''நல்லா படித்த அவர் டாக்டர்: சரியாக படிக்காத நான் துணை முதல்வர்'': உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!
Seithipunal Tamil July 29, 2025 09:48 AM

2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த செவிலியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கி வைத்து பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது: இந்த விழாவில் பங்கேற்று உங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி. முதலில் கவுன்சிலின் தலைவர் மருத்துவர் ராஜமூர்த்திக்கு என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த கவுன்சிலை பொறுத்த வரை அவர் உங்களுக்கு தலைவராக இருக்கிறார். பலருக்கு தெரியும். ஆனால் சில பேருக்கு தெரியாது. எனக்கு அவர் சொந்த தாய் மாமா. என்னை தூக்கி வளர்த்தவர். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கோபாலபுரம் வீட்டில் நானும் அவரும் ரூம் மேட்ஸ். இருவரும் சேர்ந்து ஒன்றாகத்தான் படித்தோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது: அவர் நல்லா படித்து டாக்டர் ஆகிவிட்டார் என்றும், சரியாக படிக்காமல் நான் துணை முதல்வர் ஆகிவிட்டேன். இந்த நிலைமைக்கு நான் இங்கே நிற்பதற்கு ராஜமூர்த்தி தான் காரணம் என்றும் கூறினார். அத்துடன், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அழைத்ததற்கு தாய் மாமா ராஜமூர்த்திக்கும் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.

விருது விழா குறித்து அவர் குறிப்பிடுகையில், இங்கு வந்துள்ள ஒவ்வொரு செவிலியரின் முகத்தை பார்க்கும்போதும் மிகப்பெரிய அளவில் தன்னம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வு ஏற்படுகிறது எட்ன்றும் தெரிவித்தார். அதாவது, உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் முகத்தை பார்ப்பதற்கு முன்பே செவிலியர்கள் முகத்தைத்தான் பார்க்கிறார்கள் என்றும், அப்படிப்பட்ட உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைகிறேன் என்று துணை முதல்வர் உதயநிதி மேலும் பேசினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.