எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் வன்முறை மற்றும் பாலியல் பற்றிய விவரணைகள் உள்பட சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விவரங்கள் உள்ளன.
ஆல்பர்ட் அல்ஃபோன்சோ, பால் லாங்வொர்த் ஆகியோரை யோஸ்டின் மோஸ்குவேரா கொலை செய்த சம்பவம், டார்க் வெப் எனப்படும் சட்டவிரோத செயல்களுக்கான இணையவெளியில், செயல்பட்ட தீவிர பாலியல் உள்ளடக்கங்களின் உருவாக்கம் தொடர்பான ஓர் இருண்ட உலகத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஆனால், ஆல்பர்ட் அல்ஃபோன்சோ, பால் லாங்வொர்த், யோஸ்டின் மோஸ்குவேரா ஆகிய இந்த மூன்று ஆண்களுக்கு இடையே அறிமுகம் ஏற்பட்டது எப்படி? மோஸ்குவேரா அவர்களைக் கொலை செய்தது ஏன்?
மேலே உள்ள புகைப்படம், கொலம்பியாவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில், யோஸ்டின் மோஸ்குவேரா, பால் லாங்வொர்த், ஆல்பர்ட் அல்ஃபோன்சோ ஆகிய மூன்று ஆண்கள் படகு சவாரியை அனுபவிப்பதைக் காட்டும் ஒரு செல்ஃபி. இந்தப் புகைப்படம் அவர்களைச் சிறந்த நண்பர்களாகக் காட்டுகிறது.
ஆனால் உண்மை அதற்கு மாறானது.
அதிலுள்ள அவர்களின் சிரிப்புக்குப் பின்னால், தீவிர பாலியல், ஆதிக்கம் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளை அடிப்படையாகக் கொண்ட ஆழமான உறவு இருந்தது. அவை அனைத்தும், அவர்களிடையே இருந்த அன்பு மற்றும் அக்கறை நிறைந்த நட்பின் அடிப்படையில் அமைந்திருந்தது.
இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டு நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஜூலை 8, 2024 அன்று மொஸ்குவேரா, மற்ற இருவரையும் அவர்களின் லண்டன் அடுக்குமாடிக் குடியிருப்பில் இரக்கமின்றிக் கொன்று, அவர்களின் உடல்களைப் பல துண்டுகளாக வெட்டி ஒரு சூட்கேஸில் எடுத்துக்கொண்டு, 186 கி.மீ பயணம் செய்தார்.
தன்னை பிரிஸ்டலுக்கு அழைத்துச் செல்லும் வேலைக்கு, ஒரு வேன் மற்றும் ஒரு நபரை பணியில் அமர்த்தினார். அந்த நபர், மொஸ்குவேராவை பிரிஸ்டல் நகரின் தொங்கு பாலத்திற்கு அருகில் இறக்கிவிட்டார். அங்குதான் மொஸ்குவேரா தன்னால் கொல்லப்பட்ட நபர்களின் உடல்களைத் தூக்கியெறியத் திட்டமிட்டார்.
முன்பு, ஆல்பர்ட்(62) மற்றும் பால்(71), சட்டரீதியான திருமண உறவில் இருந்தனர். பின்னர் அவர்கள் பிரிந்திருந்தாலும், அவர்கள் நெருக்கமாகவே இருந்தனர், தொடர்ந்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
போலீசாரின் கூற்றுப்படி, "அவர்களுக்குப் பெரிய குடும்பங்களோ, அதிக நண்பர்களோ இருக்கவில்லை. அவர்களே ஒருவருக்கொருவர், ஆதரவாக, பக்கபலமாக, முழு உலகமாக இருந்துள்ளனர்."
ஆல்பர்ட் ஒரு நீச்சல் பயிற்றுவிப்பாளராக இருந்தார். மேற்கு லண்டனில் உள்ள ஆக்டனில் இருக்கும் மோட் கிளப் ஜிம்மில் அவர் உயிர்காக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
பிரான்ஸில் உள்ள பிடார்ட் பகுதியில் வளர்ந்த ஆல்பர்ட், ஹோட்டல்களை நிர்வகிக்க பிரிட்டனுக்குச் சென்றார். அதற்கு முன்பு அவர் பிரான்சில் ஒரு ஹோட்டல் பள்ளியில் பயிற்சி பெற்றார்.
மேற்கு லண்டனில், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் பென்ட்ஹவுஸ்களை கொண்ட, 375 கென்சிங்டன் ஹை ஸ்ட்ரீட் எனப்படும் ஓர் ஆடம்பரக் குடியிருப்பு எஸ்டேட்டின் பொது மேலாளராக அவர் முன்பு பணியாற்றினார்.
வூல்விச் கிரவுன் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட அறிக்கையின்படி, ஆல்பர்டின் முன்னாள் சகாக்கள் அவரை "வேடிக்கையான, அதிகாரத்தன்மை கொண்ட, ஊக்கம் நிறைந்த நபர்" என்று வர்ணித்துள்ளனர்.
சமீபத்தில் ஓய்வுபெற்ற ஒரு கைவினைக் கலைஞரான பால் மற்றும் ஆல்பர்ட் இடையிலான சந்திப்பு நடந்ததும் இந்தக் கட்டடத்தில்தான்.
இருவருமே தத்தெடுப்பு முறை மூலமாக வளர்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில் அவர்களிடையே ஓர் பிணைப்பு ஏற்பட்டது. பிப்ரவரி 2023இல் அவர்கள் சட்டரீதியாகத் திருமணம் செய்துகொண்டனர். இருப்பினும், பாலின் நண்பர்கள் பிபிசிடம் பேசியபோது, அவர் "தனது பாலியல் உறவு பற்றி வெளிப்படையாக இருக்கவில்லை" என்றும் ஆல்பர்ட்டை தனது சகோதரர் என்றே குறிப்பிட்டதாகவும் கூறினர்.
அவரது நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார், "பால் மிகவும் அன்பானவர்" என்று விவரிக்கின்றனர்.
ஷெப்பர்ட்ஸ் புஷ்ஷை சேர்ந்த 74 வயதான கெவின் டோர், பாலுடன் சேர்ந்து குடித்து வந்தார். அவர்களிடையே 20 ஆண்டுகளுக்கும் மேலான நட்பு இருந்தது.
"அவர் ஒரு நல்ல, அன்பான, தாராள மனப்பான்மை கொண்ட மனிதர். எப்போதும் கண்ணியமாக நடந்துகொள்வார். குடிப்பதற்கு மது வாங்கித் தரவும், உடன் அமர்ந்து அரட்டையடிக்கவும் செய்வார்" என்று அவர் கூறினார்.
"பால் மிகவும் நட்பானவர், எளிதில் பழகக்கூடியவர். அவர் ஒருபோதும் யாரையும் காயப்படுத்தாத நல்ல மனிதர்" என்று அவருடன் மது அருந்தி வந்த ஜார்ஜ் ஹச்சின்சன் கூறினார்.
ஆல்பர்ட் தனது தனிப்பட்ட வாழ்க்கையை ரகசியமாக வைத்து இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், கொலை வழக்கின் விசாரணை அவர் பங்கெடுத்திருந்த தீவிர பாலியல் உலகை வெளிப்படுத்தியது. பாலியல் உறவுகளுக்காக அவர் அடிக்கடி பணம் செலவு செய்தது, அவற்றில் பங்கேற்று, இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்தது ஆகியவை தெரிய வந்துள்ளன.
அவை அவரது வாழ்வில் ஓர் இருண்ட பக்கமாக இருந்துள்ளது. அதில் பாலுக்கு எந்தச் சம்பந்தமும் இருக்கவில்லை. இருப்பினும் அவர் அதுகுறித்து அறிந்திருந்தார். அதை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் தோன்றியது.
மொஸ்குவேரா, கொலம்பியாவைச் சேர்ந்தவர். அவர் பல்வேறு புனைப்பெயர்களில் தீவிர பாலியல் செயல்களில் ஈடுபடும் ஏராளமான காணொளிகளை இணையத்தில் வெளியிட்டு வந்தார்.
தற்போது 35 வயதாகும் அவர் மெடலினில் வசித்து வந்தார். அவருக்கு ஐந்து சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர். அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். அவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
ஆல்பர்ட், மொஸ்குவேரா இருவரும் சுமார் 2012 முதல் ஸ்கைப் மூலம் பேசத் தொடங்கினர். 2017 வாக்கில், ஆல்பர்ட் பாலியல் வீடியோக்களை பெற மொஸ்குவேராவுக்கு பணம் கொடுக்கத் தொடங்கினார். இது காலப்போக்கில் மிகவும் தீவிரம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இறுதியாக, 2023ஆம் ஆண்டு மொஸ்குவேரா முதல் முறையாக பிரிட்டன் சென்றபோது, அவர்கள் நேரில் சந்தித்தனர். ஆனால், ஆல்பர்ட் அவர்களின் பாலியல் உறவைத் தவறாக மதிப்பிட்டதாகத் தெரிகிறது.
ஆல்பர்ட் பாலுறவுக்காக அதில் ஈடுபட்டதாகத் தோன்றினாலும், மறுபுறம் மொஸ்குவேரா பணத்திற்காக அதில் ஈடுபட்டார்.
ஆல்பர்ட் தனது வாழ்க்கையைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் ஓர் ஆணுடன் பகிர்ந்துகொண்டதாகவும், ஆனால், அந்த உறவு உண்மையில் ஒரு பணப் பரிமாற்ற அடிப்படையிலானதாக மட்டுமே அமைந்து இருந்ததாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
செப்டம்பர் 2, 2022 முதல் ஜூலை 12, 2024 வரையிலான காலகட்டத்தில், தீவிரமான ஆபாசப் படங்களை வெளியிடும் ஒரு இணையதளத்தை இயக்கும் நிறுவனத்திடம் இருந்து ஆல்பர்ட் 17,500 யூரோவுக்கும் மேலாகப் பணம் பெற்றதை, அவரது வங்கிப் பரிவர்த்தனைகள் காட்டுகின்றன.
கடந்த மே 2022 முதல் பிப்ரவரி 2024 வரையிலான காலகட்டத்தில், ஆல்பர்ட் மொஸ்குவேராவுக்கு 72 கொடுப்பனவுகளில் மொத்தமாக 7,735 அமெரிக்க டாலர்களைச் செலுத்தியுள்ளார். மேலும், ஜனவரி 2024 முதல் ஜூன் 19, 2024 வரை, ஆல்பர்ட் சர்வதேச பணப் பரிமாற்ற சேவைகளை வழங்கும் மணிகிராம் வாயிலாக 928 யூரோவை அனுப்பியுள்ளார்.
அதற்கு ஈடாக, மொஸ்குவேரா புனைப்பெயர்களைப் பயன்படுத்தி, நான்கு ஆபாச இணையதளங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்களைப் பதிவேற்றினார். வாடிக்கையாளர்கள் பாலியல் நிகழ்ச்சிகளை நடத்துமாறு கேட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அவர் ஜூன் 30, 2022 மற்றும் ஜூன் 12, 2024க்கு இடைப்பட்ட காலத்தில் 2,682.90 டாலர்கள் சம்பாதித்தார்.
மொஸ்குவேரா, தனது புகைப்படங்களை ஆல்பர்ட் ஆன்லைனில் பதிவேற்றவும், அதன்மூலம் கிடைக்கும் லாபத்தை வைத்துக்கொள்ளவும் 2023ஆம் ஆண்டு ஒப்புதல் படிவத்தில் கையெடுத்து இட்டதாக ஒப்புக்கொண்டார். இருப்பினும், ஆல்பர்ட்டை கொல்வதற்குச் சில நாட்களுக்கு முன்பு வரை, தனது வீடியோக்களை அவர் இணையத்தில் பகிர்ந்தார் என்பது தனக்குத் தெரியாது என்று மொஸ்குவேரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அக்டோபர் 2023இல், மொஸ்குவேரா பிரிட்டனுக்குச் சென்று ஆல்பர்ட்டின் வீட்டில் தங்கினார். ஆல்பர்ட் தன்னை "தினமும்" பாலியல் வல்லுறவு செய்ததாகவும், தான் பணம் வாங்கிக்கொண்டு தீவிர பாலியல் செயல்களைச் செய்வதிருந்தாலும் அவற்றில் எந்த இன்பத்தையும் பெறவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மொஸ்குவேராவை பிரிட்டனில் சந்திக்க, தனது லண்டன் வீட்டில் தங்க, ஆல்பர்ட் அக்டோபர் 2023இல் பணம் செலுத்தினார். அவர் தங்கியிருந்த காலத்தில், மொஸ்குவேரா மேடம் துசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்திற்குச் சென்றார், திறந்தவெளிப் பேருந்தில் பயணித்தார், தேம்ஸ் நதியில் படகுப் பயணம் மேற்கொண்டார்.
பின்னர் மார்ச் 2024இல், ஆல்பர்ட் பாலை கொலம்பியாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் கார்டஹெங்காவில் தங்கினார்கள். அதோடு, அவர்களைச் சந்திக்க ஆல்பர்ட் மொஸ்குவேராவுக்கு பணம் கொடுத்தார்.
பாலுடன் மது அருந்தும் நண்பர்களில் ஒருவரான கெவின் டோர், பிபிசிடயிம் பேசியபோது, அந்த நாட்டிற்குப் பயணிப்பது குறித்துத் தான் அவரை எச்சரித்ததாகத் தெரிவித்தார். "அது ஆபத்தான இடம், அங்கு அதிகம் உலவ வேண்டாம்," என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.
அந்த ஆண்டு மே மாதம் மொஸ்குவேரா ஆல்பர்ட்டுக்காக மற்றுமொரு தீவிரமான ஆபாச வீடியோவை உருவாக்கினார். அடுத்த சில வாரங்களுக்குள், மீண்டும் ஆல்பர்ட்டின் செலவில், அவர் பிரிட்டனுக்கு திரும்பி வந்து, அந்தத் தம்பதியுடன் தங்கினார்.
இந்த முறை ஆல்பர்ட் மொஸ்குவேராவுக்கு, தனது ஜிம்மில் விருந்தினர் உறுப்பினராகப் பதிவு செய்து கொடுத்தார். அவரது பணியிடத்தின் ஐந்து பேர் கொண்ட கால்பந்து அணியின் வாட்ஸ் ஆப் குழுவில் அவரைச் சேர வைத்தார். இவற்றோடு, நான்கு வார ஆங்கில மொழிப் பயிற்சிலும் அவரைச் சேர்த்துவிட்டார்.
ஆல்பர்ட், பால், மொஸ்குவேரா என மூன்று பேரும் ஒரு நாள் பயணமாக பிரிட்டன் சென்றனர். அங்கு படகுத்துறைக்குச் சென்றனர். அதோடு, ஜிப்-வயரில் இருப்பது போல மொஸ்குவேரா புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இருப்பினும், மொஸ்குவேரா முந்தைய நாட்களில் ஆல்பர்ட் மற்றும் பாலின் நிதிசார்ந்த தகவல்களைத் தெரிந்துகொள்ளும் முயற்சியில் இறங்கியிருந்தார். மேலும், மார்பு உறைவிப்பான் உள்ளிட்ட கொடிய விஷங்கள் மற்றும் ஆர்சனிக்கை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தார்.
பால் மற்றும் ஆல்பர்ட், ஜூலை 8ஆம் தேதி கொல்லப்பட்டனர். பால் பலமுறை சுத்தியலில் தாக்கப்பட்டதால், அவரது மண்டை ஓடு உடைந்தது. பின்னர் அவரது உடல் ஒரு படுக்கையின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு, ஆல்பர்ட் வீடு திரும்புவதற்காக மொஸ்குவேரா காத்திருந்தார்.
பின்னர், வீடியோவாக பதிவு செய்யப்பட்ட ஒரு பாலியல் நிகழ்ச்சியில் இருவரும் ஈடுபட்டிருந்தபோது, மொஸ்குவேரா ஆல்பர்ட்டை குத்திக் கொலை செய்தார். அவரைக் கொன்றுவிட்டு, அந்த அறையைச் சுற்றி மொஸ்குவேரா பாடிக்கொண்டு, நடனமாடினார்.
இருவரையும் கொலை செய்த பிறகு, அவர் கொலம்பியாவில் உள்ள தனது வங்கிக் கணக்குக்கு 4,000 யூரோ பணத்தை ஆல்பர்ட்டின் கணினி மூலமாக அனுப்பவும், பிற நிதிப் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் முயன்றார்.
இந்த முயற்சி தோல்வியடையவே, அவர் அருகிலுள்ள ஒரு பணம் எடுக்கும் இயந்திரத்திற்குச் சென்று ஆல்பர்ட்டின் வங்கிக் கணக்கில் இருந்து நூற்றுக்கணக்கான பவுண்டுகளை எடுத்தார்.
சில நாட்களுக்குப் பிறகு மொஸ்குவேரா அவர்களின் உடல்களை வெட்டினார். அவர்களுடைய தலைகளை மார்பு உறவிப்பான் பெட்டியிலும், மற்ற உடல் பாகங்களை சூட்கேஸ்களிலும் எடுத்துக்கொண்டு, பிரிஸ்டலுக்கு சென்றார்.
ஆல்பர்ட், பால் எதிர்பாராத வகையில், கொடூரமாகக் கொல்லப்பட்டது அவர்கள் வாழ்ந்து வந்த சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவர்கள் கொலை செய்யப்பட்ட விதம், தனது இதயத்தை நொறுக்கியதாக பாலின் நண்பர் டோர் கூறினார்.
வூல்விச் கிரவும் நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு மொஸ்குவேரா இரட்டைக் கொலைகளைச் செய்த குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவருக்கு அக்டோபர் 24ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.
கூடுதல் தகவல்கள்: ஃபியோனா லாம்டின், ஆடம் கிரோதர், பெத் குரூஸ்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு