கேரளாவைச் சேர்ந்த வர்க்கீஸ் மற்றும் ஷைனி டாமி என்ற தம்பதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 2000ம் ஆண்டு முதல் சிட்பண்ட் நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். அதிக வட்டி கொடுப்பதாகக் கூறி 400க்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்றுள்ளனர்.
வாங்கிய பணத்திற்கு வட்டியோ, அசலோ கொடுக்காமல், ரூ.100 கோடி வரை மோசடி செய்துள்ளனர். இருவரும் பணத்துடன் தலைமறைவான நிலையில், பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்பிறகு சுமார் 400 பேர் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட வர்க்கீஸூம், ஷைனி டாமியும் கென்யாவுக்கு தப்பிச் சென்று விட்டதாக கர்நாடகா போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், 'கடந்த ஜூலை 3ம் தேதி அவர்கள் குடியிருப்பை காலி செய்துள்ளனர். அவர்கள் இருவரும் கென்யாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர். ஆனால், அவர்களின் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். வர்க்கீஸ் மற்றும் ஷைனி டாமியின் மகனின் தொலைப்பேசி எண்ணை வைத்து ஆய்வு செய்ததில், அவர் ஆலப்புழாவில் இருப்பது தெரிகிறது,' என்றனர்.
அதேவேளையில், இதுபற்றி தங்களுக்கு எந்த விபரமும் தெரியது என்று கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.