாலிவுட்டில் ’அனடாசியா’ என்ற ஒரு திரைப்படம் 1956 ஆம் ஆண்டு வெளியானது. ரஷ்ய மன்னரும் அவரது குடும்பமும் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்ட நிலையில், இளவரசி மட்டும் உயிரோடு இருப்பதாக நம்பப்படுகிறது. அவரது பெயரை பயன்படுத்தி ஒருவன் சொத்துக்களை அபகரிக்க முயன்றபோது, காணாமல் போனதாக சொல்லப்படும் இளவரசியை அழைத்து வர வேண்டிய நிர்ப்பந்தம் வருகிறது. எனவே, இளவரசி போன்ற தோற்றம் கொண்ட ஒரு பெண்ணை மன்னர் குலத்தைச் சேர்ந்தவர் போல நடிக்க வைக்கிறான். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில், இளவரசி போல நடிக்கக் கொண்டு வந்த பெண்தான் உண்மையான இளவரசி என்பதும் தெரிய வருகிறது. அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் அசல் படத்தின் கதை.
இந்த ’அனடாசியா’ படம் 1956 ஆம் ஆண்டு வெளியான நிலையில், 26 வருடங்கள் கழித்து 1983 ஆம் ஆண்டு தமிழில் ‘அடுத்த வாரிசு’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. கிட்டத்தட்ட அதே கதையை, தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களுடன் எடுக்கப்பட்டது. மன்னர் வாரிசு என்பதற்கு பதிலாக ஜமின் வாரிசு என்று மாற்றப்பட்டது. இந்தப் படத்தில், ஸ்ரீதேவி இளவரசியாக நடித்தார். அவரை இளவரசி போல நடிக்க வைக்கும் நபராக ரஜினிகாந்த் நடித்தார். ஜெய்சங்கர் மற்றும் செந்தாமரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ராஜ்லட்சுமி ஜமீன்தாரினியாக நடிக்க, சோ, சில்க் ஸ்மிதா ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்தனர்.
பஞ்சு அருணாச்சலத்தின் திரைக்கதை, எஸ்.பி.முத்துராமனின் இயக்கம், இளையராஜாவின் இசை ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்தன. ரஜினிகாந்த்-ஸ்ரீதேவி என்ற பல வெற்றி படங்களை கொடுத்த ராசியான ஜோடி இந்த படத்தில் நடித்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இளையராஜாவின் இசையில் “பேசக்கூடாது’ ’வா ராஜா வந்து பார் ’வாழ்க ராஜா வாழ்க ராணி”, “ஆசை நூறு வகை” உட்பட ஆறு பாடல்கள் இடம்பெற்றிருந்தன என்பதும், அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த படத்தில் உள்ள ஜமீன்தார், திவான், இளவரசி போன்ற கதை அம்சம், அப்போது சமூகப் படங்கள் அதிகம் வந்து கொண்டிருந்த நேரத்தில் வந்ததால், ரசிகர்கள் மத்தியில் பெரிதாக ஒன்றவில்லை. எனவே, இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வசூலிலும் இந்த படம் அடி வாங்கியது.
இந்த படத்தை துவாரகிஷ் சித்ரா என்ற நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்தது என்பதும், ஜமீன் போன்ற அரண்மனை பிரமாண்டமான செட்டுகள் காரணமாக படத்தின் பட்ஜெட் எகிறியது என்பதும் குறிப்பிடத்தக்கது. சில்க் ஸ்மிதாவின் நடனமும் இந்த படத்தில் இடம்பெற்றபோதிலும், படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்பது படக்குழுவினருக்கு ஒரு பெரிய ஏமாற்றமாக இருந்தது.
இந்த படம் 1983-ல் தமிழில் உருவானாலும், அதற்கு முன்பே 1972-ல் இதே கதை ஹிந்தியில் தர்மேந்திரா, ஹேமாமாலினி நடித்த ‘ராஜா ஜானி’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. அந்த படமும் பாலிவுட்டில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.